Monday, December 10, 2018


தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள்: நவீனக் கொத்தடிமைகளா?


Published : 06 Dec 2018 09:05 IST




வசந்தவாணன். வயது 30. சென்னை அருகே, தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போது கல்லூரி நிர்வாகம் அவருடைய கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டது. விதிப்படி சான்றிதழ்களைக் கல்லூரி நிர்வாகம் வாங்கி வைத்துக்கொள்ளக் கூடாது என்பது வேறு விஷயம் (சான்றிதழ்களைச் சரிபார்ப்பதற்காக வாங்கும் கல்லூரிகள், அந்தப் பணி முடிந்ததும் திரும்பத் தந்துவிட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகமும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவும் (ஏஐசிடிஇ) கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது). இதற்கிடையே, அவர் முன்பு விண்ணப்பித்திருந்த அரசுக் கல்லூரியில் அவருக்குப் பணி நியமனம் கிடைத்தது. அரசுப் பணி கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சியடைந்த அந்த இளைஞர், தனது சான்றிதழ்களைத் திருப்பித் தருமாறு பொறியியல் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறார். சான்றிதழ்களைக் கொடுத்து வாழ்த்தி அனுப்புவார்கள் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், சான்றிதழ்களைக் கொடுக்காமல் தொடர்ந்து அவரை அலைக்கழித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார். கடந்த மாதம் நடந்த சம்பவம் இது.

தனியார் கல்லூரியில் பணிபுரிபவர்களுக்கு இம்மாதிரியான நிகழ்வுகள் புதிதல்ல. ஒவ்வொருவரும் ஏதோவொரு தருணத்தில் இம்மாதிரியான கொடுமையை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பு நான் பணிபுரியும் பொறியியல் கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரியில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். முன்பு பணிபுரிந்த கல்லூரியில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்தக் கல்லூரியில் இயந்திரவியல் துறைத் தலைவராகப் பணிபுரிந்தவர் அவர். திடீரென்று, அனைவரின் ஊதியத்தையும் கல்லூரி நிர்வாகம் குறைத்திருக்கிறது. முறையான காரணம், முன்னறிவிப்பு இன்றிச் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணியிலிருந்து விலகிக்கொள்ள விரும்பியவர்களுக்கு, சான்றிதழ்களை வழங்காமல் அலைக்கழித்தனர் கல்லூரி நிர்வாகத்தினர்.

இதையடுத்து, அவரும் பிற ஆசிரியர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து, பிரச்சினையின் வீரியம் அதிகரித்தது. ஒருநாள், தன் வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவில் நடந்துசென்றுகொண்டிருந்த அவரைச் சிலர் இரும்புக் கம்பியால் தாக்கினர். ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றிக் கிடந்த அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிர் பிழைப்பாரா என்று அஞ்சி அவரது குடும்பம் பரிதவித்திருக்கிறது. ஒருவழியாகச் சில மாதங்களில் உடல் தேறிய அவர், பிரச்சினையைத் தொடர விரும்பாமல், கல்லூரிக்கு எதிராகக் கொடுத்த புகாரைத் திருப்பி வாங்கிவிட்டார். ஆனாலும், அவரது துயரங்கள் முடிவுக்கு வரவில்லை. காரணம், அவருக்கு வேறு எந்தக் கல்லூரியிலும் வேலை கிடைக்கவில்லை. ஆம், கல்லூரி நிர்வாகிகளுக்கென்று ஒரு கூட்டமைப்பு இருக்கிறது. தங்கள் நிர்வாகத்துக்கு எதிராகப் போராடும் எந்த ஆசிரியரையும் வேறு எந்தக் கல்லூரியிலும் வேலை கிடைக்காதவாறு அவர்களால் செய்துவிட முடியும். இதையடுத்துப் பல மாதங்கள் விரக்தியான மனநிலையில் உழன்றுகொண்டிருந்தார் அவர்.

