Tuesday, May 5, 2015

தமிழ்நாட்டிலும் இருக்கிறது மத்திய பல்கலைகழகம்..!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள் அடுத்த என்ன படிக்கலாம் என பெற்றோர்களும், தான் என்ன படிக்க வேண்டும் என்பதை பிள்ளைகளும் இணையத்தையும், சுற்றத்தாரையும் நாடி தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
“இந்த கல்லூரி சிறந்தது, அந்த கல்வி நிறுவனம் சூப்பர்...இங்கே படித்தால் உடனே வேலை கிடைக்கும், அங்கு படித்தால் எல்லோரும்  கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகலாம்...' என விளம்பரங்கள் சூழ்ந்து கொண்டிருக்க, நாம் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் அதிக குழப்பம் நிலவுகிறது.  

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வழக்கம்போல் அதிகம் பேரின் விருப்பம் டாக்டர், என்ஜினியர் கோர்ஸ்கள்தான். ஆனால், இவற்றையும் தாண்டி பட்டப்படிப்பு என ஒன்று இருக்கிறது அல்லவா ? அதற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது - தமிழ்நாடு மத்தியப் பல்கலைகழகம் ( CUTN - Central University of Tamil Nadu ).  

அப்படின்னா என்ன...அதுல என்ன ஸ்பெஷல் ? 

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 42 மத்திய பல்கலை கழகங்கள் இயங்கி வருகின்றன. அரசாங்கத்தின் முதன்மை கல்வி நிறுவனங்களான IIT போன்ற முக்கிய கல்விநிறுவனங்கள் வரிசையில் மத்திய பல்கலைகழகமும் இடம் பெறுகிறது.  இதில் படித்து நாம் பெறுகிற பட்டம் என்பது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய பல்கலைகழகம் தமிழகத்தில் அமைந்திருப்பது பலரும் அறியாததாக இருப்பதுதான் அறியாமையின் உச்சம். ஏனெனில், தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது தமிழக மக்கள் கல்வியில் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிற காரணத்தினால். ஆனால், இங்கு படிக்கக் கூடிய தமிழ் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.  மற்ற மாநில மாணவர்கள் அதிகம் படித்தாலும் அவர்களோடு போட்டி போட்டு படிக்கும் திறன் படைத்த தமிழ் மாணவர்கள் இதை பற்றி அறியாமலே பல்வேறு வகையில் தங்கள் வட்டத்தை சுருக்கி கொள்கின்றனர்.

விவசாயத்தை பெரும்பாலும் நம்பி இருக்கக் கூடிய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடியது தான் இந்த மத்திய பல்கலைக்கழகம் (CUTN - Central University of Tamil Nadu ) . திருவாரூருக்கு செல்லக் கூடிய மயிலாடுதுறை சாலை, கும்பகோணம் சாலை இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆற்றாங்கரை ஓரம் அமைந்திருக்கக் கூடியது சியுடிஎன். திருவாரூர் மாவட்டத்தில் நீலக்குடி, நாகக்குடி எனும் இரு கிராமத்தில் 516 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது சியுடிஎன். சுற்றுப்புற பகுதிகளுக்கு ஒத்துவராத, உயர் தர வடிவமைப்பிலான கட்டடங்கள், சியுடிஎன் என காட்டுகின்றன.
சுற்று வட்டாரத்தில் இப்படி ஒரு வடிவமைப்பு எங்கும் காணப்படவில்லை. செக் போஸ்ட் தாண்டி நேரே உள்ளே சென்றால், அங்கே பறந்து நிற்கிறது நிர்வாக அலுவலகம். அதை சூழ்ந்து நிற்கும் கட்டடங்கள் என்ன? அங்கே என்ன படிக்கலாம்? அதனால் என்ன வாய்ப்புகள் கிடைக்கிறது?
ஹாஸ்டல் வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? போன்ற முழு விவரங்களையும் அறிந்துகொள்ள உதவினர் இதன் துணைவேந்தர் (பொ) முனைவர் பேராசிரியர் செங்கதிர் மற்றும் ஊடகம் & தகவல் தொடர்பியல் துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜமும் வந்தார்.

பல்கலைகழகத்தில் ஹாஸ்டல் வசதி உள்ளது.  இதில் இரண்டு பேருக்கு ஒரு அறை எனும் விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், வெந்நீர் குளிர் நீர் என வகைபடுத்தி தண்ணீர் தாரளமாக கிடைக்கிறது.  உணவுக்கு தட்டுப்பாடு இல்லை.  ஹாஸ்டலில் தங்குபவர்களுக்கு மெஸ் தனியாக வைக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் வாசிகளுக்கு உணவுக்குத் தான் கொஞ்சம் செலவாகிறது. மற்றபடி செலவு இங்கு குறைவாக இருக்கிறது. பிஹெச்டி படிக்கக் கூடிய மாணவர்களுக்கு தனித் தனியாக வீடுகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் திருமணம் ஆனவர்கள் தங்கள் துணைகளுடன் இருந்தும் படிக்கலாம் என்ற ஒரு முறையும் பின்பற்றப்படுகிறது.

சியுடிஎன் கேம்பஸ்ஸில் வைபை இணைய வசதி  தரப்பட்டுள்ளது. பல்கலை முழுமையும் வெளிச்சமான காற்றோட்டமான அறைகள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் முறை பின்பற்றப்படுகிறது. அறிவியல் ஆய்வகங்கள் முழு வசதிகளுடான் தரப்பட்டுள்ளன. இலவச இணைய வசதி நூலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாடம் தொடர்பான புத்தகங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு உள்ளன. இரவு பகல் என வித்தியாசம் பாராது ஏதேனும் ஒரு நிகழ்வு பல்கலை வளாகத்தினுள் நடந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. 'அல்லைட்' எனும் துணைப் பாடங்களை தானே தேர்ந்தெடுக்கும் முறையும் இங்கு மாணவர்களுக்கு தரப்பட இருக்கிறது. இன்னும் பல்கலைகழகத்தில் பொறியியல் கொண்டு வரவில்லையே என கேட்டதற்கு, அதுதான் எல்லா இடங்களிலும் இருக்கிறதே என பதில் வருகிறது. இந்த வருடத்திலிருந்து எம்.டெக் கோர்ஸ்கள் கூட ஆரம்பமாகிறது.

பல்கலைகழகம் நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்குவதால் ஏராளமான வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இங்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பெறும் செம்மொழி தமிழ் எம் ஏ படிப்பிறகு குறிப்பிட்ட அளவு ஸ்டைபண்ட் வழங்கப்பெறுகிறது. இது மட்டுமில்லாமல் ஆய்வக வசதிகள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. எம் ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் துறைக்கு அதிகமான தொழில் நுட்பபொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை மாணவர்களால் இலகுவாக கையாளவும் கற்றுத் தரப்படுகிறது. கேமரா, வீடியோ மிக்சர் என பல வகைகளிலும் இந்த துறை மாணவர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்படுவதாக அந்த துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜம் தெரிவித்தார்.

தினமும் ஏதாவது கருத்தரங்கம் (கான்பரன்ஸ்) நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு இருக்கக் கூடிய பேராசிரியர்கள் அனைவரும் கல்வியில் முதன்மை இடம் பிடித்துள்ளவர்கள். வெளி நாட்டில் பிஎஹ்டி க்கு மேலே படித்தவர்களும் இங்கு வேலை பார்கின்றனர். வெளி நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் இங்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு எளிதில் கிட்டுகிறது.  எல்லா மாநிலத்து மாணவர்களும் இங்கு படிப்பதால் கலாச்சார ஒற்றுமை மேம்படுகிறது. பயிற்று மொழி ஆங்கிலமாக உள்ளது.

இதில் என்ன கோர்ஸ் இருக்கிறது பார்க்கும் போது, ஐந்து வருட எம்.எஸ்ஸி இன்டக்ரேட்டட் பிரிவும், இரண்டு வருட எம்.ஏ பிரிவும் இரண்டு வருட எம்.எஸ்ஸி பிரிவும் பிஎஹ்டி படிப்பும் இருக்கிறது. சியுடிஎன் பின் வரும் நிறுவனங்களுடன் சில கற்றல் நிலைகளை ஒப்பந்த முறையில் கொண்டு சில படிப்புகளை வழங்குகிறது, அவை: Madras School of Economics (MSE) , Central Institute of Classial Tamil   (CICT) National Law School of India (NLSIU) and Tamil Nadu Agricultrual University (TNAU).

 
என்னவெல்லாம் கோர்ஸ்கள் இருக்கின்றன? 


Five Years M.Sc  Integrated Courses (after 10+2)

                Integrated MSc. Chemistry

                Integrated MSc. Economics *

                Integrated MSc. Life Sciences

                Integrated MSc. Mathematics

                Integrated MSc. Physics

 
Two Year M.Sc Couses (after graduation)

               MSc. Chemistry

               MSc General Economics**

               MSc Financial Economics**

              MSc Acturarial Economics**

              MSc Environmental Economics**

              MSc Aplied Quantitative Finance **

 

Two Year M.Tech Courses *** ( after graduation)

M.Tech Material Science & Nano Technology

M.Tech Energy & Environmental Technology

 

Two Year M. A Courses ( after graduation)


M.A English Studies

M.A HIndhi

M.A Media & Communication

M.A Social Work

M.A Tamil

 

Ph D ( after post graduation)

Ph D in Chemistry

Ph D in Economics

Ph D in English

Ph D in Lifescience

Ph D in Mathematics

Ph D in Physics

Ph D in Tamil

    

*Academic Mentoring by Madras School of Economics, Chennai

**  Conducted at Madras School of Ecoonomics (MSE) Chennai

*** Programmes provisionallu proposed from the academic year 2015-2016

 

 இங்கு படிக்கும் அனுபவம் எப்படி என சில மாணவர்களிடம் கேட்டபோது...

பிந்துஜா ( எம்.ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் இரண்டாமாண்டு, கேரளா)

கேரள மத்திய பல்கலை கழகத்தில் படிக்க முயற்சி செய்தேன்.  ஆனால், சியுடிஎன் சீட் கிடைச்சது. கிட்டத்தட்ட மலையாளம் தமிழ் போல, ஆகவே, இங்கே எனக்கு ஒத்து வரும் என்று தோன்றியது. எல்லாரும் நல்லா பழகுவாங்க. நாமேளே எல்லா பொருட்களையும் இலகுவாக உபயோகப்படுத்தலாம். இங்கே படிக்கறது கொஞ்சம் ஜாலிதான் என கொஞ்சும் குரலில் முடித்தார்.

 
அருண் குமார் ( எம்.ஏ தமிழ் இரண்டாமாண்டு, திருவண்ணாமலை) 

நான் சென்னையில் ஜர்னலிசம் படித்தேன். பின் அச்சு ஊடகம் மீது ஆர்வம் இருந்ததால் எனக்கு தமிழ் படிக்க ஆசை. அதனால் இங்க தமிழ் தேர்ந்தெடுத்தேன்.  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. முடிச்சிட்டு தில்லியில் எம்.பில் பண்ணப் போறேன்.  இங்க படிப்பதால் நிறைய அறிஞர்களின் தொடர்புகள் கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் ஸ்டைபன்ட் வேற உண்டு. நல்ல காற்றோட்டமான வகுப்பு, ஹாஸ்டல் ரூம் இதை தவிர வேற என்ன வேணும் பாஸ்.

 
ஜெய்கரன் ( கணிதம் மூன்றாமாண்டு, உ.பி.) 

நான் நாலைந்து இடங்களில் விண்ணப்பம் போட்டிருந்தேன். இங்க வந்து மூன்று வருடம் முடியப் போகுது. ஹாஸ்டல் வசதி எல்லாம் பரவாயில்லை. நல்ல செமினாரெல்லாம் கண்டக்ட் பண்ணுவாங்க.பயனுள்ளதாக இருக்கும். இப்போதுதான் வளர்ந்து வரதால சியுடிஎன்-க்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாணவர்கள் நிறைய கற்றுக் கொள்ள இங்க இருக்க உபகரணங்கள் உதவும்.

வெங்கடேஸ்வரி (வேதியியல் இரண்டாமாண்டு, தஞ்சாவூர்) 

நான் ப்ளஸ் டூவில் 75%க்கு மேல  மார்க் எடுத்தேன். இங்க படிச்சா நல்லா இருக்கும்ன்னு சொன்னங்க. இருந்தாலும், 'ஹாஸ்டல் ஒத்துக்குமா? அஞ்சு வருடம் தொடர்ந்து படிக்கணுமே...?'ன்னு  கேள்வி வந்துச்சு. சேர்ந்ததுக்கு அப்புறம் அந்த கவலை இல்லை. நான் சேர்ந்தப்ப 3௦ சீட் ஒரு கிளாசுக்கு.  Sc/St 15 பேர்,  Obc 8 பேர்,  General Quota 7 பேர் என்ற முறையில்தான் சேர்த்தாங்க. இப்பவும் அந்த சிஸ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். இன்னும் மூணு வருசத்துக்கு படிப்பு சம்பந்தமா கவலை இல்லை.

நுழைவுத் தேர்வில் தேர்வாகிற நபர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதில் தேர்வாகிற நபர்கள் இங்கு படிக்க தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒருகிணைந்த முதுகலை படிப்பில் ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்" என்றார். 

ஏப்ரல் ஆறாம் தேதி துவங்குகிற ஆன்லைன் விண்ணப்பம் மே ஐந்தாம் தேதியோடு முடிவடைகிறது.  நுழைவு தேர்வுக்கான அட்மிட் கார்டு 21.௦5.2௦15 முதல் தரப்படுகிறது. மத்திய பல்கலை கழகத்துக்கான நுழைவுத் தேர்வு ஜூன் ௦6 & ௦7 தேதி. ஜூன் 2௦ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு. இந்த தேர்வு முறை  பெரும்பாலும் அப்ஜெக்டிவ் டைப் தேர்வாகவே இருக்கும். 

 மற்ற மாநிலங்களில் மத்திய பல்கலைகழகம் இருந்தாலும் அங்கே போட்டி அதிகம் காணப்படும். அங்கே நுழைவு தேர்வு எழுதி மாணவர்கள் இங்கு வந்து படிக்கலாகின்றனர். அவர்களுக்கு போட்டியாக நாளைய தமிழகத்தை தாங்கப் போகிற, இந்தியாவை வலுப்படுத்தப் போகிற தமிழகத்து மாணவர்களும் நிறைய பேர் இதற்கு விண்ணபித்து சியுடிஎன்-னை நிரப்புவார்கள் என்கிற நம்பிக்கையில் அந்த வளாகத்தை விட்டு வெளி ஏறினோம். சவாலை சந்தியுங்கள்.

 மத்திய பல்கலை நுழைவுக்கான இணையதளம் :http://www.cucet2015.co.in/ 


-த.க.தமிழ் பாரதன் (மாணவ பத்திரிகையாளர்)

புகைப்படங்கள்:க.சதீஷ்குமார்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024