Tuesday, May 12, 2015

ஜெயலலிதா விடுதலை தேர்தலில் நிற்க தடை நீங்கியது மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார்

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி குமாரசாமி விசாரித்தார்.

ஜெயலலிதா விடுதலை

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமாரசாமி சரியாக காலை 11 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தார். அதைத் தொடர்ந்து தீர்ப்பின் முக்கிய பகுதியை வாசிக்க தொடங்கினார்.

அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோர்ட்டு ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவுக்கு தனிக்கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

இதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதை ரத்து செய்து அவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

சொத்துகளை ஒப்படைக்க வேண்டும்

அத்துடன் இந்த வழக்கில், நிறுவனங்களின் மேல்முறையீட்டில் ஒரு பகுதியை கோர்ட்டு அனுமதிப்பதாகவும், அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி கீழ்க்கோர்ட்டு (தனிக்கோர்ட்டு) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் கூறினார். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் கூறி இருப்பதாவது:-

தவறான முடிவு

இந்த வழக்கில் ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது கீழ்க்கோர்ட்டு ஒரு தவறான முடிவுக்கு வந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதில் சட்ட தடைகள் இல்லாதது மட்டுமல்ல, நீதியின் நலன் கருதி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கில் வருமான வரி விவகாரங்களை ஒரு குறைந்தபட்ச மதிப்பாக கூட எடுத்துக்கொள்ள கீழ்க்கோர்ட்டு மறுத்துவிட்டது. குற்றவாளிகள் தரப்பு ஆவணங்களை கீழ்க்கோர்ட்டு சரியான முறையில் கவனத்தில் கொள்ளவில்லை.

கீழ்க்கோர்ட்டு தனது தீர்ப்பில், குற்றவாளிகள் இந்தியன் வங்கியில் கடன் வாங்கினார்கள் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அதை அவர்களின் வருமானமாக கருதவில்லை. அதனால் கடனை வருமானமாக கருதாமல் கீழ்க்கோர்ட்டு தவறு செய்து உள்ளது. சொத்து மதிப்பீட்டில் பிரச்சினைகள் உள்ளதாக எதிர்தரப்பு எடுத்துக் கூறியும், அது சம்பந்தமான ஆவணங்களை சம்பந்தப்பட்ட காலத்தில் கட்டுமான செலவுடன் ஒப்பிட்டு பார்க்காமல் ஒரு முடிவுக்கு கீழ்க்கோர்ட்டு வந்து இருக்கிறது.

திருமண செலவு

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமலும், ஆவணங்களை பரிசீலிக்காமலும் ஒரு தோராயமாக மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைத்து உள்ளது. இது சந்தேகத்தை எழுப்புகிறது. போதுமான சான்றுகள் இல்லாமலும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சுதாகரன் திருமண செலவு ரூ.3 கோடி என்று கீழ்க்கோர்ட்டு மதிப்பிட்டு இருக்கிறது. இந்த செலவை ஜெயலலிதா செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த செலவு தொகை முழுவதையும் ஜெயலலிதா மீது சுமத்தியது தவறு.

குற்றவாளிகள் சார்பில் வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை கீழ்க்கோர்ட்டு நிராகரித்துவிட்டது. சாட்சிகளை மீண்டும் அழைத்து குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களிடம் கேள்வி கேட்கும்போது, தலைமை விசாரணை அதிகாரியிடம் சொன்னது சரியா? அல்லது குறுக்கு விசாரணையின்போது அவர்கள் கூறியது சரியா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற முறையை தேர்ந்து எடுக்கும்போது அவர்கள் முன்பு சொன்ன பதிலை அழிக்க முடியாது. இந்த முறை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமையும். இந்த வழக்கு குற்றவாளிகளுக்கு சாதகமாக போனதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

ஆதாரங்கள் இல்லை

சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல. ஒட்டுமொத்த விஷயங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளும் போது, கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பும், அதற்கான ஆதாரமும் பலம் குறைந்து காணப்படுகிறது என்பது எனது கருத்து. கீழ்க்கோர்ட்டு கூறிய ஆதாரங்கள் சட்டப்படி வலிமையாக இல்லை.

இவ்வாறு நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

919 பக்கங்களில் தீர்ப்பு

3 நிமிடங்களில் தீர்ப்பின் இந்த முக்கிய பகுதியை அவர் வாசித்து முடித்துவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார். நீதிபதியின் தீர்ப்பு 919 பக்கங்களை கொண்டதாக இருந்தது. அவர் புறப்படும் முன் எதிர்தரப்பு வக்கீல்கள் நீதிபதியை பார்த்து இருகை கூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.

‘ஜெயலலிதா விடுதலை’ என்ற வார்த்தையை நீதிபதி கூறியபோது, அவருடைய வக்கீல்கள் மகிழ்ச்சி பொங்க ‘அம்மா வாழ்க’ என்று கோஷமிட்டனர். அதை பொருட்படுத்தாமல், நீதிபதி தொடர்ந்து தீர்ப்பை வாசித்தார். கோர்ட்டு அறையில் குவிந்து இருந்த வக்கீல்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களின் செல்போன் மூலம் ஜெயலலிதா விடுதலை செய்தியை மின்னல் வேகத்தில் அனுப்பிவைத்தனர்.

பரபரப்பான சூழல்

வக்கீல் குமார் உள்ளிட்ட ஜெயலலிதா தரப்பு வக்கீல்களை பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களின் கருத்தை கேட்டு அறிந்தனர். இதனால் ஐகோர்ட்டு வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. ஐகோர்ட்டுக்கு வெளியே அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் அங்கு கூடி இருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

மீண்டும் முதல்-அமைச்சர்

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ. மற்றும் முதல்-அமைச்சர் பதவியை இழந்ததோடு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்தார். ஆனால் கர்நாடக ஐகோர்ட்டு இப்போது அவரை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து இருப்பதால் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை நீங்கியது.

எனவே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரைவில் கூடி முதல்-அமைச்சராக ஜெயலலிதாவை தேர்ந்து எடுக்க உள்ளனர். எனவே அவர் மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

முதல்-அமைச்சராக பதவி ஏற்ற 6 மாதங்களுக்குள் அவர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆவார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024