Friday, February 2, 2018

ஒற்றை வரி ஊக்கச் சொற்கள்!

By டி.எஸ். ரமேஷ் | Published on : 02nd February 2018 01:48 AM |

சமூக வலைதளங்களில் இந்தியர்கள் அனுப்பும் தத்துப்பித்து 'குட்மார்னிங்' வாழ்த்துகளால் சர்வலோக இணையதளமே நிரம்பித் தத்தளிக்கிறது என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்! இதைக் கேட்டுப் பெருமைப்படுவதா, தலையில் அடித்துக் கொள்வதா என்று தெரியவில்லை. இப்போது குட் மார்னிங் குறுந்தகவல்களை அழிக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளது கூகுள். இந்தியர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் எண்ணிக்கை வாட்ஸ்அப் வலைதளத்தில் மட்டும் 2,000 கோடி என்பது உபரித் தகவல்.
'நாளை என்பது இல்லவே இல்லை, இன்றே எல்லாவற்றையும் சாதித்துவிடு; அனுபவித்துவிடு - பாவ புண்ணியமில்லை' என்ற தொனியில்தான் பல குட்மார்னிங் வாழ்த்துகள் உள்ளன. இவை மேற்கத்திய நாடுகளில் 18-19ஆம் நூற்றாண்டில் தோன்றிய இச்சை - ஃப்ரீவில் சித்தாந்தத்தின் தழுவல் சொற்கள்.

இவை நமது பாரம்பரியத்தின் கர்ம பலன் - வினைப் பயன்- சிந்தனைக்கு நேர் எதிரானவை. ஊக்கமளிக்கும் சிந்தனையாக அவற்றைக் கருதலாம்- கருத வேண்டும்- என்பது ஒரு புறம். ஆனால் அவற்றின் அடிப்படை வேறொரு வாழ்வியல் தத்துவத்தில் ஊன்றியுள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பொதுவாகவே நம் தேசத்தில் அடுத்த ஜன்மம் பற்றிப் பேசுவது, மறுபிறவி, இம்மை - மறுமை இதெல்லாம் சர்வ சாதாரணமாக வெளிப்படும் சித்தாந்தங்கள். இவை பெரும் தத்துவ நிலைப்பாடுகள் என்பதைக் கடந்து அன்றாடம் வெளிப்படுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்னால், உலக அழகிப் போட்டியில் போட்டியிட்ட இந்தியப் பெண்ணிடம் கேட்கப்பட்ட கேள்வி, 'இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால், நீ யாராகப் பிறக்க விரும்புகிறாய்?'

அதற்கு, 'அடுத்த பிறவியில் இந்திரா காந்தியாகப் பிறக்க வேண்டும்' என்று அந்தப் பெண் பதில் கூறினார். அவருக்கு உலக அழகிப் பட்டம் சூட்டப்பட்டது.
அடுத்த ஜன்மம் உண்டா? அழிந்துவிடும் நம் உடலில் உள்ள எது அடுத்த பிறவியாய்த் தோன்றுகிறது? நான் யார்? இம்மை-மறுமை போன்றவை தத்துவ விசாரங்களாக எழாமல், அவற்றை நமது அன்றாட வாழ்வின் செயல், எண்ணங்களோடு இணைத்துவிட்டோம். அதே சமயத்தில், நாளை கிடையாது, வினைப் பயன் கிடையாது என்பது போன்ற குறுந்தகவல்களையும் இன்று தயங்காமல் பகிர்ந்து கொள்கிறோம்!

ஓர் அரசியல் கட்சியின் கூட்டத்தில் நீண்ட ஆயுள், மறுபிறவி குறித்துப் பேச்சு எழ வாய்ப்பில்லை. ஆனால் அங்கு பேசப்பட்ட விஷயங்களைப் பற்றி அசை போட்டு சிந்திக்கும்போது, பாரதிய தத்துவத்தோடு தொடர்புபடுத்திக் கொள்கிற மாதிரியும் சில எண்ணங்கள் எழுகின்றன.

மும்பையில் அண்மையில் சிவசேனைக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தலைவர் உத்தவ் தாக்கரே பேசும்போது, சர்தார் படேல் இன்று உயிருடன் இருந்தால் காஷ்மீர் பிரச்னையையும், பிரச்னையாக உள்ள பாகிஸ்தானையும் தீர்த்துக் கட்டியிருப்பார் என்று திருவாய் மொழிந்தார்.
படேல் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு சுமார் 142 வயதாக இருந்திருக்கும். இந்தியா சுதந்திரம் அடைந்திருந்த நாட்களிலேயே கூட, வயதானவர்- மிகவும் முதியவர்- என்று கருதப்பட்டவர்; இன்று அவர் முழு நேர அரசியலில் செயல்பட்டுக் கொண்டிருப்பாரா, செயல்பட விடப்படுவாரா, சாத்தியமா என்பது போன்ற கேள்விகளுக்கு இடமில்லை.

