Wednesday, January 17, 2018

அரசியலில் நடிகர்கள்!

By என். முருகன் | Published on : 17th January 2018 01:21 AM |

 ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபின் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும், மற்ற சில நாடுகளிலும் தமிழக அரசியல் குறித்த விவாதங்கள் உருவாகியுள்ளன. நமது மாநில இளைஞர்கள், ரஜினி மன்றத்தின் உறுப்பினர்களான அவரது ரசிகர்கள் மற்றும் பல கிராமப்புற மக்கள் இதை எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ், ஜெயலலிதா போன்ற நடிகர்கள் அரசியலில் நுழைந்து வெற்றிபெற்றுப் பதவியில் இருந்ததுடன் ஒப்பிடுவதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், உலகின் 18 நாடுகளில் மொத்தம் 228 நடிகர்கள், நடிகைகள் அரசியலில் நுழைந்து எம்.பி. பதவிகளிலும், பிரதமர், அதிபர் பதவிகளிலும் இருந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆர்ஜென்டீனா-1, வங்கதேசம்-1, பிரேசில்-1, கனடா-7, ஜெர்மனி-1, இந்தியா-48, இத்தாலி-3, இஸ்ரேல்-1, மெக்ஸிகோ-2, நெதர்லாந்து-1, பாகிஸ்தான்-1, போலந்து-4, பிலிப்பின்ஸ்-33, ரஷியா-1, இலங்கை-13, தாய்லாந்து-8, பிரிட்டன்-7, அமெரிக்கா-22 என்று கலைத் துறையினர் அரசியலில் இறங்கியுள்ளனர்.
இந்தியாவில்தான் மிக அதிக அளவில் சினிமா நடிகர்கள் நேரடி அரசியலில் இறங்கியது தெரியவருகிறது. இது வரையில் 48 பேரும், ரஜினி-49-ஆவது, கமல் இறங்கினால் 50 பேர் சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சினிமா நடிகர்கள் அரசியலில் நுழைந்து பிரபலமடைவதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்த ராபர்ட் தாம்ப்சன் எனும் பேராசிரியர், 24 மணி நேர தொலைக்காட்சிகளில் தோன்றி பார்வையாளர்களைக் கவரும் வகையில் பேசி வரும் ஓர் அரசியல்வாதியும், சினிமா, நாடகங்களில் தோன்றி மக்களைக் கவரும் நடிகரும் ஒரே மாதிரியானவர்களே” எனக் கூறியுள்ளார். அமெரிக்காவின் சைரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள இந்தப் பேராசிரியர் மேலும் கூறுவது கவனிக்கத்தக்கது.

சினிமா நடிகர்கள் தங்கள் அரசியலைத் துவங்கும்போதே இவர்களுக்கு எதிரான அரசியல்வாதிகளை விடவும் சிறப்பான வகையில் அரசியல் களத்தில் உதிக்கும் நிலைமையில் இருப்பார்கள் எனக் கூறுகிறார் இவர். நிறைய பணத்தையும், நேரத்தையும் செலவு செய்து அரசியலில் வளர்ந்து நிற்கும் பல தலைவர்களையும் மக்கள் மன்றத்தில் எளிதாக இந்த நடிகர்கள் ஓரந்தள்ளிவிடுவார்களாம்.

இது போன்ற புதிய அரசியல்வாதிகளான நடிகர்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவது, வாக்காளர்களின் புத்திசாலித்தனமில்லாத நடத்தை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒப்பீட்டளவில், தேர்தலில் போட்டியிடும் பழைய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகளாகவும், நிர்வாகத் திறமையற்றவர்களாகவும் இருப்பதாக வாக்காளர்கள் கருதுவது முக்கியமான காரணங்களாகின்றன எனக் கூறுகிறார் பேராசிரியர் தாம்ப்சன்.
அரவிந்த் ராஜகோபால், அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறையில் பேராசிரியராக இருப்பவர். புகழ்பெற்ற ஜெர்மானிய சமூகவியல் ஆராய்ச்சியாளர் மேக்ஸ் வீபர். இவர்கள் இருவரும் சேர்ந்து கூறியது கவனிக்கத்தக்கது: 'நவீன சமூக வளர்ச்சியில் நிர்வாகமும் ஆட்சி முறையும் மக்களின் சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் மிக அதிக அளவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கும் கால கட்டத்தில், மிக அதிக அளவில் மக்களைக் கவர்ந்த தலைவர்கள் பொது வாழ்வில் உருவாகி அரசியல் செய்வது வரவேற்கத்தக்கது' என இவர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற தத்துவங்கள் ஒருபுறம் இருக்க, அரசியலில் புகுந்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நடிகர்களில் உலகமே போற்றும் வகையில் பணிசெய்த அமெரிக்க அதிபரும், மிக அதிக அளவில் ஊழல் செய்து மணிலாவின் சிறையில் வாடிய பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபரான ஜோசப் எஸ்ட்ராடாவும் நம்மால் கவனிக்கத்தக்கவர்கள்.

பிலிப்பின்ஸின் எஸ்ட்ராடா ஒரு நடுத்தர தாய், தந்தையருக்கு 1937-ஆம் ஆண்டில் பிறந்த 10 குழந்தைகளுள் ஒருவர். அவரது இயற்பெயர் ஜோசப் எஜர்சிட்டோ. பள்ளி மாணவனாக இருந்தபோது ஒரு சக மாணவனுடன் அடிதடி சண்டையில் ஈடுபட்டதால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின் வேறு பள்ளிகளில் சேர்ந்து படித்து, தனது கல்லூரிப் படிப்பை மேபுவா பொறியியல் கல்லூரியில் தொடர்ந்தார். அங்கேயும் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

தனது 17-ஆவது வயதில் முதன்முதலாக ஒரு திரைப் படத்தில் நடித்தார். இவரது தந்தைக்கு இவர் சினிமா நடிகராகியது பிடிக்கவில்லை. ஒரு பொறியாளராக ஆகியிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தந்தைக்குப் பிடிக்காத சினிமா துறை என்பதால் அவரது பெயரான எஜர்சிட்டோவை ஒதுக்கிவிட்டு தனது முதல் படத்தில் தனக்கு இடப்பட்ட பெயரான எஸ்ட்ராடா என்று மாற்றிக் கொண்ட இவர் ஜோசப் எஸ்ட்ராடா என அழைக்கப்பட்டார்.
130 திரைப்படங்களில் நடித்து பிரபலமான எஸ்ட்ராடா, அரசியலில் புகுந்து 1967-ஆம் ஆண்டில், தனது 30-ஆவது வயதில் சேன்ஜுயான் நகர மேயரானார். பின் பல அரசியல் மாற்றங்கள் பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்டு, ஜனநாயகம் முழுவீச்சில் 1986-இல் உருவானது. 1987-ஆம் ஆண்டில் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்ட்ராடா. இது நம் நாட்டின் எம்.பி. பதவிக்கு ஈடானது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 1992-ஆம் ஆண்டு துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். 1998-இல் நடந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபரானார் இந்த நடிகர்.
இவரது ஆட்சியின் மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள். இவருடன் சேர்த்து, இவரது குடும்பத்தினர், அடிவருடிகள், இவருடன் தொடர்புடைய பெண்கள் குறித்தும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இரவில் மதுவருந்தி பல கூட்டாளிகளுடன் சேர்ந்து அரசின் திட்டங்கள் தீட்டப்பட்டன என்றும், அவை அதிபருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் பெரும் பணத்தைப் பெற்றுத்தந்தன என்றும் தெளிவானது. 1999-ஆம் ஆண்டில் பிலிப்பின்ஸ் நாட்டின் பங்குச்சந்தையில் நடந்த ஊழலில் எஸ்ட்ராடாவின் பங்களிப்பு என்ன என்பதைத் தகுந்த சாட்சியங்களுடன் பேசிவந்த பொதுநலவாதி சால்வடார் டேசர் கொலை செய்யப்பட்டதில் அதிபருக்குப் பங்களிப்பு இருந்தது அம்பலமானது.

1987-ஆம் ஆண்டில் செனட் உறுப்பினராக இருந்தபோது இவரது சொத்து மதிப்பு, பிலிப்பின்ஸின் 23 லட்சம் பெசோ (ரூ.29 லட்சத்து 21 ஆயிரம்). 1999-ஆம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு 3 கோடியே 58 லட்சம் பெசோ (ரூ.4 கோடியே, 54 லட்சத்து 66,000) ஆக உயர்ந்து நின்றது. இவருக்கு 60 வியாபார நிறுவனங்களில் பங்குகள் இருந்தன எனவும் அவற்றில் இவருக்கான பண முதலீடு 80 கோடி பெசோக்கள் (ரூபாய் 101 கோடியே 6 லட்சம்) என்பதையும், அதை எல்லாம் தனது சொத்துப் பட்டியலில் அரசுக்கு அவர் தெரிவிக்கவில்லை எனவும் பத்திரிகையாளர்களின் புலன் விசாரணை மையம் என்ற பொதுநல அமைப்பு வெளியிட்டது. 20 வீடுகள் இவருக்கு இருந்தன.

இந்த விவரங்கள் எல்லாவற்றையும் இவரோடு இருந்த சிலரே வெளியிட்டதைத் தொடர்ந்து இவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எல்லா உண்மைகளும் பொதுவெளியில் வெளிவந்ததைத் தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு கடுமையாகிப் பெரிய போராட்டமாக மாறியது. இதனால், 2001-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி தனது அதிபர் பதவியை எஸ்ட்ராடா ராஜிநாமா செய்தார்.
இவர் கைது செய்யப்பட்டு, அடுத்த 6 ஆண்டுகள் தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொண்டார். இவர் குற்றவாளி என 2007-ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இவர் தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்து, தன் கீழ்ப்பணியாற்றிய துணை ஜனாதிபதியாக இருந்த குளோரியா அரோயோ எனும் பெண்ணை அதிபராகப் பிரகடனம் செய்து பதவியில் அமர்த்தியிருந்தார்.
அந்தப் பெண் அதிபர் 2007-ஆம் ஆண்டில் எஸ்ட்ராடாவை குற்றச் செயல்களிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். அந்த நாட்டின் சட்டப்படி இது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை!

நடிகராக இருந்து மக்களின் பேராதரவுடன் அதிபராக உருவாகி வலம் வந்த எஸ்ட்ராடாவிற்கு சோய் என்ற மனைவி மற்றும் லார்னி, கோமஸ், ஓசோரியோ, மெலெண்ட்ரஸ், மேரி ரோவேனா எனும் பிற துணைவியரும் உண்டு. தனது மனைவியுடன் ஒரு குழந்தையும், பிற துணைவியருடன் 4 குழந்தைகளும் இவருக்கு உண்டு. இந்நடைமுறைகள் அந்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.

அடுத்து, நடிகராக இருந்து, அரசியலில் புகுந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக 1967-ஆம் ஆண்டு முதல் 1975-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ரொனால்ட் ரீகன். 1981-ஆம் ஆண்டு, தனது 70-ஆவது வயதில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்றைய நிலைமையில் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. தீவிர ஆலோசனைகளைப் பெற்று, முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையான டிமாண்ட் எகானமி எனப்படும் விநியோகம் சார்ந்த பொருளாதாரக் கொள்கையைக் கையிலெடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட்டார் ரீகன். இதை உலகெங்கிலும் ரீகனாமிக்ஸ் என பாராட்டினார்கள்.

தனி வாழ்க்கையிலும் மிகச்சிறந்த ஒழுக்கமான மனிதராக இருந்தார் ரீகன். நான்ஸி டேவிஸ் என்ற நடிகையை 1952-ஆம் ஆண்டு மணந்தார் ரீகன். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இந்த திருமணத்துக்கு முன்னர் ஜேன் வையேன் எனும் நடிகையை 1940-ஆம் ஆண்டு திருமணம் செய்து, 9 ஆண்டுகள் மணவாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்தார்.

மிகவும் சிறந்த அதிபராக 8 ஆண்டுகள் பதவி வகித்த ரீகன், தனது 93 வயதில் நிமோனியா மற்றும் அல்ஷைமர்ஸ் நோயால் உயிரிழந்தார். இவர் அதிபரான பிறகு நிகழ்த்திய முதல் உரையிலேயே, 'நான் மக்களுக்கு மிகவும் அவசியமான பல வளர்ச்சித் திட்டங்களையும், அமெரிக்காவிற்கு பல சிறந்த பொருளாதாரத் திட்டங்களையும் உருவாக்க விரும்புகிறேன். நடிப்பு உலகில் இருந்த எனக்கு இவை பற்றிய நிபுணத்துவம் கிடையாது.

ஆனால், எனது நிர்வாக கட்டமைப்பில், மிகவும் சிறந்த திறமையான அதிகாரிகள் உண்டு. அவர்களால் நல்ல திட்டங்கள் உருவாக்கப்படும். அதை நிறைவேற்றத் தேவையான யோசனைகளை அவர்கள் எனக்கு வழங்குவார்கள். அதனால் வெற்றி நிச்சயம்' என அறிவித்தார். இதைக் கேட்ட எல்லோருமே இவரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

எனவே, இது போன்ற நல்ல மற்றும் கெட்ட தலைவர்களின் உதாரணங்களைக் கையிலெடுத்து புரிந்துகொண்டு நம் நாட்டிலுள்ள நடிக, நடிகையர் அரசியலுக்கு வரும்போது வெற்றியடைய வேண்டும்.

'தனி மனித குறைபாடுகளும், கெட்ட குணாதிசயங்களும் உடையவர்களால் பொது நன்மை செய்ய முடியாது' என மேதறிஞர் இங்கர்சால் கூறுவார்.
'நமது நிர்வாகத் திறமை என்பது, கல்வியால் பெரிய பட்டங்களைப் பெறுவது அல்ல. நல்ல மனிதர்கள், திறமையானவர்கள், பொது நலத்தில் அக்கறை கொண்டவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ளும் திறமையே' என ராபர்ட் கிளைவ் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் இதை நிரூபித்தார். அழியாப் புகழடைந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024