Friday, October 12, 2018

மாநில செய்திகள்

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பஸ்கள் சென்னையில், 6 இடங்களில் இருந்து இயக்க ஏற்பாடு




தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பதிவு: அக்டோபர் 12, 2018 05:45 AM

சென்னை,

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறை மூலம் செயல்படுத்த இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் போக்கு வரத்துத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், பி.டபுள்யூ.சி. டேவிதார், போக்குவரத்துத்துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, போக்குவரத்துத்துறை துணைச்செயலாளர் பி.பிரபாகர் உள்ளிட்ட போக்குவரத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை, கோயம்பேட்டில் உள்ள ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையம்’, தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் கே.கே.நகரில் உள்ள மாநகரப் போக்குவரத்து கழக பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களிலிருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் நவம்பர் 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.

தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 275 பஸ்களுடன் சிறப்பு பஸ்களாக 4 ஆயிரத்து 542 பஸ்கள் என 3 நாட்களும் சேர்த்து, சென்னையிலிருந்து 11 ஆயிரத்து 367 பஸ்கள் இயக்கப்படுகிறது. பிற ஊர்களிலிருந்து இந்த 3 நாட்களுக்கு 9 ஆயிரத்து 200 சிறப்பு பஸ்கள் உள்பட 20 ஆயிரத்து 567 பஸ்கள் இயக் கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு நவம்பர் 7-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை 4 ஆயிரத்து 207 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகை முடிந்து பிற முக்கிய பகுதிகளிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 7 ஆயிரத்து 635 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இந்த பஸ்களில் பயணம் செய்ய கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2, பூந்தமல்லி பஸ் நிலையத்தில் 1, மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் 1 உள்பட 30 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்படும்.

இந்த சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் வரும் நவம்பர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 5 லட்சத்து 52 ஆயிரத்து 624 பயணிகள் பயணம் செய்தனர். தற்போது 30 ஆயிரத்து 274 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த தீபாவளியின் போது அதிக கட்டணம் வசூலித்த 53 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆண்டும் பறிமுதல் நடவடிக்கை தொடரும். மாநகரில் உள்ள ஆம்னி பஸ் டிப்போக்களில் இருந்து அலுவலக நேரங்களில் பஸ்களை இயக்குவதன் மூலம் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவது தெரியவந்துள்ளது. அவற்றை ஒழுங்குபடுத்துவதுடன், விரைவில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பண்டிகை நாட்களில் வேலை நிறுத்தம் செய்வதாக நோட்டீஸ் அளித்துள்ளனர். இவர்களுக்குரிய நிலுவை தொகையை வழங்க முதல்- அமைச்சரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும். எனவே பொதுமக்கள் நலன் கருதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள். பள்ளி மாணவர்களுக்கு விரைவில் பஸ் பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண உயர்வுக்கு பிறகு படிப்படியாக வருமானம் அதிகரித்து வருகிறது. புதிய பஸ் ஒதுக்கீட்டில் சென்னைக்கு 1 பஸ் மட்டும் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், தொடர்ந்து 30 பஸ்கள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மின்சார பஸ்களை பொறுத்தமட்டில் சென்னைக்கு 80-ம், கோவைக்கு 20-ம் விரைவில் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் 1 கிலோ மீட்டர் இயக்க 1 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024