Wednesday, May 6, 2015

பிஞ்சுகளா? பிஞ்சிலே பழுத்ததுகளா? By ஜோதிர்லதா கிரிஜா

Dinamani

இளம் குற்றவாளிகள் பற்றிய பேச்சு அண்மைக்காலமாக ரொம்பவே அடிபட்டுக் கொண்டிருக்கிறது. பதினெட்டு வயது வரையில் உள்ளவர்களை சிறார்கள் எனக் கருதலாம் என்று இருக்கும் சட்டம் திருத்தப்பட்டு, அது பதினாறு வயதாகக் குறைக்கப்பட இருக்கிறது.
மக்களவையில் அது நிறைவேறிவிடக் கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தெரிகின்றன.
ஆனால், சில அமைப்புகள் மட்டுமன்றி மக்களில் ஒரு பகுதியினரும் பதினெட்டைப் பதினாறாகக் குறைக்கக் கூடாது என்று வாதிட்டு வருகின்றனர்.
இவர்களில் ஆண், பெண் இருபாலருமே அடக்கம். ஆண்கள் மறுதலிப்பதில் வியப்பு இல்லை. ஆனால், பெண்களில் சிலரும் ஆட்சேபிக்கின்றனர். அதற்குக் காரணம், அவர்களில் பலரும் ஆண் குழந்தைகளுக்குத் தாய்மார்களாக இருப்பதே காரணமாக இருக்கக்கூடும்.
தங்கள் பிள்ளைகள் அந்தத் தவறுகளைப் புரிந்துவிட்டால் என்ன செய்வது என்கிற கவலையே நியாயக்கண் அவிந்து போனதற்குக் காரணம்.
இதே தாய் - தந்தைமார்கள் தங்கள் மகள்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ, அதன்பின் கொலையும் செய்யப்பட்டாலோ என்ன பேசுவார்கள், அந்தக் குற்றவாளியை எவ்வாறு அணுகுவார்கள் என்பது வெள்ளிடைமலை.
குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சொல்லப்படுகிறது. இது தப்பு என்றே படுகிறது. பிறப்பளவே ஆகும் குணம் என்று இதை மாற்ற வேண்டும் என்றும் தோன்றுகிறது.
மனிதர்கள் முந்தைய பிறவி சார்ந்த நல்ல தன்மைகளுடனும், தீய தன்மைகளுடன் பிறக்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்க வேண்டும். இல்லாவிடில், சில குழந்தைகள் மேதைகளாகவே பிறப்பதன் அடிப்படைதான் என்ன? இதே விதி பொல்லாதக் குணங்களுடனும் அவர்கள் பிறக்கக் கூடிய சாத்தியக்கூற்றையே
விளக்குகிறது.
எத்தனை வயது கடந்தாலும், பெற்றோருக்கு அவர்கள் குழந்தைகளே. ஆனால், அதற்காக என்ன குற்றம் புரிந்தாலும் அவர்களைக் குழந்தைகளாகக் கருதிச் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதோ, மிகக் குறைவான தண்டனைக்குப் பின் வெளியே விடுவதோ தவறாகும்.
அண்மையில் பதினாறு அகவை முடிந்த ஓர் இளைஞன் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ய முயன்றபோது அவனைத் தடுக்க முற்பட்ட அப்பெண்ணின் பாட்டியைக் கொலை செய்துவிட்ட செய்தி நாளிதழ்களில் வந்தது.
தான் செய்யப்போவது தப்பு என்பது தெரிந்திருந்ததால்தானே, அதைத் தடுக்க முயல்பவர்களைக் காயப்படுத்தி அச்சுறுத்தவோ, கொலை செய்யவோ வேண்டும் என்கிற முன் எண்ணத்துடன் அவன் தயாராகக் கத்தியும் கையுமாய் அந்தப் பெண்ணை அணுகி இருந்திருக்க வேண்டும். அந்தப் பெண்ணையும் அச்சுறுத்தும் எண்ணத்துடனும்தானே அவன் திட்டமிட்டு வந்திருக்க வேண்டும்.
