Tuesday, May 12, 2015

எதிர்நீச்சல் இவருக்கு வாடிக்கை

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி, அவருக்கு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து 919 பக்க தீர்ப்பு வழங்கியுள்ளார். ஜெயலலிதா மட்டுமல்லாமல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். 19 ஆண்டுகளாக நடந்த நீண்டநெடிய நீதி பயணம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. 1991–1996–ல் முதல்–அமைச்சராக பதவி வகித்தபிறகு அடுத்து நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்ற நிலையில், ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுப்பிரமணியசாமி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், 1996–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18–ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தி.மு.க. அரசில் டிசம்பர் மாதம் 7–ந்தேதி ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். 1997 ஜனவரி மாதம் 3–ந்தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அன்று முதல் நீதிமன்றங்களில் இங்கும் அங்குமாக பந்துபோல சென்றது பயணம். கடந்த செப்டம்பர் மாதம் 27–ந்தேதி பெங்களூரில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கும் மற்ற மூவருக்கும் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதன்காரணமாக அவர் 20 நாட்கள் ஜெயிலுக்கு போகவும், பதவியை இழக்கவும் நேரிட்டது.

மீண்டும் நீதிமன்ற பயணம் விசுவரூபம் எடுத்தது. கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் 41 நாட்கள் அப்பீல் மனு மீதான விசாரணை நடந்தது. இந்த நிலையில், ஜெயலலிதா விடுதலை பெறவேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் விசேஷ பிரார்த்தனைகள், யாகங்களை நடத்தினர். 233 தொண்டர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டதால், உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழ்நாடு முழுவதும் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்துள்ளது. ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் தீர்ப்பளிக்கப்பட்ட விடுதலை, தமிழக அரசில் மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக அரசியலிலேயே பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவை பொருத்தமட்டில், வாழ்க்கையில் அவர் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் பல சோதனைகளை, தடைகளை சந்தித்து எதிர்நீச்சல்கண்டு வெற்றி பெற்றவர். இந்தமுறை சுனாமியை எதிர்த்து நீந்தி வெற்றி பெற்று இருக்கிறார். வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்து, ஒரு வயதிலேயே தந்தையை இழந்து பல கஷ்டங்களை சந்தித்தவர். சர்ச்பார்க் கான்வெண்ட்டில் முதல் மாணவியாக விளங்கியும், தொடர்ந்து படிக்கமுடியாமல் விருப்பத்துக்கு மாறாக சினிமாவில் நடிக்க நேர்ந்தாலும் அதிலும் ஜொலித்தார். 1982–ல் அரசியலில் நுழைந்து, அ.தி.மு.க.வில் சேர்ந்தபிறகும் கட்சியிலும், அரசியலிலும் பல சோதனைகளை சந்தித்தவர். தடைதாண்டி ஓடும் ஓட்டபோட்டிபோல, பல தடைகளை சந்தித்து தோல்வி என்பது எனது அகராதியில் இல்லை என்ற அளவில், இறுதியில் எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அவர் விளையாட்டு போட்டியில் பைனல்போல இப்போது நடந்த போட்டியிலும் வெற்றிபெற்று உள்ளார்.

ஜெயலலிதா முதல்–அமைச்சராக இல்லாத நிலையில், தமிழக அரசில் ஒரு மந்தமான நிலையையும், அரசியலில் ஒரு துடிப்பில்லாத நிலையையும் தமிழக மக்கள் பார்த்துவிட்டனர். அடுத்த சில நாட்களில் மீண்டும் முதல்–அமைச்சராக பொறுப்பேற்கப்போகிறார். சாட்டையை எடுத்து சுழட்டப்போகிறார். மீண்டும் ஒரு வேகமான அரசையும், துடிப்புள்ள அரசியலையும் தமிழ்நாடு சந்திக்க இருக்கிறது. அடுத்தவாரம் மீண்டும் கூடப்போகும் தமிழக சட்டசபையில் புதுப்புது திட்டங்களை, அறிவிப்புகளை அடுக்கடுக்காக மக்கள் எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024