Sunday, February 11, 2018

ராஜராஜசோழனுக்கு பிள்ளை வரம் தந்த ராஜேந்திரபட்டினம் கோயிலில் கும்பாபிஷேகம்! 11ம் தேதி நீலகண்டேஸ்வரருக்கு விழா!

Published : 09 Feb 2018 16:38 IST

வி.ராம்ஜி



தேவர்களும் முனிவர்களும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியால் அவரை தவமிருந்து வணங்குவது என முடிவு செய்தனர். நேரடியாக வணங்கினால், அசுரக்கூட்டம் ஏதேனும் குறுக்கீடுகள் செய்து வழிபாட்டைக் குலைக்கும் என யோசித்தவர்கள், பறவைகளாக மாறினார்கள்; சிவனாரை வழிபட்டு வந்தார்கள்.

இங்கே எப்படி எந்த வடிவில் இருந்தாலும், எதிரிகள் தொல்லை பெருந்தொல்லைதான். பறவைகளாக இருந்தவர்களுக்கு வேடர்கள்தானே எதிரிகள். அவர்கள் பறவைகளை வேட்டையாட முனைந்தனர். அப்போது பறவைகள் அதாவது தேவர்களும் முனிவர்களும் வெள்ளெருக்கஞ் செடிகளாக மாறினார்கள். அந்த இடம் முழுவதுமே வெள்ளெருக்கம் பூக்காடாக ஆனது. அதனால்தான் இந்த ஊர், எருக்கத்தம்புலியூர் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

அதென்ன புலியூர்?

மரமேறி, மரத்தின் உச்சி வரை சென்று வில்வம் பறிக்க, ‘எனக்கு புலியின் கால்களைக் கொடு’ என்று வரமாகக் கேட்டாரே வியாக்ரபாதர். வியாக்ரம் என்றால் புலி. வியாக்ரபாதர் என்றால், புலியின் கால் கொண்டவர். ஆமாம்... புலிக்கால் முனிவர் வழிபட்ட தலங்கள், புலியூர் எனும் பெயருடன் முடியும் என்பார்கள்.

தில்லையம்பதி எனப்படும் சிதம்பரத்தில், வியாக்ரபாதருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் சிவனார் தரிசனம் தந்தது தெரியும்தானே. தென்புலியூர் எனும் சிதம்பரத்துக்கு அருகே பெரும்பற்றப் புலியூர் என்றொரு தலம் உண்டு. கடலூருக்கு அருகில் உள்ள திருப்பாதிரிப்புலியூரைம் வடபுலியூர் என்பார்கள். ஓமாப்புலியூர் தவிர, காட்டுமன்னார்குடிக்கு அருகில் உள்ள பெரும்புலியூர் என பல ஊர்கள் உள்ளன. அந்த வகையில், எருக்கத்தம்புலியூரும் வியாக்ரபாதர் தவமிருந்து வழிபட்ட திருத்தலம் என்கிறது ஸ்தல புராணம்!

இதையெல்லாம் விட இன்னொரு ஆச்சரியமும் இந்தத் தலத்துக்கு உண்டு.


நீலமலர்கண்ணி

சிவனார் விட்ட சாபத்தால், அவர் ருத்திரசன்மர் எனும் பெயருடன் பூமியில் பிறந்தார். அவர் வாய் பேசும் திறன் இல்லாதவராக இருந்தார். பூமியில் பிறப்பதும் வாய் பேச முடியாமல் இருப்பதும் சிவ சாபம்! பேச்சுத் திறன் வேண்டியும் சாபத்துக்கு விமோசனம் பெறவேண்டியும் அந்த ருத்திரசன்மர், இங்கே இந்தத் தலத்தில் சிவலிங்க பூஜை செய்து வழிபட்டார். மனமுருகி வேண்டினார். அந்த வேண்டுதலுக்குப் பலன் கிடைத்தது. சிவபெருமான் தோன்றி காட்சி தந்தார். ‘தந்தையே...’ என்று காலில் விழுந்து கலங்கினார்.