இந்தியாவை ஒருங்கிணைத்த படேலை இரும்பு மனிதர் என்று கூறும்போது, தலைமைப் பண்பு பற்றிய வேறொரு விஷயமும் எப்போதும் நினவுக்கு வரும். சர்தார் வல்லபபாய் படேல் ஏன் தேசத்தின் முதல் பிரதமராக அறிவிக்கப்படவில்லை, காந்திஜி அதை விரும்பவில்லை, காந்திஜி ஏன் அதை விரும்பவில்லை என்று பல ஊகங்கள் இன்றும் வலம் வருகின்றன.
சுதந்திர இந்தியாவில் படேல் நீண்ட காலம் வாழ்ந்திருக்கவில்லை. இதையெல்லாம் கொண்டு, அந்நிய ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்ற மிக இளைய நாட்டுக்கு ஸ்திரத்தன்மை அளிக்க ஓர் இளம் தலைவர் தேவை என்ற வகையில் ஜவாஹர்லால் நேரு முன்னிறுத்தப்பட்டார் என்ற கருத்து உண்டு.
ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது சர்தார் படேலின் வயது எழுபதைக் கடந்துவிட்டது. ஆனால் அந்த வயதில்தான் பல சமஸ்தானங்களை இணைத்து ஒருமைப்பாடுமிக்க நாட்டை வெற்றிகரமாக உருவாக்கினார்.

சர்தார் படேலை சிலாகிக்கும் உத்தவ் தாக்கரேயின் பேச்சு, முடிவில்லா நீண்ட ஆயுளை ஆழ்மனதில் விரும்பும் எண்ணத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்! ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, இன்னும் நீண்ட ஆயுளை வேண்டுபவர்கள் அன்றும் இருந்தனர்; இன்றும் உள்ளனர். இப்போதைய பிரதமரை 'இளைய சர்தார் படேல்' என்று கூறும் அரசியல் ரசிகர்கள் உண்டு.
நீண்ட ஆயுளை சாதாரண மக்கள் வேண்டும்போது, அதை வேண்டாமென வெறுத்தனர் பண்டைய ஞானியர்.

'பிறவி வேண்டேன்' என்று பாடினார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். 'நூறாண்டுகள் வாழ்ந்தாலும், உறக்கத்தில் பாதி ஆயுளும், மீதி ஆயுள், சிசுவாயும், அறியாப் பருவத்திலும், உடல் வேட்கை, நோய், மூப்பு, துன்பத்தில் கழிக்க வேண்டும் - எதற்காக ஆயுளை நீட்ட வேண்டும் - பிறவி போதும்' என்கிறார் அவர். பிறவிப் பிணி தீர்க்க சிவபெருமானை நாடச் சொல்கிறார் மாணிக்கவாசகர்.

உடலுக்கு மரணம் உண்டு. ஆத்மாவுக்கு இல்லை. அதற்கு வேறு ஜன்மம்- பிறவிகள் உண்டு. மானுடப் பிறவியை பிறவிகளின் உச்சியில் வைக்கிறது ஹிந்து தத்துவ இயல். ஜன்மாந்தரமாய் செய்த நற்செயல்களின் பயனாய் மானிடப் பிறவியை அடைந்ததாய்க் கூறுகிறோம். இனி பிறவி வேண்டியதில்லை; உன்னிடம் என்னை அழைத்துக் கொள்; பிறவிப் பிணி தீர்க என்று பரம்பொருளை ஞானியர் வேண்டினர்.

மானுட ஜன்மத்துக்குப் பிறகு புழுவாய்ப் பிறக்க நேர்ந்தாலும் சிவபெருமானை மறவாதிருக்க வரம் வேண்டுமென்று இறைஞ்சுகிறார் அப்பர் சுவாமிகள்.
ஆனால், இன்றைய சமூக வலைதளங்களில் கொட்டும் ஒரு வரித் தத்துவங்கள், அடுத்த ஜன்மம் என்ன, நாளை என்ற நாளே கிடையாது என்று சொல்கின்றன! கேட்கவும் படிக்கவும் மிகவும் சுவாரசியமான இந்த ஒற்றை வரி ஊக்கச் சொற்கள், நாம் ஆழமாக நம்பும் நமது பாரம்பரிய தத்துவ சிந்தனைக்கு நேர் விரோதமாக இருப்பது தெரியாமல், ஓயாமல், யோசியாமல் பரப்பி, இணையதளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறோம்!

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...