Friday, February 16, 2018

வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி: தொழிலதிபர் வெளிநாடு தப்பியோட்டம்

By DIN | Published on : 16th February 2018 04:38 AM



அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற புது தில்லி டிபன்ஸ் காலனியில் உள்ள நீரவ் மோடியின் நகைக் கடை.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட உடைமைகளை பறிமுதல் செய்தனர்.

ஏற்கெனவே வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தற்போது நீரவ் மோடியும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி (46), பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்தவர். இவர் நியூயார்க், லண்டன், பெய்ஜிங், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வருகிறார். 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்ட இந்தியச் செல்வந்தர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடி செய்ததாக, சிபிஐயிடம் அந்த வங்கி நிர்வாகம் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி புகார் அளித்தது. அதில், நீரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும், அவரது பங்குதாரர்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் உடந்தையுடன் இந்த மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி, சகோதரர் நிஷால், பங்குதாரர்களான மெஹுல் சினுபாய் சோக்ஸி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் அலுவலர்கள் கோகுல்நாத் ஷெட்டி (ஓய்வுபெற்றவர்), மனோஜ் காரட் ஆகியோருக்கு எதிராக சிபிஐ கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

வெளிநாட்டில் நீரவ் மோடி: நீரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் ஜனவரி 1-ஆம் தேதியே வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். நீரவ் மோடி, ஸ்விட்சர்லாந்தில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதேபோல், நீரவ் மோடியின் பங்குதாரரும், கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் உரிமையாளருமான மெஹுல் சோக்ஸியும் ஜனவரி 6-ஆம் தேதி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீரவ் மோடி உள்ளிட்டோர் வெளிநாடு தப்பிச் சென்ற பிறகே, அவர்கள் நால்வரையும் கண்காணிக்கப்படும் நபராக சிபிஐ அறிவித்தது. அதனால், அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியவில்லை.
ரூ.11,400 கோடி புகார்: இந்நிலையில், நீரவ் மோடிக்கு எதிராக சிபிஐயிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி மீண்டும் புதன்கிழமை ஒரு புகார் கொடுத்தது. அதில், நீரவ் மோடி சட்ட விரோதப் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.11,400 கோடி மோசடி செய்திருப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது. கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்தே இந்த மோசடி நடைபெற்று வந்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.

இதனிடையே, ரூ.280 கோடி மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையினர் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். அதனடிப்படையில், நீரவ் மோடிக்குச் சொந்தமான இடங்களில் அவர்கள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
ரூ.5,100 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்: மும்பை குர்லா பகுதியில் அமைந்துள்ள நீரவ் மோடியின் இல்லம், காலா கோடா பகுதியில் உள்ள அவரது நகைக் கடை, பாந்த்ரா மற்றும் லோயர் பரேல் பகுதிகளில் உள்ள அவருக்குச் சொந்தமான 3 நிறுவனங்கள், குஜராத் மாநிலம், சூரத் நகரில் 3 இடங்கள், தில்லி டிஃபன்ஸ் காலனி மற்றும் சாணக்கியபுரி ஆகிய இடங்களில் உள்ள நீரவ் மோடிக்குச் சொந்தமான நகைக் கடைகள் ஆகிய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில், தங்கம், வைரக் கற்கள், ரொக்கப் பணம் உள்பட ரூ.5,100 கோடி மதிப்பிலான உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர, நீரவ் மோடிக்குச் சொந்தமான 6 சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறையினர் சீல் வைத்தனர்.
மோசடி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

நீரவ் மோடியின் மோசடிகள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாண் இயக்குநர் சுனில் மேத்தா, செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது:

நீரவ் மோடி, அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகிய மூவரும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்றில் வங்கி அலுவலர்களின் உடந்தையுடன் கடந்த 2011-ஆம் ஆண்டில் போலியாக உறுதிமொழிச் சான்றுகளைப் பெற்றுள்ளனர். அந்தச் சான்றுகளை வைத்துக் கொண்டு யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, அலாகாபாத் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றின் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்து அவர்கள் கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உறுதிமொழிச் சான்று அளித்ததற்கான எந்தப் பதிவும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் இல்லை.
இந்நிலையில், நீரவ் மோடியின் நிறுவனம், கடந்த மாதம் புதிதாக கடன் பெறுவதற்காக, உறுதிமொழிச்சான்று கோரி விண்ணப்பித்தது.
இதற்கு முன்பு மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அலுவலர்கள் ஓய்வுபெற்றுவிட்டதால், புதிதாக வந்த அலுவலர்கள் 100 சதவீத உத்தரவாதத் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டனர். ஆனால், ஏற்கெனவே இதுபோன்று கடன் வாங்கியதாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். அதையடுத்து, உஷாரான வங்கி அலுவலர்கள், வங்கியில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. அதையடுத்து, நாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
நிதி நெருக்கடியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி விரைவில் மீண்டு வரும். முறைகேடு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றார் அவர்.


No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024