Wednesday, May 6, 2015

மது அருந்தி கார் ஓட்டிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி: மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மும்பை: மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என மும்பை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் சென்ற கார் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதில் நூருல்லா மெஹ்பூப் செரிஃப் என்பவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

அன்றைய தினமே கைது செய்யப்பட்ட சல்மான் கான், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் 2002 அக்டோபரில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை 2006ஆம் ஆண்டு பாந்த்ரா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தொடங்கியது.

அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு இவ்வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, புதிதாக விசாரணை தொடங்கியது. 2013ஆம் ஆண்டு சல்மான் மீது மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
சல்மான் கான் மது அருந்தி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டு சாட்சியங்களும் பெறப்பட்டன. இந்நிலையில் சம்பவத்தின் போது தான் கார் ஓட்டவில்லை எனவும், தனது டிரைவர் அசோக் சிங்தான் கார் ஓட்டினார் எனவும் சல்மான் வாக்குமூலம் அளித்தார். அசோக் சிங்கும் நீதிமன்றத்தில் ஆஜராகி அதனை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டி.டபிள்யூ தேஷ்பாண்டே இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி கூறும்போது, உங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகிவிட்டது. சம்பவத்தன்று நீங்கள் மது அருந்தியிருந்தீர்கள். அன்றைய தினம் நீங்களே காரை ஓட்டியிருக்கிறீர்கள். மேலும் லைசன்ஸ் இல்லாமலும் காரை ஓட்டியிருக்கிறீர்கள். இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதைத் தொடர்ந்து சல்மான் கானிடம், "நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா" என நீதிபதி கேட்டார். அதற்கு சல்மான் கான், "நான் காரை ஓட்டவில்லை" என்று தெரிவித்தார்.

நீதிபதி தீர்ப்பு வழங்கும்போது, டெல்லியில் நிகில் நந்தா என்பவர் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்து வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.

நீதிபதி தீர்ப்பு வழங்கும் போது, சல்மான் கான் கண்களில் கண்ணீர் மல்க அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.  

அந்த வழக்கில் சல்மான் கானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024