Monday, February 5, 2018

vikatan.com

கல்வித் துறையில் ஊழல்... பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தால் மட்டும் போதுமா... தீர்வு என்ன?!

சக்தி தமிழ்ச்செல்வன் Chennai:

சமீபகாலமாக நடந்த முறைகேடுகளில் இரண்டு முறைகேடுகள், கல்வித் துறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளன. முதலாவது, பாலிடெக்னிக் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் இதுவரை எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டிருப்பது. இரண்டாவது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமன ஊழலில் துணைவேந்தர் கணபதியைத் தொடர்ந்து மேலும் பலரைக் கைதுசெய்திருப்பது. இந்த இரண்டு முறைகேடுகளும் இன்று புதிதாக நடப்பவையல்ல. `அரசு வேலைவாய்ப்பு' என்றாலே, `அதுக்கு நிறைய பணம்' செலவாகும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் தோன்றி பல வருடங்கள் ஆகிவிட்டன. அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துவரும் நிலையில், ஊழலற்ற, நேர்மையான அடுத்த தலைமுறையை உருவாக்கவேண்டிய மாபெரும் பொறுப்பு கல்வித் துறைக்கு உண்டு.

ஊழல்களில் சம்பந்தப்பட்ட துணைவேந்தர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும், அதற்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? இந்த அளவுக்குக் கல்வித் துறையில் ஊழல் பெருக என்ன காரணம்? லஞ்சம் வாங்குவது ஒரு பெருங்குற்றமல்ல என்ற மனநிலைக்கு அவர்கள் செல்வதற்கு என்ன காரணம்? ஒட்டுமொத்தக் கல்வித் துறையே பணம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலையும் இதனுடன் சேர்த்துப் பார்க்கவேண்டியுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களிடம் கேட்டோம்.



குடியாத்தம் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் ப.சிவக்குமார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர். பேராசிரியர் பணி நியமனத்தில் இதுபோன்ற ஊழல் நடைபெறுவது குறித்து அவரிடம் பேசினேன்... ``1985-களில் சுயநிதிக் கல்லூரிகளின் வருகை ஆரம்பித்தது. அப்போதுதான் கல்வி வியாபாரமும் ஆரம்பமானது. அந்தக் காலகட்டத்தில் கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் நியமனத்தில் பங்குவகித்தனர். அப்போதும் சிறு சிறு பிரச்னைகள் எழும். அதை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நாங்கள் எதிர்த்துள்ளோம். ஆனால், அப்போது நடைபெறும் ஊழல்களைவிட பல மடங்கு மோசமான முறைகேடுகள் இப்போது நடைபெறுகின்றன.

கல்வி வியாபாரிகள் ஒருபக்கமும், வேலையை ஏலம்விடும் வியாபாரிகள் மறுபக்கமும் உள்ளனர். குறிப்பாக, அரசு வேலைகளை நம்பி தமிழ்நாடு தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (TRB) மூலம் நடத்தப்படும் தேர்வுகளை எழுதிவிட்டு, ஏழை மக்கள் பலர் வேலைவாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஊழல் மூலம் அவர்களது வாய்ப்பு பறிக்கப்படுகிறது. உயர்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தொடங்கி இந்நாள் அமைச்சர் அன்பழகன் வரை உயர்கல்வித் துறையில் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்பது கேள்விக்குறியே!

பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தற்கொலை செய்துகொண்டார். அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் துறையில் ஊழல் நடைபெற்றது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின. அரசு உதவி பெறும் கல்லூரிகளில், கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற நியமனங்களில் ஊழல் நடைபெற்றது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் போராடிவருகின்றன. துணைவேந்தர் பணி நியமனத்தில் கல்வியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன. சமூகச் செயற்பாட்டாளர் பாலம் நாராயணன், இதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்தான் வெளியே வந்துள்ளன. இதற்கு முன்னரே தனியார் மருத்துவக் கல்லூரியான எஸ்.ஆர்.எம் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்தும் நமக்குத் தெரியும்.

பள்ளிக் கல்வி தொடங்கி பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்து ஆசிரியர் பணி நியமனங்களிலும் ஊழல் நடைபெற்றால், எப்படிப்பட்ட கல்வியை நாம் மாணவர்களுக்கு அளிக்கப்போகிறோம்? இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தாலும், ஆசிரியர் பணிகள் ஏலம்விடப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவை எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும்? தனியார் கல்லூரியின் கட்டணக் கொள்ளையும் அரசு நிறுவனங்களின் ஊழலும் கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இல்லாமல் செய்துவருகின்றன. பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துத் துணைவேந்தர் பணி நியமனங்களிலும் அரசு தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஆதங்கத்தோடு தனது கருத்தைப் பதிவுசெய்தார்.

துணைவேந்தர் பதவி நியமனங்களில் சமூக நீதியோ, நேர்மைத்தன்மையோ இருப்பதில்லை என்ற கருத்தைத் தெரிவித்த எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்திடம் பேசியதிலிருந்து...



``இந்தக் கேள்வியே சற்று ஆச்சர்யமாக இருக்கிறது. எல்லா அரசுப் பணி நியமனங்களிலும் பணம் கொடுத்தால்தான் பதவி என்பதை வெளிப்படையாக அனைத்து மக்களும் பேசிக்கொள்கின்றனர். ஆசிரியர் பணி நியமனங்களிலும், துணைவேந்தர் பணி நியமனங்களிலும் என்ன மாதிரியான வெளிப்படைத்தன்மை இருக்கிறது? எதன் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது என்பது பற்றிய உண்மைத்தன்மையே இல்லை. இங்கு நடைபெறும் ஊழல் என்பது, வெறுமனே துணைவேந்தர் மட்டுமே சம்பந்தப்பட்டது கிடையாது; இது ஒரு பெரிய அங்கம்போல் செயல்படுகிறது. இதன் பின்னால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எனப் பலர் இருப்பர். கல்வித் துறை, கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் துறையாக மாறியிருக்கிறது. இதை ஊடகங்களும் பொதுமக்களும் பெரும் விவாதமாக மாற்றினால் மட்டுமே இந்தப் போக்கை மாற்ற முடியும்" என்றார்.

 கல்வித் தந்தைகளாக பல பணக்காரர்கள் வந்துவிட்ட கல்வித் துறை முழுக்கவே வியாபார மயமாகிவிட்டது. கிராமப்புற மாணவர்களும் ஏழை மாணவர்கள் பலரும் அரசுக் கல்லூரியை மட்டுமே நம்பி உயர்கல்வியை நோக்கிப் பயணிக்கின்றனர். பல்கலைக்கழகங்களில் நடக்கும் இதுபோன்ற ஊழல்கள், கல்வித் துறையின் மீதும் ஆசிரியர்கள் மீதும் உள்ள மதிப்பைக் கெடுத்துவிடுகின்றன; `கல்வியின் மூலம் மட்டுமே தனக்கான வாழ்வை மீட்க முடியும், சமூகத்தில் நல்ல நிலையை எட்ட முடியும்' என நம்பும் பல லட்சம் மாணவர்களையும் பெற்றோர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. இதுபோன்ற முறைகேடுகளைக் களையும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு தலைமுறையே பாதிக்கும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu The Hindu Bureau TIRUNELVELI 03.01.205 The universities in ...