Friday, February 23, 2018

குடிநீர் பஞ்சம் ஆரம்பம்..தவிக்கும் மக்கள்!-புதுக்கோட்டை நிலவரம் 

பாலஜோதி.ரா

 புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் பெண்கள் ஆங்காங்கே திடீர் சாலை மறியலில் ஈடுபடுகின்றனபோக்குவரத்து பாதிப்படைகிறது.



புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை, புதூர், வீரப்பட்டி, சித்தன்னவாசல், உள்ளிட்ட கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு இப்போதே ஏற்பட்டுள்ளது.பெண்கள் காலி குடங்களை எடுத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள்.குடிநீர் பஞ்சத்தை சரி செய்ய வேண்டும் என்றும் வேலைகள் முடிந்து தயார் நிலையில் உள்ள காவேரி தண்ணீரை திறந்து விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய்கள் மூலமாக இரண்டு மற்றும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட நேரம் மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.தண்ணீர் இருப்பு இருந்தவரை ஒழுங்காக கொடுக்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது சரிவர தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர். தங்கள் குடிநீர் தேவையை போக்கிக் கொள்வதற்காக, தள்ளு வண்டிகளில் கொண்டு விற்பனை செய்பவர்களிடம் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், தண்ணீர் கேண் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒருநாளைக்கு தண்ணீருக்காக ரூ.100-க்கு மேல் செலவு செய்யப்படுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.
தற்போது,வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அன்னவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி மட்டம் வெகுவாக குறைந்து வருகின்றது. இந்நிலையில், கிணறுகள், குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

இதனால் இன்னும் சில நாட்களில் தண்ணீர் பஞ்சம் அதிக அளவில் இருக்கும் என இப்பகுதி மக்கள் இப்போதே கவலையடைய ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் "அன்னவாசல் ஒன்றியத்திற்கு உப்பட்ட கிராமபுற பகுதிகளுக்கு காவேரி தண்ணீர் வழங்குவதற்கான பணிகள் முடிந்து பல மாதங்கள்ஆகிவிட்டது. தண்ணீர் சோதனை ஓட்ட பணிகளும் முடிந்த நிலையில் இருக்கின்றன.ஆனால், இன்னும் தண்ணீர்மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை.தற்போது தயார் நிலையில்உள்ள காவேரி தண்ணீரை திறந்து விட்டால்,ஓரளவிற்கு தண்ணீர் பிரச்சினை தீரும். குடிநீர் தேவையை வழங்க அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் "என்று அன்னவாசல் ஊராட்சி கிராமபுற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது ஒருபுறமிருக்க ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பெண்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்
சில வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள மேலாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கட்ராம்பட்டி கிராமத்திற்கு கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி அக்கிராம மக்கள் புதுக்கோட்டை பட்டுக்கோட்டை சாலையில் நடுப்பட்டி என்ற இடத்தில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் கழித்து அங்கு வந்த ஆலங்குடி வட்டாச்சியர் ரெத்தினமதி மற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக கட்ராம்பட்டி கிராமத்திற்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.இந்தச் சம்பவத்தைப் போல மாவட்டத்தில் பல பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டங்கள் முன்னறிவிப்பின்றி நடந்து வருகின்றன.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...