சென்னை,
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 29–ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.
அக்னி நட்சத்திரம்
சூரியன் தனது பயணத்தில் மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சரிப்பார். மேஷம் ராசி பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் நாள் தொடங்கி, ரோகிணி நட்சத்திரம் 2–ம் பாதத்தில் சஞ்சரிக்கும் நாள் வரையுள்ள காலத்தை அக்னி நட்சத்திரம் என்கிறோம். பரணி 3, 4 பாதங்கள், கிருத்திகை 1, 2, 3, 4 பாதங்கள், ரோகிணி 1, 2 பாதங்களில் இருக்கும் போது சூரியன் பூமிக்கு மிக அருகே வருகிறது. இதில் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தில் வெப்பம் உச்சகட்டத்தை எட்டும். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னிதேவன், நெருப்பை குறிக்கும் கிரகம். எனவே தான் இதை அக்னி நட்சத்திரம் என்று இந்த நாட்களையே குறிப்பிடுகிறோம்.
இக்காலம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21–ந்தேதி முதல் வைகாசி மாதம் 15–ந்தேதி வரை இருக்கும். நடப்பாண்டு சித்திரை 21–ந்தேதி (மே 4–ந்தேதி) அதாவது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.23 மணிக்கு தொடங்கி வரும் 29–ந்தேதி காலை 7.14 மணி வரை அக்னி நட்சத்திர காலமாகும். இந்த காலகட்டத்தில் சூரியன் உச்சப்பலம் பெறுகிறார். இதனால் இந்த 25 நாட்களும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
குளிர்ந்த நீர், மோர்
கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம், வெள்ளரி, தர்பூசணி மற்றும் பிறவகை பழங்கள் சாப்பிடலாம்.
மீன்கள் சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜியும், சைனஸ் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதனால் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் மீன்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
தவிர்க்க வேண்டும்
கடும் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற உடன் சிறிது நேரம் மின்விசிறியின் கீழ்அமர்ந்து, தலையில் உள்ள வியர்வை காய்ந்த பின்னர் பானங்கள் அருந்துவது நல்லது.
குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். காய்ச்சி வடிகட்டிய நீர் 10 அல்லது 15 டம்ளர் தினசரி குடிக்க வேண்டும். காரமான உணவு வகைகள் மற்றும் பான்பராக், பாக்கு போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.
கோடை காலங்களில் இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் அக்னி நட்சத்திர வெப்பத்திலிருந்து ஓரளவு நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment