Thursday, May 7, 2015

யாராக இருந்தால் என்ன?

Dinamani


2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை கார் விபத்தில் ஹிந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது, திரையுலகுக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருப்பினும் இந்தத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
சல்மான் கானை போல, இன்னும் எத்தனை எத்தனையோ மேட்டுக்குடியினரின் போதை சாகசங்களுக்கும், விளையாட்டுகளுக்கும் பலியாகும் சாலையோரவாசிகளின் அவலம் பற்றி அரசும் சரி, நாமும் சரி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்குத் தங்கும் விடுதிகள் அமைத்துக் கொடுக்கத் தவறிவிட்ட அரசையும், மாநகராட்சியையும் கூடத் தீர்ப்பில் கண்டித்திருக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் சல்மான் கானின் வழக்குரைஞர் குறிப்பிட்டதைப்போல, அவர் மனிதாபிமான சேவை புரிந்தவர் என்றாலும்கூட, சாலையோரம் படுத்திருந்த நபரின் மீது மது போதையில் வாகனத்தை ஏற்றிக் கொன்ற செயலை நீதிமன்றம் ஒதுக்கிவிட மறுத்துவிட்டது.
இந்த வழக்கிலிருந்து தான் எப்படியும் தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்த சல்மான் கான், தீர்ப்பு வழங்கும் நாளன்று வரையிலும்கூட தான் காரை ஓட்டவில்லை என்றே குறிப்பிட்டார். இதற்கிடையே, கடைசி முயற்சியாக, உயிரிழப்பை ஏற்படுத்திய காரை கிரேன் மூலம் தூக்கியபோது அது தவறி விழுந்ததாகவும், ஏற்கெனவே காயமடைந்திருந்த நபர் அந்த விபத்தில்தான் இறந்திருக்கிறார் என்றும்கூட ஒரு புதுமையான வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார்கள்.
இந்த வழக்குத் தொடர்பாக சல்மான் கான் மேல்முறையீடு செய்யவும், தண்டனை குறைக்கப்படவும்கூட வாய்ப்புகள் இருக்கின்றன என்றாலும், அவர் மீதான மான் வேட்டை வழக்கு ஒன்றும் இப்போதும் நிலுவையில் இருப்பதையும், அந்த வழக்கில் சல்மான் கானுக்கு எதிரான சாட்சியங்கள் வலுவாக இருப்பதும், அவரது சிறைவாசத்தை மேலும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.

சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் வாகனங்களுக்கு ஓட்டுநர் இருந்தாலும்கூட மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதென்பது அவர்களால் விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது. அதன் விளைவுதான் இத்தகைய விபத்துகளும் மரணங்களும்! குறிப்பாக, வசதி படைத்த இளைஞர்களிடம் இத்தகைய மனநிலை அதிகமாகவே காணப்படுகிறது.
மது அருந்தி போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு தாங்கள் பிடிபட்டாலும் கையூட்டு தந்தால் வீடு சென்றுவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. போக்குவரத்து வட்டார அலுவலர்கள், காவல் துறையினர் இந்த நம்பிக்கையைத் தகர்த்தாலே போதும், மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை கணிசமாக சரியும்.

தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு மசோதாவில் மிகவும் கடுமையான விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மது அருந்தியவர் என நிர்ணயிப்பதற்கான, ரத்தத்தில் சாராய அளவை மேலும் குறைத்துள்ளனர். ஓட்டுநர் உரிம ரத்தும், அபராதமும், தண்டனையும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சட்டத்தைக் கண்டித்து லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள் அண்மையில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தார்கள் என்பதுதான் விந்தையிலும் விந்தை.
ரயில் ஓட்டுநர் ஒவ்வொருவரும் பணியைத் தொடங்கும்போது மது அருந்திய சோதனைக்கு உள்படுத்தப்படவும், ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் சாராயம் இருப்பின் அவரை அன்று பணிசெய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் புதிய நடைமுறையை ரயில்வே அண்மையில் அறிமுகம் செய்தது. இதற்கும் கடும் எதிர்ப்பு.
நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளை அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும், இன்னமும் அந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வரவேயில்லை.

மது அருந்தி, போதையில் வாகனம் ஓட்டினால் எத்தகைய தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்கின்ற விழிப்புணர்வை இன்றைய இளைஞர்களிடமும் நடுவயதினரிடமும் இந்தத் தீர்ப்பு ஒரே நாளில் நாடு முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களிலும் சுட்டுரைகளிலும் இதுபற்றிப் பேசாதவர்களே இல்லை. அந்த வகையில் இந்தத் தீர்ப்பு கணிசமான அச்ச உணர்வைக் கொண்டு சேர்த்திருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி சாலை விபத்து
களில் உலகம் முழுவதிலும் ஓராண்டில் 12 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். 5 கோடிப் பேர் காயமடைகிறார்கள். இவர்களில் மது அருந்திய விபத்தால் மரணமடைவோர் எண்ணிக்கை 4.8 லட்சம். காயமடைவோர் 200 லட்சம் பேர். சற்றொப்ப, பாதிக்குப் பாதி விபத்துகள் மது, போதை மாத்திரைகளால் நேரிடுகின்றன. இந்தியாவில் இந்த விகிதம் 70 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

அதே நேரத்தில், மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக இந்தியாவில் தண்டிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. தண்டிக்கப்படுவோரும் சரி, அபராதம் மற்றும் நீதிமன்றம் கலையும் வரையிலான சிறைத் தண்டனை மட்டுமே பெறுவர். விபத்துகளை ஏற்படுத்திய இனங்களில் மட்டுமே, அதிலும்கூட மது அருந்தியது உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே ஓட்டுநர்கள் சிறை செல்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் இந்தியாவில் மிகமிகக் குறைவு. இதில் பெரும் பணக்காரர்களும், பிரபலங்களும் சிக்காமல் தப்புவதுதான் வழக்கம்.

இப்போது சல்மான் கான் தண்டனை பெற்றிருக்கிறார் என்றால், 13 ஆண்டுகள் வழக்கு இழுத்தடித்துக் கொண்டு, சாட்சிகள் ஜோடிக்கப்பட்டு, ஊடகங்களில் அவர் மன்னிக்கப்பட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு அனுதாபம் ஏற்படுத்தியும்கூட, சட்டம் தனது கடமையை செவ்வனே செய்து முடித்திருக்கிறது. இதுவே இனி வரும் காலங்களில் முன்னுதாரணமாக ஆக்கப்படும் என்பதால் இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024