Friday, May 8, 2015

மனித உருவில் மிருகங்கள் By மணவை எஸ்.கார்த்திக்

தற்போது நாளேடுகள் உள்பட எந்த ஊடகங்களை எடுத்தாலும், அதில் நாள்தோறும் தவறாமல் இடம் பெறும் செய்தியாகி விட்டது பாலியல் வன்கொடுமை.
ஆரம்பக் காலகட்டங்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வந்த பாலியல் வன்கொடுமைகள், இன்று ஜாதி, மத பேதமோ, மேல்தட்டு, அடித்தட்டு மக்கள் என்ற பாகுபாடோ, படித்தவர், பாமரர் என்ற வேறுபாடோ இன்றி அனைத்துத் தரப்பினரையும் ஆட்டி வைக்கிறது. இது நீதித் துறையையும்கூட விட்டு வைக்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, அது என்னவென்றே அறியாத சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு மனிதன் மிருகமாக மாறி விட்டதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் 1-ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர் சில மனித மிருகங்கள். அதே பெங்களூரில் மற்றொரு பள்ளியில் 8 வயதுச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளார் அதே பள்ளியில் பணிபுரியும் வெறிபிடித்த ஆசிரியர்.
இதுபோன்ற பாலியல் வன்முறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனினும், அவற்றில் பெரும்பாலானவை கெüரவத்துக்காகவோ, பணத்துக்காகவோ மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன. நிர்பயா போன்ற ஒருசில சம்பவங்களே வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.
2012 டிசம்பரில் நள்ளிரவு நேரம் தலைநகர் தில்லியில் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் பயணம் செய்த மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, அப்பேருந்தின் நடத்துநர், ஓட்டுநர் மற்றும் அவர்களது நண்பர்களால் மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க
முடியாது.
நாடு முழுவதும் பெரும் தாக்கத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது இச்சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது மட்டும் விழித்துக் கொள்ளும் நமது அரசுகள், அடுத்த சில மாதங்களிலேயே அதை மறந்து விடுகின்றன (அடுத்த சம்பவம் நிகழும் வரை).
இதனால்தான் அன்று நிர்பயாவுக்கு நிகழ்ந்த அதே கொடுமை இன்று 13 வயதுச் சிறுமிக்கு நேரிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகாவில் பேருந்தில் பயணித்த தாயும், 13 வயதே ஆன அவரது மகளும் அந்தப் பேருந்தின் நடத்துநர், மேலும் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளனர். இதில் அந்தச் சிறுமி உயிரிழந்தது அதைவிடக் கொடுமை.
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது ஐ.நா. சபையின் ஆய்வுத் தகவல்.
கடந்த மக்களவைக் கூட்டத் தொடரின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, 2010-ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் குற்றப் போக்குகள் ஆய்வுத் தகவலின்படி, உலக அளவில் கொலைக் குற்றங்களில் இந்தியா 2-ஆவது இடத்திலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 3-ஆவது இடத்திலும் உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 1.29 லட்சமும், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 88 ஆயிரமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் கல்வியறிவின்மை, கலாசாரச் சீரழிவு, செல்லிடப்பேசி, மது என்று பல்வேறு விதமான காரணங்களைக் கூறிவரும் நிலையில், உண்மையிலேயே இதுபோன்ற பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்ன? சற்றே சிந்தித்துப் பார்த்தோமேயானால் ஓர் உண்மை நமக்குப் புலப்படும்.
அதாவது, நமது நாட்டில் சட்டமோ, தண்டனைகளோ கடுமையாக இல்லை என்பதுதான் அது. இதுபோன்ற பாலியல் வன்கொடுமையில் சிக்கும் நபர்கள் நமது நாட்டின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி எவ்வித தண்டனையும் இன்றி வெளியில் வந்து விடுகின்றனர். பிறகு எப்படி குற்றவாளிகள் திருந்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்?
அரபு நாடுகளில் திருட்டுக்குத் தண்டனையாக கையை வெட்டுகிறார்கள். இதுபோன்ற தவறுகளுக்குத் தலையை வெட்டுகிறார்கள்.
ஆனால், நமது நாட்டிலோ பயங்கரவாதிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளையும் நீக்கிக் கொண்டல்லவா இருக்கிறோம். நாம் தண்டனைகளைக் குறைக்கிறோம், குற்றங்கள் அதிகரிக்கின்றன.
அரபு நாடுகளில் சட்டமும், தண்டனைகளும் கடுமையாக இருப்பதால் குற்றங்களும் குறைகின்றன.
கழுத்து முழுவதும் நகைகளுடன், நடுநிசி வேளையில் தனியாக, தைரியமாக எப்போது ஒரு பெண் நடந்து செல்கிறாளோ அப்போதுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக பொருள் என்றார் மகாத்மா காந்தி.
ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக அல்லவா இருக்கிறது. நகையே அணியாமல் கணவர் துணையுடன் செல்லும்போதுகூட பெண்களால் தைரியமாக நடமாட முடியவில்லையே... திருட்டு பயமா? அப்படி இருந்தால்கூடப் பரவாயில்லையே, தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அல்லவா இந்தப் போராட்டம்.
நமது நாட்டில் நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகள், அரபு நாடுகளில் எடுக்கப்படும் நடவடிக்கைபோல் கடுமையாக்கப்பட வேண்டும்.
அல்லது சமீபத்தில் வட மாநிலம் ஒன்றில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை, அந்தக் கிராம மக்களே பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுபோல், சட்டத்தை மக்களே தங்களது கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில், ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் மட்டுமே காந்தியடிகள் கண்ட கனவு தேசமாக இந்தியா மாறும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024