பூமியை
கைவிடப் பார்ப்பவனே
பூமி
உன்னை கைவிடவில்லையப்பா
காற்று உன்னை மட்டும்
விட்டுவிட்டு வீசியதா?
தன் கிரணக் கீற்றுகளை
நிலா உன்மீது
நிறுத்திக் கொண்டதா?
பூக்கள் உன்னைக் கண்டு
இலைகளின் பின்னால்
தலைமறைவாயினவா?
தன் சிகரங்களில் வசிக்க
வாழ்க்கை உன்னை
வரவேற்கிறது.
நீ ஏன்
மரணத்தின் பள்ளத்தாக்கை
நகங்களால் தோண்டுகிறாய்?
*
உயிரின் விலையை
உணர்த்த வேண்டும் உனக்கு
எழுந்திரு
என் பின்னால் வா
அதோ பார்
உயிரில் பாதி
ஒழுகி விட்டாலும்
மிச்ச உயிரைக்
கோணிப்பையில் கட்டிவைத்துக்
கூனிக் கிடக்கிறானே கிழவன்- ஏன்?
அபாயம் அறிந்தால்
அங்குலப் புழு
மில்லி மீட்டர்களாய்ச்
சுருள்கிறதே – ஓஏன்?
பறவையாய் இருந்தும்
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பறந்தடிக்கிறதே ஏன்?
மரணம் என்ற
நிஜத்திற்கு எதிராய்
மருத்துவமனையெல்லாம்
பொய்யாக இன்னும்
போராடுவது ஏன்?
வலையறுந்தும் நிலை குலைந்தும்
அந்த
ஓரிழைச் சிலந்தி
ஊசலாடுகிறதே ஏன்?
வாழ்க்கையின்
நிமிஷ நிட்டிப்புக்குத்தான்
*
தம்பீ
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்வை நீ தீர்மானி
புரிந்து கொள்
சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்
- கவிப்பேரரசு வைரமுத்து..
No comments:
Post a Comment