Wednesday, May 6, 2015

தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்றதால் பரபரப்பு பெட்ரோல் ‘பங்க்’கை முற்றுகையிட்டு வாகனஓட்டிகள் போராட்டம்

சேலையூர் அருகே தண்ணீர் கலந்த பெட்ரோல் போடப்பட்டதால் வாகனங்கள் நடுரோட்டில் நின்றன. இதனையடுத்து அந்த பெட்ரோலை விற்பனை செய்த பெட்ரோல் ‘பங்க்’கை முற்றுகையிட்டு வாகனஓட்டிகள் போராட்டம் நடத்தினர்.

தண்ணீர் கலந்த பெட்ரோல்

சென்னையை அடுத்த சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் தனியார் பெட்ரோல் ‘பங்க்’ உள்ளது. இங்கு நேற்று காலை வழக்கம்போல பலர் கார், மோட்டார்சைக்கிள்களில் வந்து பெட்ரோல் போட்டு சென்றனர்.

பெட்ரோல் போட்டு சென்ற வாகனங்கள் சிறிது தூரத்திலேயே நின்று விட்டன. ஒன்றன்பின் ஒன்றாக 50–க்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தங்கள் வாகனங்களில் இருந்த பெட்ரோல் டேங்கை திறந்து பார்த்தனர். அப்போது பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருந்தது தெரியவந்தது.

முற்றுகை

உடனே அவர்கள் பெட்ரோல் ‘பங்க்’கிற்கு சென்றனர். வாகனங்களை தள்ளிக்கொண்டு பொதுமக்கள் கூட்டமாக வருவதை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாகனஓட்டிகள் பெட்ரோல் ‘பங்க்’கை முற்றுகையிட்டனர்.

பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதாக அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு சேலையூர் போலீசார் விரைந்து வந்து வாகனஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீர்கசிவு

பின்னர் பெட்ரோல் ‘பங்க்’ நிர்வாகத்தினர் மெக்கானிக்கை வரவழைத்து வாகனங்களில் இருந்த தண்ணீர் கலந்த பெட்ரோலை வெளியே எடுத்து சுத்தம் செய்தனர். பெட்ரோலுக்கு கொடுத்த பணமும் திருப்பி அளிக்கப்பட்டது. இதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பெட்ரோல் ‘பங்க்’கில் பெட்ரோல் சேமித்து வைக்கப்படும் டேங்க் பூமிக்கு அடியில் உள்ளதால் நீர் கசிவு ஏற்பட்டு பெட்ரோலில் தண்ணீர் கலந்திருக்கலாம் என தெரிகிறது. இதை சீர் செய்யும் பணியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024