ஒருவழியாக அந்த நிர்வாகத்துக்குப் போட்டியான இன்னொரு நிர்வாகம் நடத்தும் ஒரு கல்லூரியில் அவருக்குப் பணி கிடைத்தது. ஆனால், இதிலும் இன்னொரு சிக்கல். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பழைய கல்லூரியில் வாங்கிக்கொண்டிருந்த அதே சம்பளம்தான் இன்றுவரை அவருக்குக் கிடைக்கிறது. தொழில் நிறுவனங்களில் இத்தனை ஆண்டுகள் அனுபவத்துக்கு, இன்றைக்கு லட்ச ரூபாய் சம்பளம் கிடைத்திருக்கும். கல்லூரி நிர்வாகத்தின் அடாவடிப் போக்கைத் தட்டிக்கேட்டதால் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறார்.

இன்றைய சூழலில் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.15,000 – 18,000. ஆண்டு ஊதிய உயர்வையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஒருவர் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் அதிகபட்சமாக அவர் பெறக்கூடிய ஊதியம் ரூ.30,000. பொறியியல் முடித்து தொழில் நிலையங்களில் பணிபுரியும் ஒருவர், மூன்றே ஆண்டுகளில் அந்தச் சம்பளத்தைப் பெற்றுவிட முடியும். அரசுக் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.50,000-க்கும் அதிகமான சம்பளம் கிடைக்கிறது. தனியார் கல்லூரிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளத்தையே கண்ணில் பார்க்க முடியும்.

இன்னொரு கொடுமையும் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐந்து மாணவர்களைச் சேர்த்துவிட வேண்டும் என்று பல தனியார் கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு இலக்கு வைக்கின்றன. இல்லையென்றால், இருக்கிற வேலையையும் இழக்க நேரிடும். நிலையற்ற வருமானத்தால் குடும்பத்தின் அடிப்படை வசதியைக்கூட ஒருவரால் செய்ய இயலாது. இந்நிலையில், எவ்வாறு தரமான கல்வி மாணவர்களுக்கு அளிக்கப்படும்? ஒருகாலத்தில் மருத்துவத் துறைக்கு நிகராக மதிக்கப்பட்ட துறை இன்று அதன் சீரழிவின் உச்சத்தில் இருக்கிறது.

அதிகக் கட்டணங்கள் வசூலிக்கும் கல்லூரிகளைப் பற்றியும், சான்றிதழ்களைப் பிணையாகப் பெற்றுக்கொள்ளும் கல்லூரிகளைப் பற்றியும் முறையான ஊதியங்கள் வழங்காத கல்லூரிகளைப் பற்றியும் தங்களிடம் புகார் அளியுங்கள் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வியின் கூட்டமைப்பும், அண்ணா பல்கலைக்கழகமும் கூறுகின்றன. ஆனால், புகார் அளிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதல்களை அவர்கள் தருவதில்லை. யாரேனும் புகார் அளித்தால்தான் நடவடிக்கை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? முறையான கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருந்தால் தனியார் கல்லூரிகள் இப்படி அத்துமீறுமா?

சட்டரீதியாக ஒரு பிரச்சினையை எவ்வாறு அணுக வேண்டும் என்று நமக்குப் பயிற்றுவிக்கப்படவில்லை என்பது ஒரு முக்கியப் பிரச்சினை. நம் அடிப்படை உரிமைகளைக்கூடப் போராடித்தான் பெற்றாக வேண்டும் எனும் நிலையில், நமது அடிப்படை உரிமை என்ன என்பதுகூட நமக்குத் தெரிவதில்லை. இங்கு, தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு என்று ஒரு கூட்டமைப்பு இல்லை. ஜவுளிக் கடைகளில் 12 மணி நேரம் நின்றபடி வேலைசெய்யும் ஊழியர்களைப் பார்க்கும்போதும், தொழிலகங்களில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்விதப் பாதுகாப்புமின்றிப் பல மணி நேரம் பணிபுரிபவர்களைப் பார்க்கும்போதும் தோன்றுவது இதுதான். ஏன் நம்மால் ஒன்றுதிரள முடியவில்லை. ஏன் நம்மால் நம் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை?

- முகம்மது ரியாஸ்,

தொடர்புக்கு: hirifa@gmail.com

No comments:

Post a Comment

Call to save asst. professor from alleged victimisation in Periyar University

Call to save asst. professor from alleged victimisation in Periyar University Periyar University has placed an agenda to remove the assistan...