சேலத்தில் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பதிவு: அக்டோபர் 11, 2018 03:00 AM மாற்றம்: அக்டோபர் 11, 2018 03:19 AM
சேலம்,
சேலம் மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சேலம் 3 ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு நேற்று காலை 11 மணியளவில் வந்தனர். 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரு குழுக்களாக பிரிந்து அந்த ஆஸ்பத்திரியில் சோதனையை தொடங்கினர்.
ஒரு குழுவினர் அங்குள்ள மருந்தகத்தில் இருந்த ஆவணங்களை பார்வையிட்டு சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள், மருந்து, மாத்திரைகள் வழங்கும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மற்றொரு குழுவினர் ஆஸ்பத்திரியில் உள்ள அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்து சோதனை நடத்தினர்.
இதேபோல், சேலம் காந்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த 2 ஆஸ்பத்திரிகளிலும் நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
2 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் வருமானவரி சரியாக தாக்கல் செய்துள்ளார்களா? இல்லை வரி கட்டாமல் உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சோதனை இன்னும் முடியவில்லை. எனவே விரிவான சோதனைக்கு பின்னர் தான் வரி ஏய்ப்பு செய்துள்ளனரா? என்பது தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர். சேலத்தில் 2 ஆஸ்பத்திரிகளில் நேற்று நடந்த வருமான வரி சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment