கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நிரம்பிவிட்டதால், சென்னை நகர மக்களுக்கு ஜூலை மாதம் வரை தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்தது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கும் நோக்கத்துடன் புதிய வீராணம் திட்டம் அரசு நிதியுதவியுடன் கடந்த 2004-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி முதல் சென்னை நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
வீராணம் ஏரியின் கொள்ளளவு கடந்த மாதம் 24-ஆம் தேதி 556 மில்லியன் கன அடியாக இருந்தது. இதைத் தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து 6,000 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அந்தத் தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக மேலணை, கல்லணை அணைக் கரைக்கு 27-ஆம் தேதி வந்தடைந்தது. அன்றைய தினம் அணைக் கரையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் மூலம் 1,465 மில்லியன் கன அடி முழு கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி வியாழக்கிழமை அன்று முழுவதும் நிரம்பியது.
இதைத் தொடர்ந்து சென்னை நகருக்கு வரும் ஜூலை மாதம் வரை தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment