Wednesday, February 14, 2018

காதல் டிரெண்டின் ஆரம்பம் டி.ஆரின் ஒருதலைராகம்

Published : 14 Feb 2018 12:28 IST

வி.ராம்ஜி



ஒருவருக்கு வந்தால், ஊருக்கே வந்து விடும் மெட்ராஸ் ஐ மாதிரி, காதல் படம் ஒன்று ஜெயித்தால், அடுத்தடுத்து ரகம்ரகமாய், தினுசுதினுசாய் காதல் படம் எடுப்பார்கள்.

அகத்தியனின் காதல்கோட்டை வந்து ஹிட்டடித்த பிறகு, வாராவாரம் வெள்ளிக்கிழமை ரிலீசாகும் ஏதெனும் ஒரு படம் டைட்டிலில் காதல் சேர்ந்து வந்திருக்கும். அந்தக் காதல், இந்தக் காதல், பார்த்த காதல், டெலிபோன் காதல் என்றெல்லாம் வரிசை கட்டி வந்தது. காதல் என்பது எவர்கிரீன் சப்ஜெக்ட் என்பதால், இதில் நிறைய படங்கள் வெற்றியைக் குவித்தன.

எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் காதல் படங்கள் வந்தன. ஆனால் அடுத்தடுத்து காதல் டிரெண்ட் ஆகவில்லை. இன்றைய பாஷையில்... வைரல் ஆகவில்லை. அடுத்து வந்த கமல், ரஜினி படங்களிலும் காதல் படங்கள் வந்திருக்கின்றன. இதனிடையே, வந்த ஒரு காதல் படம்தான் காதலுக்கு மிகப்பெரிய டிரெண்ட் அமைத்தது. அது... ஒருதலை ராகம்!

மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனும் அந்த பாசஞ்சர் ரயிலும் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள். காவிரிக்கரை வாழ் பிரபலங்கள், பெரும்பாலும் அந்த ஏவிசி கல்லூரியில் படித்துதான் வந்தவர்கள். டி.ராஜேந்தர் கூட அந்தக் கல்லூரியில் படித்தவர்தான். கல்லூரி, கலாட்டா, ரயில் பயணம், காதல், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, ஆட்டம், கொண்டாட்டம் என காலேஜ் வாழ்க்கையையும் டீன் ஏஜ் வாழ்க்கையையும் அச்சுஅசலாகத் தந்ததுதான் ஒருதலை ராகத்தின் இமாலய இனிப்பு சக்ஸஸ்.

அண்ணன் தங்கை பாசத்திற்கு பாசமலர் எப்படி ஆல் பேவரைட் ஃபார்முலாவோ, அதேபோல் காதலுக்கு ஒருதலை ராகம் படத்தைச் சொல்லிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் சினிமா ப்ளஸ் காதல் ரசிகர்கள்.

பார்க்காமலேயே காதல் போல், இது பார்த்தாலும் பேசிக் கொள்ளாத காதல். அந்த மெளனமும் பார்வையுமே காதலின் பலத்தையும் வீரியத்தையும் அழகாகச் சொல்லிற்று!

எம்ஜிஆரின் பின்னே இருந்து நம்பியார் கத்தியை எடுத்துக் கொண்டு வரும் போது, ‘வாத்தியாரே... நம்பியார் வர்றாரு பாரு’ என்று ரசிகர்கள் தியேட்டரில் கத்துவார்கள் ஞாபகம் இருக்கிறதா. ஒருதலை ராகம் நாயகன் சங்கரும் நாயகி ரூபாவும் சந்திக்கும் தருணங்களில், ‘பேசுங்கடா... லவ்வைச் சொல்லுங்கடா’ என்று தியேட்டர் அலறியது. அலர்ட் செய்து பதைபதைப்பைக் காட்டியது.

கோயில் திருவிழாவில் பாட்டுக் கச்சேரி, எண்பதுகளில் பிரபலம். அப்போது ’வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது’ பாடலைப் பாடாத கச்சேரிகளே இல்லை. கல்யாண வீடுகளில், பொங்கல் விழாக்களில் ‘என்னடி ரோஜா எங்கேடி போற... மாமனைக் கண்டு ஆடுது இங்கே...’ என்று லவுட் ஸ்பீக்கரில் பாடி அலப்பறையைக் கூட்டும்.

அன்றைய தேதிக்கு, லாட்டரிச்சீட்டு வாங்கி லட்சாதிபதியானவர்கள் உண்டா... தெரியவில்லை. ஒருதலை ராகம் பாட்டுப்புத்தகம் பிரிண்ட் செய்து பணக்காரர்கள் ஆனவர்கள் நிச்சயம் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், எண்பதுகளின் இளைஞர்களின் கையில் இந்தப் பாட்டுப் புத்தகம்தான்... காதலர் கீதமாகவே இருந்தது.

காதலைச் சொல்லமுடியாமல் தவித்தவர்கள், ‘இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூபாளம்’ என்று பாடிக் கலங்கினார்கள். யாருக்கும் தெரியாமல் காதலித்ததையும் காதலில் தோல்வியடைந்ததையும் ‘நானொரு ராசியில்லா ராஜா’ என்று ஹைபிட்ச்சில் பாடி, உள்ளத்தின் சோகத்தை ஊருக்கே சொன்னார்கள்.

இதையடுத்து ஒருதலை ராகத்தைக் கொண்டு, காதலின் பல பரிமாணங்களை, பரிணாமங்களை அடுத்தடுத்து எடுத்துக் கொண்டே இருந்தார் டி.ராஜேந்தர். வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி, நெஞ்சில் ஒரு ராகம், உயிருள்ளவரை உஷா என்று இவரின் படங்கள்... காதல் ஜூஸ் சொட்டச் சொட்ட வெளிவந்தன. காதலர்களுக்கும் காதலுக்கும் ஏகபோக உரிமையாளரானார் டி.ஆர்.

ஒருதலை ராகம்தான்... காதல் டிரெண்டின் புதிய ராகம். அந்த பெல்பாட்டமும் நீ....ண்ட காலர் சட்டையும் ஹிப்பி முடியும் கூடவே மனம் முழுவதும் நிறைத்து அனுப்பிய காதலும்... மறக்கவே முடியாது எவராலும்!

ஒருதலை ராகம்... காலங்கள் கடந்தும் மனங்களில் பயணித்துக் கொண்டே இருக்கும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024