Monday, May 4, 2015

அந்தநாள் இந்தியாவுக்கு என்று வருமோ?

ரெயில்களின் வேகத்தில் சீனாவும், ஜப்பானும் போட்டி போட்டுக்கொண்டு செல்லும் வேகம் உலகத்தையே வியக்க வைக்கிறது. இப்போதைய நிலையில், உலகிலேயே வேகமான ரெயில் சீனாவில்தான் ஓடுகிறது. இந்த ரெயிலை வேகத்துக்காக புல்லட் ரெயில் என்று சொல்லலாமே தவிர, இந்த ரெயில் தண்டவாளத்தில் ஓடுவதில்லை. தண்டவாளத்துக்குமேல் 10 சென்டிமீட்டர் உயரத்தில் மின்சாரத்தால் சார்ஜ் செய்யப்பட்ட காந்தத்தின் மூலமாக வேகமாக செல்கிறது. அதாவது அந்தரத்தில் பறப்பதற்கு பதிலாக இந்த ரெயில் தண்டவாளத்தில் சக்கரங்கள் பதியாமல் சற்று உயரத்தில் பறந்து செல்லும்.

இந்த நிலையில், ஜப்பானில் சில நாட்களுக்கு முன்பு மத்திய ஜப்பான் ரெயில்வே மணிக்கு 590 கிலோ மீட்டர் வேகத்தில் இதுபோன்ற ஒரு ரெயிலை ஓட்டிக்காட்டி ஒரு சாதனையை படைத்தது. வெற்றி மேல் வெற்றி என்பதுபோல, அடுத்த ஒருவாரத்தில் மணிக்கு 603 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு சோதனை ஓட்டத்தை ஓட்டிக்காட்டி பெரிய சாதனையை பறைசாற்றிவிட்டது. இது சோதனை ஓட்டம்தான், இதற்குரிய தண்டவாளங்களை எல்லா இடங்களிலும் போட்டு இந்த ரெயிலை ஓட்டவேண்டுமென்றால் இன்னும் சில ஆண்டுகளாகலாம் என்றாலும், இந்த ரெயிலின் ஓட்டம் என்பது விமானத்தின் வேகத்தையும் மிஞ்சும் என்பது உலகத்தையே மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த வேகத்தில் இந்தியாவில் ரெயில்கள் ஓடினால் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு மணி 5 நிமிடங்களிலும், கோயம்புத்தூருக்கு 50 நிமிடங்களிலும் சென்றுவிடமுடியும். அந்தநாள் இந்தியாவுக்கு என்று வருமோ? என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் இருக்கிறது.

இந்தியாவில் ரெயில்கள் ஓடத்தொடங்கி 162 ஆண்டுகள் முடிந்துவிட்டன. மிக பழமையான சரித்திரம்கொண்ட இந்திய ரெயில்கள் இன்னும் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரெயிலே காலத்திய வேகத்தில்தான் ஓடுகிறது. இங்கு அதிவேக ரெயில் என்றால் மணிக்கு 160 முதல் 200 கிலோமீட்டர் வேகம் வரும் ரெயில் என்று பெருமையோடு சொல்லி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சென்னை– பெங்களூரு–மைசூரு; சென்னை –ஐதராபாத் மார்க்கம் உள்பட சில மார்க்கங்களுக்கு பெருமையோடு அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்புகளெல்லாம் காற்றிலே கலந்த கீதமாகிவிட்டது. சென்னை– மைசூரு மார்க்கத்தை பார்வையிட வந்த சீன நிபுணர்குழு சாத்தியமில்லை என்று கூறிவிட்டது. காரணம் இப்போது இருக்கும் தண்டவாளங்களில் இவ்வளவு வேக ரெயிலை ஓட்டமுடியாது. அதை அந்த தண்டவாளங்கள் தாங்காது. அத்தகைய ரெயிலை ஓட்ட புது ரெயில் பாதைகள் அமைக்க கிலோ மீட்டருக்கு 200 கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லி, உங்களுக்கு உள்ளது அதே 80 கிலோ மீட்டர் வேகம்தான் என்ற வகையில் ஏமாற்றத்துக்கு ஆளாக்கிவிட்டனர். ஆக, உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல், புதிய அறிவிப்புகளை நிறைவேற்ற போதிய நிதியும் இல்லாமல் ரெயில்வே நிர்வாகம் தள்ளாடுகிறது. ரெயில்வேயில் உலகதரத்தில் இத்தகைய வசதிகள் வேண்டுமென்றால், உடனடியாக உள்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு நிதி தடையாக இருக்கக்கூடாது. ஏனெனில், சமீபத்தில் சி.பி.ஐ. தமிழ்நாட்டில் உள்ள திருச்சி உள்பட சில ரெயில் நிலையங்களில் சரக்கு ரெயில்களில் சரக்குகளை அனுப்பும்போது குறைவாக எடையைக்காட்டி அனுப்பியதிலேயே 4 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. இத்தகைய முறைகேடுகளின் ஊற்றுக்கண்களை அடைத்து உள்கட்டமைப்புகளை பெருக்கும் ஏற்பாடுளை செய்து, ஜப்பான் என்ன நாங்களும் இருக்கிறோம் என்ற பெருமையை இந்திய ரெயில்வே உருவாக்கும் பொன்னாளைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024