ஆமாம். தந்தைதான். உலகுக்கே பார்வதியும் சிவனாரும் அம்மையப்பன் தான். இருந்தாலும் ருத்திரசன்மர், தந்தை என்று அழைத்ததற்கு காரணம்... ருத்திரசன்மர் வேறு யாருமல்ல. சாட்ஷாத் முருகப்பெருமானேதான்! ஆக, அப்பாவால் சாபம் கொடுக்க, அப்பாவே சாப விமோசனமும் தந்தருளிய திருத்தலம் இது!

இத்தனை பெருமைகளும் சாந்நித்தியங்களும் கொண்ட இந்தத் திருத்தலத்தை திருஞானசம்பந்தர் உருகி உருகிப் பாடியுள்ளார். இங்கே உள்ள முருகனின் அழகில் கிறங்கிய அருணகிரிநாதர் , கனிந்து கசிந்து திருப்புகழ் பாடியிருக்கிறார். வடலூர் ராமலிங்கம் பிள்ளை எனும் வள்ளலார் பெருமான், தலத்துக்கு வந்து திருவருட்பா அருளியிருக்கிறார்.


உற்ஸவர்கள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் மிக விமரிசையாக எல்லோராலும் கொண்டாடப்பட்ட இந்தத் திருத்தலத்துக்கு மாமன்னன் ராஜராஜ சோழன் வந்து ‘என் சிவமே... என் சிவமே... என் சிவமே’ என்று பிரார்த்தனை செய்திருக்கிறான். சோழ சாம்ராஜ்ஜியத்தின் மகா சக்கரவர்த்திக்கு என்ன பிரார்த்தனை?

அந்த சாம்ராஜ்ஜியத்தை தனக்குப் பிறகு கட்டியாள ஓர் ஆண் வாரிசு வேண்டாமா. அப்படி அவன் ஆசைப்பட்டதில் தவறென்ன? சிவபாத சேகரன் எனப்படும் ராஜராஜ சோழன் இங்கு வந்து வணங்கி, வழிபட்டு, கோரிக்கை விடுக்க, அவனின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான், ராஜராஜ சோழனுக்கு பிள்ளை பாக்கியத்தைத் தந்தருளினார். தன் மகனுக்கு ராஜேந்திரன் எனும் பெயர் சூட்டி, இந்தத் தலத்துக்கும் ஏராளமான திருப்பணிகள் செய்தான். கூடவே, பிள்ளை வரம் தந்த தலத்துக்கு ராஜேந்திரப் பட்டினம் என்று பெயரும் சூட்டினான் என்கிறது ஸ்தல வரலாறு.

கோயிலின் தொன்மையையும் இறை சாந்நித்யத்தையும் உணர்ந்த பல்லவர்களும் பாண்டியர்களும் கூட கோயிலுக்கு நிறைய திருப்பணிகள் செய்திருக்கிறார்கள் என்பதைக் குறிக்கும் கல்வெட்டுகள் இருக்கின்றன.

எங்கே இருக்கிறது ராஜேந்திரப்பட்டினம்?

கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது விருத்தாசலம். இங்கிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில், 12 கி.மீ. தொலைவில் உள்ளது ராஜேந்திரப் பட்டினம். கடலூர் மாவட்டத்தில் முக்கியமான திருத்தலம் ஸ்ரீமுஷ்ணம் எனும் பெருமாள் கோயிலைத் தெரியும்தானே. இந்தக் கோயிலில் இருந்து 10வது கிலோமீட்டரில் அமைந்திருக்கிறது ராஜேந்திரப்பட்டினம்.

அற்புதமான கோயில். காலகாலமாக தன் சக்தியை நிலைநாட்டிக் கொண்டே இருக்கும் ஆலயம். இங்கு வந்து வேண்டிக் கொண்டால் பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது சத்தியம். இங்கே பிரார்த்தனை செய்து கொண்டால், வாய் பேச முடியாமல் இருக்கும் சிறுவர்களும் சிறுமியரும் விரைவில் பேசும் திறனைப் பெறுவார்கள் என்பது உறுதி. தோல் சம்பந்தமான நோய்கள், தடிப்புகள், அரிப்புகள் இங்கு வந்து தரிசித்து வேண்டிக் கொண்டால் விரைவில் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்!

