Thursday, February 15, 2018

'அம்மா ஸ்கூட்டர்' ஆய்வுக்கு வருவோர் ரூ.500 லஞ்சம் கேட்பதால் அதிர்ச்சி

Added : பிப் 15, 2018 00:28

'அம்மா ஸ்கூட்டர்' திட்ட விண்ணப்பங்களை சரி பார்ப்பதற்காக, கள ஆய்வுக்கு செல்லும் ஊழியர்கள், 500 ரூபாய் லஞ்சம் கேட்பது, பெண்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வேலைக்கு செல்லும் பெண்கள், இரு சக்கர வாகனங்கள் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கும், 'அம்மா ஸ்கூட்டர்' திட்டத்தை, நடப்பு ஆண்டில் செயல்படுத்த, தமிழக அரசு, 250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதற்கு, ஜன., 22 முதல், பிப்., 10 வரை, 3.36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது, விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. விண்ணப்பித்தோரின் விபரங்களை அறிய, உள்ளாட்சி ஊழியர்கள், நேரடியாக கள ஆய்வுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்வோர், விண்ணப்பம் சரி என, அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க, 500 ரூபாய் லஞ்சம் தரும்படி கட்டாயப்படுத்துவதாக, கூறப்படுகிறது.ஏற்கனவே, 'சிபாரிசு செய்கிறோம்' என, ஆளும்கட்சி பிரமுகர்கள், 5,000 ரூபாய் வசூல் நடத்தி வரும் நிலையில், கள ஆய்வுக்கு வருவோரும் பணம் கேட்பது, விண்ணப்பித்த பெண்களிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, உள்ளாட்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதால், உரிய ஆய்வுக்கு பின், தகுதியான நபர்களுக்கு மானியம் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்போருக்கும், சொந்த பணத்தில் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொள்வதாக, உறுதி அளிப்போருக்கும், முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி போன்றோருக்கும் முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கள ஆய்வுக்கு வருவோருக்கு, பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.அவ்வாறு பணம் கேட்போர் குறித்து, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம், விண்ணப்பதாரர் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜெ., பிறந்த நாளில், மானியம் வழங்கும் திட்டம் துவக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024