Tuesday, December 11, 2018

மருத்துவர்களுக்குத் தேவை அவசர சிகிச்சை

Published : 27 May 2017 13:03 IST


டாக்டர் ஆ. காட்சன்




மருத்துவர்கள்தான் அவசரச் சிகிச்சை செய்வார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் மருத்துவர்களுக்கும் மருத்துவ உலகத்துக்கும் அவசரச் சிகிச்சை தேவைப்படும் நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இது அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத ஒரு நோய். அரசியல்வாதி என்றாலே ஊழல் செய்பவர்கள் என்ற நம்பிக்கை ஸ்திரமானதுபோல, மருத்துவர்கள் என்றாலே பணம் பிடுங்குபவர்கள் என்ற கருத்து மக்களிடையே அதிகரித்துவருகிறது. இந்தக் கருத்தைப் பொறாமையால் தோன்றியதாகச் சொல்ல முடியாது. இதை நிஜமாக்குவதற்குப் பல காரணங்களும் இருக்கின்றன. மருத்துவர்களுக்கும் அதில் முக்கியப் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

உறுதிமொழி என்ன சொல்கிறது?

எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் முதல் ஆண்டின்போது ‘ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி’ எந்த இடத்தில் எழுதிப் போடப்பட்டிருக்கும் என்பது எல்லாப் பயிற்சி மருத்துவர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அதில் என்ன எழுதியிருக்கும் என்ற கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் மிகவும் சொற்பம்தான். ஏனென்றால், மனிதனுக்குச் சிகிச்சையளிப்பதைக் கற்றுக்கொண்டதைவிட, நோய்க்குச் சிகிச்சை அளிப்பதையே நம்மில் பெரும்பாலானோர் கற்றுக்கொண்டுள்ளோம். இரண்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்? ஒரு மனிதரைச் சிகிச்சை அளிப்பது என்பது அவனை மதிப்பதில் இருந்து தொடங்குகிறது. அவரது வலியையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இதில் நோய் அறிகுறிகளைத் தீர்ப்பது, நோய்க்குச் சிகிச்சையளிப்பது என்பதும் தானாகவே உள்ளடங்கிவிடுகிறது, தனித்துத் துருத்திக்கொண்டு இருப்பதில்லை.

இடைவெளி விழுந்த உறவு

“உங்கள் வயலில் விளைச்சல் எப்படி?” என்று விவசாயியிடமும், “பிளஸ் டூ எழுதிய உங்கள் மகள் எத்தனை மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள்? அடுத்து என்ன படிக்கப் போகிறாள்?” என்று ஒரு பெற்றோரிடமும், “பணி நிறைவு பெற்ற பின் நேரம் எப்படிப் போகிறது?” என்று ஓய்வுபெற்ற ஊழியரிடமும் கேட்கும் மருத்துவர்களை மக்கள் இன்னமும் கொண்டாடத்தான் செய்கிறார்கள். அது சிகிச்சைக்கு நேரடி சம்பந்தமில்லை என்று நம்புகிறோம். ஆனால், தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுப்பவர் சொல்வதைப்போல ‘எத்தனை வேணும்?’ என்று கேட்டுவிட்டு மருந்துச் சீட்டை நீட்டும் தொழில் அல்ல மருத்துவம். கடைக்காரர்-வாடிக்கையாளர் உறவு என்பது வேறு, மருத்துவர்-நோயாளி உறவு என்பது நிச்சயம் வேறு.

