Friday, February 23, 2018

முன்னம்பால்... பின்னம்பால் எது நல்லது? எவ்வளவு நிமிடங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம்? 

ஜி.லட்சுமணன்

VIKATAN  

குழந்தையின் எதிர்காலம் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால், அந்தக் கனவுகள் குழந்தையின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சமூக அந்தஸ்து பற்றியதாகவே இருக்கும். எந்தப் பள்ளியில் சேர்க்கலாம்? என்ன படிக்க வைக்கலாம்? என்ன வேலை வாங்கித்தரலாம்? என்பதுபோன்ற எண்ணங்கள்தாம் அவர்களை மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.



ஆனால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியமே, அவர்களின் எதிர்காலத்துக்கு அடித்தளம் என்பதை மறந்து விடுகிறார்கள். விளைவு, ஊட்டச்சத்துக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு எனப் பல பிரச்னைகளோடு வளர்கிறார்கள் இன்றைய தலைமுறை பிள்ளைகள்.
குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படும் சத்தான உணவுதான் அவர்களது உடலையும், மூளையையும் வளர்ச்சியடையச் செய்து வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும். அதனால்தான், குழந்தை வளர்ப்பின்போது அவர்களது உணவு முறையில் பெற்றோர் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இது குறித்து, எழும்பூரில் உள்ள அரசினர் குழந்தைகள் மருத்துவமனை நலக் கல்வியாளர் (Health Eductor) கங்காதரன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.

"டஜன் கணக்கில் பிள்ளை பெற்றாலும் குழந்தைகளை அசாதாரணமாக வளர்த்தனர் நம் முன்னோர். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அந்தக் காலத்தில் திடகாத்திரமாக வளர்ந்தார்கள். ஆனால், ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பதற்கே மூச்சுத் திணறுகிறார்கள், இன்றைய பெற்றோர்.

குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுக்க வேண்டும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதுபற்றி பெற்றோருக்கே தெரியவில்லை. உணவுப் பழக்கமும், வாழ்க்கைமாற்றமும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய்த் தொற்று பிரச்னைகளை அதிகரித்து வருகின்றன.

தாய்ப்பால் கட்டாயம்

தாய்ப்பாலில் முன்னம்பால், பின்னம்பால் என இரண்டு வகைகள் உள்ளன. முதலில் சுரக்கும் பால் நீர்த்தது போல் இருக்கும். அடுத்து சுரக்கும் பாலில் புரதமும் கொழுப்புச்சத்தும் நிறைந்திருக்கும். எனவே, தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் பால் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் சுரப்பதற்கு சூழல் மிகவும் முக்கியமானது. கோபம், எரிச்சல் போன்ற மன பாதிப்புகள்கூட தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மகிழ்ச்சியான சூழலில் மட்டுமே குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்.



ஆறு மாதத்துக்குப் பிறகு குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே போதுமானது அல்ல. எனவே, தாய்ப்பாலுடன் ஓர் இணை உணவு கொடுக்க வேண்டும். அது திட மற்றும் திரவ உணவாக இருப்பது நல்லது. உதாரணத்துக்குச் சத்துமாவுக் கஞ்சி கொடுக்கலாம். இதை சி.பி.பி கஞ்சி என்கிறோம். இதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கலாம்.

கேழ்வரகுக் கஞ்சி

கேழ்வரகு - 400 கிராம்

கோதுமை- 350 கிராம்

பொட்டுக்கடலை - 150 கிராம்

நிலக்கடலை - 100 கிராம்

வெல்லம் - தேவையான அளவு

கேழ்வரகை நன்றாக முளைக்கட்ட வைத்துக்கொள்ள வேண்டும். முளைக்கட்டிய கேழ்வரகை லேசாக உலர்த்தி, வறுத்துக்கொள்ள வேண்டும். அதோடு கேழ்வரகு, கோதுமை, பொட்டுக்கடலையும் உலர்த்தி, வறுத்துக்கொள்ள வேண்டும். வறுத்த பொருள்கள் அனைத்தையும் மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். 100மிலி பால் அல்லது தண்ணீருடன் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்.



ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைகளின் செரிமான சக்தி அதிகரிக்கும். அதன்பிறகு இறைச்சியையும் கொடுக்கலாம். இருந்தாலும் ஆரம்பக் காலங்களில் அவற்றை உடல் ஏற்றுக்கொள்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக செரிமானப் பிரச்னைகள் வராமல் இருக்கிறதா? வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் இல்லாமல் இருக்கிறதா? என்பதை உறுதிசெய்துகொண்டு அதன்பிறகு கொடுக்கலாம். முட்டையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பராமரிப்பு

உடல் ஆரோக்கியம், நோய்களினாலும் கெட்டுப்போக வாய்ப்புண்டு. எனவே, உடலுக்குத் தேவையான சத்துகளுடன் உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள கற்றுத்தர வேண்டும். குழந்தைகளுக்கு நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சுகாதாரமாக இல்லாவிட்டால் நோய்த் தாக்குதல் ஏற்படும். வயிற்றுப்போக்கு, டைபாய்டு, காலரா போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.



கைகழுவுதல்

குழந்தைகள் கைகளை சுத்தமாக வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். குழந்தைகள் தாமாக உணவைச் சாப்பிடப் பழகியதும் கைகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். உள்ளங்கை, விரல்களின் இடுக்குகளில் சோப்புப் போட்டுக் கழுவி கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அழுக்கு அதிகமாகச் சேர்வது நகங்களில்தான். அதனால் நகங்களை முறையாக வெட்டிப் பராமரிக்க வேண்டும்.

குளிப்பாட்டுதல்

`குளித்தல்' என்பதற்கு உடல் உறுப்புகளை 'குளிர்வித்தல்' என்று பொருள். குளிப்பதால் உடலின் அழுக்குகள் நீங்கும். அத்துடன், உடலை சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தயாராக்கும். தேய்த்துக் குளிப்பதால், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

குழந்தைகளை தினமும் ஒருமுறையாவது கட்டாயம் குளிப்பாட்ட வேண்டும். குறைந்தது வாரம் ஒரு முறையாவது தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளும் உண்டாகும்.

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் மற்றுமொரு முக்கியமான பிரச்னை குடற்புழு தொற்றுகள். குழந்தைகள் சோர்வாகக் காணப்படுதல், உடல் எடை குறைதல், வயிற்று வலி, வாந்தி, மலத்தோடு ரத்தம் போதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் ஆறு மாதத்துக்கு ஒருமுறை குடற்புழு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.'' என்கிறார் கங்காதரன்.

குழந்தைகள்தான் நம் எதிர்காலம். அதனால் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவோம்!

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...