மதுரை: 'கல்வி நிறுவனங்களில், ஒழுக்கம் முக்கியம்; மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, மிகக் கடுமையாக இருக்கக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேர்வு எழுத தடை:
மதுரை மாவட்டம், சோழவந்தான், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பி.ஏ., (பொருளியல்) மூன்றாமாண்டு படித்த மாணவர் ஒருவர், கடந்த, மார்ச், 15ம் தேதி, மது அருந்தியதாக கூறி, வகுப்பிற்கு வரவும், இறுதி பருவத் தேர்வு எழுதவும் தடை விதித்து, நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 'தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால், என் எதிர்காலம் பாதிக்கப்படும். வகுப்பில் பங்கேற்கவும், தேர்வு எழுத அனுமதித்தும் உத்தரவிட வேண்டும்' என, மாணவர் மனு செய்தார். விசாரணை நடத்திய தனி நீதிபதி, 'மாணவர்கள், எதிர்காலத்தில் தேசத்தை வழி நடத்தக்கூடியவர்கள்; அவர்களுக்கு, ஒழுக்கம் முக்கியம். மனுதாரர், தவறை ஒப்புக்கொண்டுள்ளார்; மனுவை தள்ளுபடி செய்கிறேன்' என்றார். இதை எதிர்த்து, மாணவர் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: கல்லூரி நிர்வாகம், 'மனுதாரரை, ஓராண்டிற்கு தேர்வு எழுத அனுமதிக்க முடியாது' என்ற தடையை நீக்குகிறோம். 'மாணவரை, வகுப்பில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம். ஜூனில் சிறப்புத் தேர்வு நடத்தி முடிவை வெளியிடுவோம்' என, இறுக்க மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக கூறியுள்ளது. இதன் மூலம், மனுதாரர், மேற்படிப்பை தொடர முடியும்.
ஒழுக்கம் முக்கியம்:
கல்லூரி நிர்வாகத்தின் கருத்து ஏற்கும்படி உள்ளது. கல்வி நிறுவனங்களில், ஒழுக்கம் முக்கியம். தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது, மாணவர்களிடம் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் நன்மை, தீமைகளை அறிந்து கையாளத் தெரிய வேண்டும். ஒழுக்கம் முக்கியம் என்பதையும் தாண்டி, வெளி உலக சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம், தங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
கடுமை கூடாது:
மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையும் மிகக் கடுமையாக இருக்கக்கூடாது. கல்லூரி நிர்வாகத்தின் நல்ல முடிவை பாராட்டுகிறோம். தனி நீதிபதியின் உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது; வழக்கு முடிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment