Wednesday, February 14, 2018

'காதலின் பரிசு... வசந்தி'- இது காதல் ஸ்பெஷல்

Published : 14 Feb 2018 11:40 IST

வி.ராம்ஜி




ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு... ஜெமினி, சரோஜாதேவி

காதலுக்கு இலக்கண, இலக்கிய பொழிப்புரையெல்லாம் யார் யாரோ எப்படியெப்படியோ செய்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தைத் தந்த காதல் படங்களில், கல்யாணப் பரிசு படத்துக்கு இருந்த வரவேற்பு, அது காதலுக்கான வரவேற்பும் கூட!

முக்கோணக் காதல் கதைகளின் நாயகன் என்று பேரும் புகழும் பெற்ற இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம் இது. ஜெமினி, சரோஜாதேவி, விஜயகுமாரி ஆகியோரின் மன உணர்வுகளையும் காதலையும் அது தொடர்பான தியாகங்களையும் சொல்லி, நம்மைக் கண்ணீர் விடச் செய்திருப்பார் ஸ்ரீதர்.

படம் பார்த்த ரசிகர்கள், படத்தை திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். பத்து முப்பது முறைக்கும் மேல் பார்த்தவர்கள் எல்லோரும் இன்றைக்கு தாத்தா பாட்டிகளாக இருக்கிறார்கள். ‘காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்’ பாடாதவர்களே இல்லை. பாடியும் கேட்டும் அழாதவர்கள் குறைவுதான்!

இந்தப் படத்துக்கு முன்பே நெஞ்சம் தொட்ட காதல் படங்கள் வந்திருக்கின்றன. வந்து ஹிட் அடித்திருக்கின்றன. அதேபோல் இதற்குப் பிறகும் எத்தனையோ படங்கள், நம் இதயத்தைத் தொட்டு, என்னவோ செய்திருக்கின்றன. ஆனால், கல்யாணப் பரிசு தந்த தாக்கத்தின் அடர்த்தி மிக மிக அழகானது. ஆழமானது.

காதலில் தோல்வியுற்றவர்களின் அதிக பட்ச ஆறுதல்... தனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்து, அதன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு, காதலியின் பெயரைச் சூட்டுவார்கள். ஏதோ தோற்ற வலியிலிருந்து சின்னதான ஆறுதலும்... ‘என் காதல் எவ்ளோ ஒசத்தி தெரியுமா’ என்பதைப் பறைசாற்றுகிற விதமும் அதில் தெரிந்தது.

இப்படி காதலியின் பெயரைச் சூட்டி ஆறுதல் அடைய முடியாதவர்களும் இருந்தார்கள். காரணம்... சம்பந்தப்பட்ட வீட்டாருக்கு, பெண்ணின் பெயரும் பையனின் காதலும் பளிச்செனப் பதிவாகியிருக்கும். அப்படியிருக்கும் போது குழந்தைக்குக் காதலியின் பெயரைச் சூட்டினால்... காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது போல், காதலியின் பெயரை குழந்தைக்குச் சூட்டுவதிலும் எதிர்ப்பு கிளம்பும் என்று கலவரப்பட்டார்கள். கலங்கினார்கள்.

அப்போதுதான் ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு, காதலர்களுக்கான பரிசாக, பெயர் சூட்டுவதற்கான பரிசாக அமைந்தது. அதாவது கல்யாணப் பரிசு படத்தில் சரோஜாதேவியின் காதலும் அக்காவிற்காக காதலை விட்டுக் கொடுப்பதும் அந்தக் காதலின் வலியும் வேதனையும் பார்ப்பவர்களையெல்லாம் பதறடித்துவிடும். சரோஜாதேவி நடிப்பில் கலங்கடித்திருப்பார். படத்தில் அவரின் கேரக்டர் பெயர்... வசந்தி!

இந்த ‘வசந்தி’தான்... அப்போதைய காலகட்டத்தில் காதலில் தோற்றவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். அதாவது காதலித்து, காதலில் தோற்று, வேறொருவரைக் கல்யாணம் செய்து, பிறந்த குழந்தைக்கு ‘வசந்தி’ என்று பெயர் சூட்டினார்கள். கிட்டத்தட்ட காதல் தோல்வியின், காதலின் மிகப்பெரிய ‘ஐகான்’... வசந்தி எனும் பெயர் பார்க்கப்பட்டது! சூட்டப்பட்டது!

தமிழ் சினிமாவில் முதன்முதலில் இயக்குநரின் படம் என்று சொல்லவைத்த முக்கிய பெருமை ஸ்ரீதருக்கு உண்டு. அவரின் முதல் இயக்கமான கல்யாணப்பரிசு வெற்றிப்படமாகும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். அந்த வசந்தி... காதலின் நாயகியாகி, காலம் கடந்தும் நின்றிருப்பாள் என்பது தெரிந்திருக்குமா... சந்தேகம்தான்!

வசந்திகள் வாழ்க!

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024