சோழிங்கநல்லூரில் பெண் ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்ட வழக்கு: கொள்ளையர்கள் மூவர் கைது
Published : 17 Feb 2018 12:58 IST
சென்னை
சென்னையை அடுத்த நாவலூரில் பெண் ஐடி ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராதா (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மென் பொறியாளரான இவர் சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர் நாவலூர் அருகில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 12-ம் தேதி இவர் பணி முடிந்து வீடு நோக்கி தாழம்பூர்-பெரும்பாக்கம் பிரதான சாலையில் தன்னுடிய ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது பின்பக்க தலையில் அடித்தனர்.
பின்னர் அவரை கடுமையாக தாக்கினர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை தரதரவென்று அருகில் உள்ள கட்டிடத்திற்கு இழுத்துச் சென்றனர். அவர் கூச்சலிடவே மீண்டும் தாக்கிவிட்டு அவரது நகைகள், விலை மதிப்புள்ள ஐ போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். போகும்போது அவரது ஆக்டிவா ஸ்கூட்டரையும் பறித்துச் சென்றனர்.
இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 7தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மூவர் சிக்கினர்:
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த லோகேஷ், நாராயணமூர்த்தி, விநாயக மூர்த்தி ஆகிய 3 பேரை போலீஸார் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடமிருந்து கொள்ளைபோன இருசக்கர வாகனம், இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு கத்தி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலுக்கு உட்படுத்த உள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment