Tuesday, May 5, 2015

மயான புத்ரி! ஆச்சர்யமூட்டும் ஜெயந்தி

cinema.vikatan.com
ன்று, பெண்கள் செய்யாத வேலை என்று எதுவும் இல்லை. அந்த வகையில், மின்மயானத்தில் சிதையூட்டும் பெண்ணாக நிமிர்ந்து பார்க்க வைக்கிறார், நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி. நாமக்கல் நகராட்சியும், யுனைடெட் வெல்ஃபேர் அறக்கட்டளையும் இணைந்து நடத்திவரும் மின்மயானத்தில் மேனேஜராகவும், சிதையூட்டும் பணியாளராகவும் வேலை செய்து வரும் ஜெயந்தி, பிராமண இனத்தைச் சேர்ந்த பெண்!
‘‘இந்த பாடியை முடிச்சிட்டு வந்துடறேன்...’’ என்ற ஜெயந்தி, அரை மணி நேரத்தில் வந்தார்.
‘‘பக்கத்துல இருக்கிற கூலிப்பட்டி கிராமத்துல பிறந்தவ நான். அப்பா பட்டுகுருக்கள், சிவன் கோயில் அர்ச்சகர். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க. நான்தான் கடைசிங்கிறதால, அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம். எம்.ஏ முடிச்ச நேரத்துல வேற ஜாதியைச் சேர்ந்த வாசுதேவனைக் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்கம்மா, அக்கா எல்லோரும் என்னை ஒதுக்க, அப்பா மட்டும் எதிர்க்கல. கணவர் வீட்டுல என்னை ஏத்துக்கிட்டாங்க. எனக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்தன.
 என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு. அவரை அடக்கம் பண்ணும்போது, பெண்ணா இருந்தாலும் நான் அங்கே இருந்தேன். அப்போ ஓர் உடலா இல்லாம, தெய்வமாதான் தெரிஞ்சாரு எங்கப்பா. நான் தையல் வேலை கத்துக்கிட்டு, அதை செய்திட்டிருந்தேன். தையல் மெஷினை மிதிக்க மிதிக்க வயித்துவலி அதிகமாக... டாக்டர், வயித்துல ரெண்டரை கிலோ கட்டி இருக்கிறதா சொன்னாங்க. சீரியஸான நிலையில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனேன். உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எங்கப்பாதான் தெய்வமா இருந்து அறுவை சிகிச்சையில் என்னைக் காப்பாத்திக் கொடுத்தார்.
வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் என்ற குடும்பச் சூழலில்தான், நாலு வருஷத்துக்கு முன்ன இந்த மின்மயானத்துல தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வந்தேன். இடிபாடுகளாவும், மண்டை ஓடு, எலும்புகளாவும் இருந்த இடத்தை, நானும், மலர்னு ஒரு பெண்ணும் சேர்ந்து மூணே மாசத்துல பச்சைப்பசேல் தோட்டமா மாத்தினோம். சில மாசங்கள்ல, சிதையூட்டிட்டு இருந்த ஆண்கள் வேலையை விட்டுப் போக, நான் அந்த வேலையைச் செய்றேன்னு நிர்வாகத்துக்கிட்ட கேட்டேன். ‘உன்னோட கணவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா வேலை தர்றோம்'னு சொல்லிட்டாங்க. வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வெச்சு இந்த வேலையில சேர்ந்தேன். என்னோட பணி நேர்த்தியைப் பார்த்து, ஒரே வருஷத்துக்குள்ள, என்னையே இந்த மின்மயானததுக்கு மேனேஜர் ஆக்கிச்சு நிர்வாகம்’’ என்ற ஜெயந்தி, தொடர்ந்தார்.
‘‘இறந்தவங்களோட உறவினர்களை எல்லாம் வெளிய அனுப்பிட்டு, நான், எனக்கு உதவியா மலர்னு ரெண்டு பொம் பளைங்க மட்டும், டிராலியில உடலை வைக்கிறதுல இருந்து, கடைசி வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்தாலும், கொஞ்சம்கூட பயந்ததில்ல. அதுக்காக சிதையூட்டும் வேலை சுலபமானதும் இல்ல. இயற்கை மரணம் எய்தினவங்களை சிதையூட்டும்போது, 45 நிமிஷத்துல சாம்பலை எடுத்திடலாம். ஆனா, போஸ்ட் மார்ட்டம் பண்ணின உடலா இருந்தா, சிதையூட்டின கொஞ்ச நேரத்துலயே, சூட்டுல எல்லா உறுப்புகளும் தனியா சிதறி விழும். அதை எல்லாம் மறுபடியும் எடுத்து, மரக்கட்டை மேல போடணும். சிரமமான அந்த வேலைகளை, தைரியமா பண்ணியிருக்கேன்.
ஒரு நாளில் அதிகபட்சமா 9 உடல்கள் வரை, பின்னிரவு வரைகூட இருந்து சிதையூட்டி இருக்கேன். அநாதைப் பிணங்களை இலவசமா சிதையூட்டுவேன். சின்ன வயசுல, பக்கத்துல யாராச்சும் முட்டை சாப்பிட்டாகூட மூக்கை மூடிக்குவேன். இப்போ பிண வாடை பழகிப் போச்சு. அதான் வாழ்க்கை!’’ என்ற ஜெயந்தியின் கண்களிலும் படர்கிறது சிரிப்பு.
‘‘பிணங்கள் எனக்குப் பயம் தராததுக்குக் காரணம், என் அப்பாவை நான் சவமா பார்த்த காட்சிதான். அப்படி இங்க வர்ற சவங்கள் எல்லாம் யாரோட அப்பாவோ, அம்மாவோ, கணவரோ, பிள்ளையோனு நினைக்கும்போது, பயமா இருக்காது... பாவமாதான் இருக்கும். எங்கப்பா போலவே எல்லாரையும் தெய்வமா நினைச்சிக்குவேன். பேய், பிசாசுனு எதிர்மறையா நினைச்சதில்ல. அப்படி நினைக்கிறவங்களால, அடுத்த நொடி இந்த வேலையைப் பார்க்க முடியாம போயிடும்!’’ என்று அழகாக உளவியலும் பேசுகிறார் ஜெயந்தி.
‘‘இப்போ மயானத்துல எனக்கு உதவியா கலாராணி, சாரதானு ரெண்டு பெண்கள் இருக்காங்க’’ என்ற ஜெயந்தி, அந்தப் பெண்களை அறிமுகப்படுத்த, ‘‘ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பரமசிவம் தவிர, நாங்க மூணு பேரும்தான் எல்லா வேலைகளையும் செய்துட்டு இருக்கோம்’’ என்றார் கலாராணி.
‘‘சார், ஆம்பளைங்க செய்ற எல்லா வேலைகளையும் இப்போ பொம்பளைங்களும் செய்றாங்கங்கிறது சந்தோஷமான விஷயம். ஆனா, இது அதைவிட ஸ்பெஷல். ஏன்னா, எல்லா ஆம்பளைங்களாலயும் செய்ய முடியாத வேலை இது. அந்த வகையில நாங்க எல்லாம் சூப்பர்உமன்!’’ என்று துள்ளலுடன் பேசும் சாரதாவுக்கு, வயது 23!
சபாஷ்!

1 comment:

  1. ரொம்பவும் பாராட்டப்படவேண்டியவிஷயம்.

    ReplyDelete

NEWS TODAY 21.12.2024