Thursday, December 13, 2018


முடிவுகள் ஏற்படுத்தும் தெளிவு!

By ஆசிரியர் | Published on : 13th December 2018 01:27 AM |


ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருப்பது மிகப்பெரிய அரசியல் திருப்பம் என்பதில் ஐயப்பாடில்லை. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கின்றன. 

பஞ்சாப், மிஸோரம் இரண்டு மாநிலங்களில் தனியாகவும் கர்நாடகத்தில் கூட்டணியாகவும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மிஸோரத்தில் ஆட்சியை இழந்தாலும்கூட, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று பெரிய மாநிலங்களில் பெற்றிருக்கும் வெற்றி, அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. இந்த வெற்றி 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸுக்கு உற்சாகத்தை மட்டுமல்ல, தேவையான பண பலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
கடந்த மக்களவைத் தேர்தலும் அதற்குப் பின்னால் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களும் ராகுல் காந்தியின் தலைமைப் பண்பை கேள்விக்குறியாக்கி இருந்தன. இப்போது, இந்தியாவின் முக்கியமான மூன்று மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கும் வெற்றி, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 2019 மக்களவைத் தேர்தலைத் துணிவுடன் எதிர்கொள்ள அடித்தளமிட்டுக் கொடுத்திருக்கிறது. 

பஞ்சாப், உத்தரகண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கோவா, குஜராத் ஆகிய ஏழு மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் பாஜகவுடன் நேரடியாக மோதுகிறது. கடந்த தேர்தலைப்போல, காங்கிரஸ் உடனான நேரடி மோதலை எதிர்கொள்வது பாஜகவுக்கு சுலபமாக இருக்கப் போவதில்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருப்பது, காங்கிரஸ் தலைமைக்கே வியப்பாக இருந்திருக்கக் கூடும். ராஜஸ்தானில் படுதோல்வி அடையும் என்று கருதப்பட்ட பாஜக, மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பல இடங்களில் தோல்வி அடைந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்திலும் இழுபறியுடன்தான் காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலைமை.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மாற்றியது. அதுவரை மதச்சார்பின்மை பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி மென்மையான இந்துத்வா என்கிற புதிய அணுகுமுறையைக் கையாள முற்பட்டது. 

மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் பசுவைப் பாதுகாப்பதற்காக கோசாலை அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது.
பாஜகவை ஆதரிக்கும் பிராமணர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ராகுல் காந்தி பூணூல் அணிந்து கொண்டு, நேரு குடும்பத்தினர் காஷ்மீர பிராமணர்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த முற்பட்டார். தன்னை ஒரு சிவ பக்தனாக அடையாளம் காட்டிக் கொண்டும், கைலாஸ் மானசரோவர் யாத்திரையை மேற்கொண்டும் ராகுல் காந்தி மென்மையான இந்துத்வாவைக் கடைப்பிடித்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்திருப்பதால் இந்த அணுகுமுறையை 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மேலும் தீவிரமாக கடைப்பிடிக்க முற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அணுகுமுறை மக்களவைத் தேர்தலிலும் கைகொடுக்கும் என்று சொல்லிவிட முடியாது. 

பாஜகவின் இந்துத்வா கோஷமும், அயோத்தி ராமர் கோயில் பிரச்னையும், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் அந்தக் கட்சிக்குக் கைகொடுக்கவில்லை. வாக்குப் பதிவுக்கு சில நாள்களுக்கு முன்பு அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் பிரச்னை உயிர்ப்பிக்கப்பட்டதும், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் இது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததும் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியதோ என்று கூடக் கருதத் தோன்றுகிறது. 

கிராமப்புறங்களில் நரேந்திர மோடி அரசின் அதிக மதிப்புச் செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவும், நகர்ப்புறங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பும் பாஜகவுக்கு எதிரான மனோநிலையை மக்கள் மத்தியில் உருவாகியிருப்பது தெளிவாகவே தெரிகிறது. வளர்ச்சி என்கிற கோஷத்துக்கு அயோத்தி மாற்றாக அமையாது என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவாக்கி இருக்கின்றன.

மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமைய வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சி, தொடர்ந்து வந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த வரலாறு நிறையவே உண்டு. 1998-99 இல் ஒன்றுபட்ட மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் தோல்வி அடைந்த பாஜக, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. 2003-இல் இந்த மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக 2004 மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. 2008 சட்டப்பேரவைத் தேர்தலில் பல மாநிலங்களில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி அடுத்து வந்த 2009 மக்களவைத் தேர்தலில் முன்பைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.

அதனால் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி காங்கிரஸுக்கு 2019-இல் வெற்றியை அளிக்கும் என்பதோ, இப்போதைய தேர்தல் தோல்வியின் தொடர்ச்சியாக அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்க நேரிடும் என்றோ அறுதியிட்டுக் கூறிவிட முடியாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024