Friday, February 16, 2018

மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் மின்சார வினியோகம் பாதிக்காது என்று அமைச்சர் உறுதி




மின்வாரிய ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இதன்காரணமாக மின்சார வினியோகம் பாதிக்காது என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

பிப்ரவரி 16, 2018, 05:45 AM

சென்னை,

ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மின்வாரிய ஊழியர்கள் அறிவித்தனர்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.), பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம்(பி.எம்.எஸ்.), தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ்(என்.எல்.ஓ.), தமிழ்நாடு பவர் என்ஜினீயர்ஸ் அமைப்பு(டி.என்.பி.இ.ஓ.) உள்பட 10 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய போவதாக நோட்டீசு வழங்கினார்கள்.

நோட்டீசு வழங்கிய பிறகு, தொழிற்சங்கங்களுடன் மின்வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த 12-ந்தேதி தொழிலாளர் நல துணை ஆணையர் முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று மீண்டும் நடை பெறுவதாக இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், பேச்சுவார்த்தை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் அறிவித்தது.

இதையடுத்து 10 தொழிற்சங்கங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி 16-ந்தேதி (இன்று) வேலைநிறுத்தம் செய்வோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

வேலைநிறுத்தம் அறிவித்திருந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சி.ஐ.டி.யு.) தலைவர் எஸ்.எஸ்.பால சுப்பிரமணியம், தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் (என்.எல்.ஓ.) பொதுச்செயலாளர் சாலமோன் உள்பட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலைநிறுத்தத்துக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான பேசி முடிக்கப்பட்ட ஊதிய உயர்வு தொடர்பாக உடனடியாக ஒப்பந்தம் காணப்படும் என்றும், மின்வாரியத்தில் உள்ள 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்புவது என்றும் உத்தரவாதம் அளிக்கவில்லை. பிரச்சினைக்குரிய கோரிக்கையான கணக்கீட்டு காரணி 2.57-ஐ தருவோம் என்று எழுத்துபூர்வமாக தெரிவித்தார்கள். அது உண்டா? என்றும் அமைச்சர் உத்தரவாதம் தரவில்லை.

60 ஆண்டுகாலம் நடந்த ஊதிய ஒப்பந்தத்தில் பிரிவினை என்பது இல்லை. ஆனால் இப்போது பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக நாங்கள் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம், அழைக்கின்றோம் என்று அமைச்சர் கூறுகிறார்.

இதுவரையில் அமைச்சர் அலுவலகத்தில் இருந்தோ, மின்வாரிய அலுவலகத்தில் இருந்தோ எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு வந்துவிடக்கூடாது என்ற பொறுப்புமிக்க சங்கங்கள் தான் எங்கள் கூட்டமைப்பில் இருக்கிறது. எங்களை அழைத்து இருந்தால் நாங்கள் சென்று பேசி இருப்போம்.

இடைக்கால நிவாரணத்தை ஏற்போமா? இல்லையா? என்பது அடுத்த பிரச்சினை. இடைக்கால நிவாரணம் அறிவிக்கும் போது கூட எங்களை அழைக்கவில்லை. ஏற்கனவே பேசி முடித்த ஒப்பந்தத்தை ஒருவார காலத்தில் நிறைவேற்றுவேன் என்று அமைச்சர் சொல்லவில்லை. ஆகவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும்.

அரசிடம் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்று கூறியதாக அமைச்சர் கூறும் 14 தொழிற்சங்கங்களில் 22 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் எங்கள் பக்கம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்த பிரச்சினைக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஊதிய உயர்வு எங்கள் வாழ்வாதார பிரச்சினை.

வேலைநிறுத்தம் செய்வதால் தொழிலாளர்களின் சம்பளத்தை பிடித்தால், அதை ஏற்றுக்கொள்வோம். அதை பின்னால் மின்வாரியத்துடன் பேசி, அந்த ஊதியத்தை பெறக்கூடிய தைரியம் எங்களுக்கு இருக்கிறது. நாளை (இன்று) மாலை அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவு எடுக்கப்படும்.

அரசின் மெத்தனப்போக்கினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பண வசூல் மையங்கள் நாளை மூடப்படும். இதனால் அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும். 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று மாலை சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் மின்வாரிய தொழிலாளர் பிரதிநிதிகளோடு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். சுமுகமாக பேச்சுவார்த்தை நடந்து முடியும் என்று எதிர்பார்க்கிறோம். மொத்தமுள்ள 17 சங்கங்களில் தி.மு.க., ஐ.என்.டி.சி. உள்பட 14 சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை, என்று கூறியுள்ளனர்.

சி.ஐ.டி.யு, பி.எம்.எஸ்., என்.எல்.ஓ. ஆகிய 3 சங்கங்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்து உள்ளனர்.

அரசியல் காரணங்களுக் காக அந்த சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளார்கள். அந்த 3 சங்கங்களுக்கும் நான் கேட்டுக்கொள்வது, வேலைநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பது தான்.

சி.ஐ.டி.யு-வை பொறுத்தவரை அரசு சார்பில் இடைக் கால நிவாரணம் அறிவிக்கப்பட்ட கூட்டத்துக்கும் அவர் கள் வரவில்லை. எனவே ஏதோ ஒரு நோக்கோடு நாளை (இன்று) அவர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளனர்.

அரசு முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று சி.ஐ.டி.யு. குற்றம்சாட்டுவது தவறு. பலமுறை வெளிப்படையாக நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். இப்போதும்கூட போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று திறந்த மனதுடன் அழைப்பு விடுக்கிறேன். இதையும் மீறி வேலைநிறுத்ததில் ஈடுபட்டால் மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாப்பதற்கு அரசும், மின்சார வாரியமும் தேவையான ஏற்பாடுகளை செய்யும். மின்தடை ஏற்படாமல் இருக்க உரிய அதிகாரிகள் மற்றும் இளநிலை உதவியாளர்களையும் தயார்படுத்தி இருக்கிறோம்.

வேலை நிறுத்தத்தால் மின்தடை ஏற்படுமோ? என்று மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏதாவது இடையூறு இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், உடனடியாக நிவர்த்தி செய்து தருகிறோம்.

அவர்கள் வேலைநிறுத்ததால் நாங்கள் வருத்தப்படவில்லை. எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். மின் வினியோகம் பாதிக்காது. அனைத்து மின் கட்டண மையங்களும் வழக்கம்போல செயல்படும். ஒருவாரத்தில் பேச்சுவார்த்தை முடிந்து ஊதிய உயர்வு அறிவிக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024