இத்தகைய மனப்போக்கு உள்ள பிஞ்சில் பழுத்த வஞ்சகர்களைச் சிறார்கள் என்னும் பட்டியலில் எவ்வாறு சேர்ப்பது?
மேலும், நம் நாட்டில் தண்டனைகள் போதாது. அரபு நாட்டில் கையூட்டு வாங்குபவரின் கையை வெட்டிவிடுவார்களாமே! இங்கே செய்யும் குற்றம் எதுவாக இருப்பினும் பிரியாணி என்ன, முட்டை என்ன, இட்லி - சட்னி என்ன என்று வயிறு முட்டச் சோறு கிடைக்கும் சிறையில் அன்றோ அடைக்கிறார்கள்.
நமது நாட்டில் சிறையிலுள்ள குற்றவாளிகளுக்கு - அவர்கள் வெளியே வர முடிவதில்லை என்பது ஒன்று நீங்கலாக - மற்ற எல்லாமே கிடைக்கச் செய்கிறார்களாமே.
தன் காதலைப் புறக்கணித்த பெண்ணின் மீது அமிலத்தைப் பீய்ச்சி அவளைக் குருடாக்கும் கயவனுக்குச் சிறைத் தண்டனை மட்டுமே போதுமா? அவனையும் குருடாக்க வேண்டியதுதானே நியாயம்.
இப்படி ஒரு சட்டம் இருந்தால், எவனேனும் பெண்கள் மீது அக்கினிக் குழம்பை வீசத் துணிவானா? இப்படிச் செய்யும் கயவர்கள் பதினெட்டைக் கடந்தவர்களாக இருந்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டுமா?
இந்த விஷயத்தில் பைத்தியக்காரத்தனமான ஒரு யோசனையும் சொல்லப்படுகிறது. அதாவது, மனோதத்துவ முறையில் அணுகுமுறை இருக்க வேண்டுமாம்.
இந்தக் குற்றவாளிகளின் குடும்பப் பின்னணி, வளர்ந்த முறை, கல்வி போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, எந்தெந்தக் காரணங்களால் இவர்கள் குற்றவாளிகள் ஆனார்கள் - அதாவது ஆக்கப்பட்டார்கள் - என்பது ஆராயப்பட
வேண்டுமாம்.
சமுதாயம், சுற்றுச்சூழல், குடும்பப் பின்னணி ஆகியவை சரியாக இல்லாவிட்டால், இவர்கள் மன்னிப்புக்கோ, குறைந்த தண்டனைக்கோ உரியவர்களாம்.
அப்படிப் பார்த்தால், இந்த அசட்டுத்தனமான மனோதத்துவம் பதினெட்டைத் தாண்டியவர்களுக்கும் கூடப் பொருந்துமே.
ஆக மொத்தம், எல்லாக் குற்றவாளிகளையும் வெளியே விட்டு விடவேண்டுமா அல்லது சிறையின் சொகுசான வாழ்க்கையைத் தண்டனை என்னும் பெயரால் இவர்களுக்கு அளிக்க வேண்டுமா? இதென்ன பிதற்றல்.
பதின்மர் வயதின் தொடக்கமே பிள்ளைப் பிராயத்தின் முடிவெனக் கருதுவதே சரியாக இருக்கும். அதாவது, பன்னிரண்டு வயது முடிந்ததும் ஒருவரின் குழந்தைப் பருவம் முடிந்து விடுவதாகக் கருதுவதே முறையாக இருக்கும்.
பதினெட்டு வயது நிறைந்தவர்களைக் குழந்தைகள் என்று கூறுவது சரியானதல்ல.
இருபத்தெட்டு வயதுக்காரன் செய்வதைப் பதினாறு, பதினேழு வயதிலேயே செய்யத் துணிபவனுக்குக் குற்றத்தின் தன்மைக்கேற்ற தண்டனையை வழங்க வேண்டுமேயல்லாது, அவனைச் சிறுவன் என்று சொல்லுவது அதனினும் அதிக முட்டாள்தனமானது.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024