நோயாளி உருவாக்கம்

நோயாளிகள் விவரிக்கும் நோய் அறிகுறிகளுக்கு அந்தந்த உறுப்பு சம்பந்தப்பட்ட நோயின் பெயரைக் கூறி நோய்த்தன்மைக்கு உள்ளாக்கிவிடுவது, மருத்துவ உலகைத் தாக்கியிருக்கும் மிகப் பெரிய வியாதியாக உருவெடுத்திருக்கிறது. வயிற்று வலித்துவிட்டாலே ‘அல்சராக இருக்கும்’ என்றும், கழுத்து வலியுடன் வந்தால் ‘தண்டுவட ஜவ்வு விலகியிருக்கும்’ என்றும், கோபப்படுகிறார் என்றாலே ‘பிரெஷராக இருக்கும்’ என்றும் எல்லோரையும் நோய் பீடித்தவராக மாற்றாமல் இருப்பது நிச்சயம் மருத்துவர்களின் கைகளிலும் உள்ளது. 40 வயது நிரம்பிய எல்லோரையும், நாளை எனக்கு என்ன நடக்குமோ என்று கத்திமேல் நடக்க வைக்கும் நெருக்கடியை மனதில் ஏற்ற வேண்டிய இடமல்ல மருத்துவமனை என்பதை எப்போது உணரப் போகிறோம்?

மனம் விட்டுப் பேசுங்கள்

‘நான் மருத்துவர், நோயைக் கண்டறிந்துவிட்டேன், மருந்து கொடுப்பேன், நீ சாப்பிட வேண்டும்’ என்ற மனநிலையிலிருந்து மருத்துவர்கள் விடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை நோயாளிக்குமானதே தவிர, நோய்க்காக மட்டுமல்ல.

புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு மனநல மருத்துவப் புத்தகம் பின்வருமாறு கூறுகிறது: ‘ஒருவரை உடல் அளவில் தொடர்ந்து நோயாளியாகவோ, மனநோயாளியாகவோ மாற்றுவதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ மருத்துவர்களும் பங்குவகிக்கின்றனர். அதீத எச்சரிக்கைகள் மூலமாகவோ, தெளிவான விளக்கங்கள் மற்றும் ஆற்றுப்படுத்துதலை மருத்துவர் கொடுக்காததன் மூலமாகவோ இது நடக்கிறது’ என்பதே அது.

எந்தச் சிகிச்சை வெல்லும்?

நோய் அறிகுறிகளுக்குச் சிகிச்சை அளித்து நோயை நீக்கி விடுவது மட்டுமே ஒரு மருத்துவருக்கு முழு வெற்றியைத் தந்துவிடுவதில்லை. நோயால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கைத் தரத்தை நோயுற்ற நிலையிலிருந்து எந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. உடைந்த எலும்புகளை ஒட்ட வைப்பது அல்ல, ஒட்டவைக்கப்பட்ட எலும்புகளால் ஒரு நபர் எந்த அளவுக்குத் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது என்பதுதான் ஒரு சிகிச்சையின் வெற்றி. இல்லாவிட்டால் ‘அறுவைசிகிச்சை வெற்றி, நோயாளி மரணம்’ என்ற கதையே தொடரும்.

உடல்நோய் தரும் மனநோய்

‘எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தக் கோளாறும் இல்லை. மருத்துவரும் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், எனக்கு இன்னும் நோய் அறிகுறிகள் ஏன் இருக்கின்றன?’ என்ற விடையளிக்க முடியாத கேள்விகளுடன் தினமும் பலர் மனநோயாளிகளைப்போல் மாறிவருகின்றனர். மனதுக்கும் உடலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல மருத்துவ உலகம் மாறிவருவதுதான் இதற்கு முக்கியமான காரணம்.

ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழியில் வரும் ‘Primum non nocere’ என்ற லத்தீன் வரிகளுக்கு ‘நோயாளிக்கு எந்தத் தீங்கும் செய்யாதிருப்பதே முதன்மையானது’ என்று அர்த்தம். ‘உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதே’ என்று சொல்வார்கள் இல்லையா, அதுபோன்றதுதான் இதுவும். மருத்துவ மாணவர்களுக்கு இந்த அம்சத்தைப் பாடமாகச் சொல்லிக்கொடுப்பதைவிட வாழ்க்கைக் கல்வியாக நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட வேண்டும். இனி வரும் தலைமுறைகளிலாவது மருத்துவர்-நோயாளி இடைவெளி குறைய வேண்டும்.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024