ராஜேந்திரப்பட்டினத்து கோயிலின் நாயகன் ஸ்ரீநீலகண்டேஸ்வரர். குமாரனுக்கு அருளியதால் குமாரசுவாமி எனும் திருநாமமும் உண்டு. ஸ்வேதார்க்கவனேஸ்வரர் என்ற பெயரும் சிவனாருக்கு உண்டு. ஸ்வேதம் என்றால் வெள்ளை. வெள்ளெருக்க வனத்தில் எழுந்தருளியவர் என்பதால் இந்தத் திருநாமம்!


திருநீலகண்ட யாழ்ப்பாணர்

அம்பாள் பெயர் நீலமலர்க்கண்ணி. அபிதகுஜாம்பாள் என்றும் நீலோற்பலாம்பாள் என்றும் பெயர்கள் இருக்கின்றன. லிங்கமும் அழகு. சிவ சந்நிதிக்கு வலப்புறம் சந்நிதி கொண்டிருக்கும் அம்பாள் பேரழகு!

மூன்று நிலை ராஜகோபுரம்.. அருகே பிரமாண்டமான, நீலோத்பவ தீர்த்தக்குளம். உள்ளே பிராகாரங்களில் ஏகப்பட்ட சந்நிதிகள். ஏராளமான பரிவார தெய்வங்கள். தேவாரத் திருமுறைகளை, பாடலாகவே இருந்தவற்றை இசையின் மூலம் இன்னும் இன்னுமான உயிரேற்றியவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். யாழ் இசையை மீட்டுவதில் வல்லவர். சிவனாரே கதி என்று வாழ்ந்த நல்லவர். கோயில் கோயிலாகச் சென்று, யாழெடுத்து பாடிப் பரவி, பரமனைத் தொழுத பக்தர். இங்கே திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு சந்நிதி இருக்கிறது.

இவர், மதுரையம்பதிக்குச் சென்று சொக்கனின் முன்னே, யாழ் மீட்டி பாட ஆசைப்பட்டார். ஆனால் குலத்தையும் ஜாதியையும் சொல்லி உள்ளே விடவில்லையாம் இவரை. வாசலில் நின்றபடியே யாழ் மீட்ட... அந்த இசையைக் கேட்டு அசரீரி... ‘இவரை எனக்கு முன்னே கொண்டு வருக!’ என்று! கிடுகிடுத்துப் போனார்கள் எல்லோரும். உள்ளே வந்து சொக்கேசனுக்கு முன்னே நின்று, மனமுருகி இசையால் பாடி இறைவனை வசமாக்கியவர், திருநீலகண்ய யாழ்ப்பாணர்!

ராஜராஜ சோழனுக்கு பிள்ளை வரம் தந்த ராஜேந்திரப்பட்டினம் நீலகண்டேஸ்வரர் கோயிலில், திருப்பணிகள் செய்யப்பட்டு, இதோ.. வருகிற 11ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7.31 மணி முதல் 8.31 மணிக்குள் மகா கும்பாபிஷேக வைபவம் சிறப்புற நடைபெறுகிறது. இன்று 9ம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

வரும் 11ம் தேதி காலையில் ராஜேந்திரப்பட்டினத்தில் கும்பாபிஷேகம். பிள்ளை வரம் தந்த நீலகண்டேஸ்வரரை, நோய்கள் தீர்க்கும் சிவபெருமானை, சாபத்தில் இருந்தும் தோஷத்தில் இருந்தும் விமோசனம் தந்தருளும் ஈசனை... கண்ணாரத் தரிசிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். மேலும் கும்பாபிஷேக தரிசனப் புண்ணியத்தையும் பெறுவோம்!

கோயில் தொடர்புக்கு:

சி.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் - 99403 00077,

சங்கர் - 98424 88031, 98947 47947

குணசேகர் - 93818 43677, 72999 27772

ராஜேந்திரப்பட்டினம் நீலகண்டேஸ்வரே போற்றி போற்றி!

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025