``விஜிலென்ஸை எப்படி உள்ளே விட்டார்கள்?'' - பதிவாளரைக் கடிந்துகொண்ட துணைவேந்தரின் மனைவி!
இரா. குருபிரசாத் Coimbatore:
உதவிப் பேராசிரியர் பணிக்காக, சுரேஷ் என்பவரிடமிருந்து ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதற்கு இடைத்தரகராக இருந்த, வேதியியல் துறைப் பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல, தொலைதூரக் கல்விக்கூட இயக்குநர் மதிவாணன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருமானவரித்துறை மற்றும் சி.பி.ஐ ரெய்டுபோல, பல்வேறு இடங்களில் சுமார் 13 மணி நேரத்துக்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரெய்டில் ஈடுபட்டனர். துணைவேந்தர் கணபதியின் வீடு, தர்மராஜ், மதிவாணன் வீடு, இவர்களது அலுவலகங்களில் தொடர்ந்து ரெய்டு நடத்தப்பட்டது. அதேபோல, திருச்சியில் உள்ள கணபதியின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
துணைவேந்தரை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழக அரசின் ஆதரவுடன் நடந்த இந்த ரெய்டில் வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பாரதியார் பல்கலைக்கழகத்தில், கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பேராசிரியர் பணி நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. இதில், பல்கலைக்கழகத்தில் உள்ள பலருக்கு தொடர்பு உள்ளது என்றும் அடுத்தகட்டமாக, அவர்களும் கைதாவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று திருச்சிக்கு விரைந்துள்ளனர். அவரது வீடு, புதிதாகக் கட்டிவரும் மருத்துவமனை உள்ளிட்ட சொத்துப் பட்டியல் குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காகப் போலீஸார் திருச்சி விரைந்துள்ளனர். துணைவேந்தர் கணபதி கைது சம்பவத்தால், அவரது குடும்பம் அதிர்ச்சியிலும், கடும் கொந்தளிப்பிலும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை, பதிவாளர் வனிதாவை தொடர்புகொண்ட துணைவேந்தர் கணபதியின் மனைவி சொர்ணலதா, ``விஜிலென்ஸ் வரும்போது, செக்யூரிட்டிகள் ஏன் அலர்ட் செய்யவில்லை. அப்படி அலர்ட் செய்திருந்தால், இந்நேரம் இதுபோன்று நடந்திருக்காது’’ என்று கடிந்துள்ளார். இதையடுத்து, செக்யூரிட்டிகளை அழைத்த பதிவாளர் வனிதா, "எப்படி அவர்களை உள்ளே விட்டீர்கள். ஒரு அலர்ட் செய்ய மாட்டீர்களா" என்று கேட்டுள்ளார். அதற்கு செக்யூரிட்டிகளோ, "அவங்க ஐ.டி கார்டு காட்றப்ப நாங்க என்ன மேடம் பண்ண முடியும்" என்று பதிலளித்துள்ளனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் செக்யூரிட்டிகளை அனைவரும், ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment