Friday, May 8, 2015

இன்ஜி.,க்கு 'கட்-ஆப்' அதிகரிக்க வாய்ப்பு : மருத்துவத்திற்கு குறைகிறது

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு 'சென்டம்' எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜி., படிப்புக்கான 'கட் - ஆப்'
அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும்
உயிரியலில், 'சென்டம்' எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு கணிதத்தில் 3,882 பேர் 'சென்டம்' எடுத்தனர்; இது இந்த ஆண்டு இரண்டரை மடங்கு அதிகரித்து 9,710 பேர் 'சென்டம்' எடுத்துள்ளனர். ஆனால் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 'சென்டம்' எண்ணிக்கை கடுமையாக குறைந்து உள்ளது.
எனவே இந்த ஆண்டு பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான 'கட் - ஆப்' மதிப்பெண்; மருத்துவப் படிப்புக்கு 'கட் - ஆப்' குறையும் என கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து கல்வியாளர் ஜெய பிரகாஷ் காந்தி கூறியதாவது:கடந்த பலஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 9,710 பேர் 'சென்டம்'
எடுத்துள்ளனர். இதே போல் 198 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.இதனால் இந்த ஆண்டு இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண் 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.அதனால் கடந்த ஆண்டு 'கட் - ஆப்' மதிப்பெண்ணை விட அதிகம் இருந்தால் மட்டுமே கடந்த ஆண்டு பட்டியலில் உள்ள இன்ஜி., கல்லூரிகளில் சேர முடியும்.இதேபோல் உயிரியல், இயற்பியல், விலங்கியல் போன்றவற்றில் 'சென்டம்' எண்ணிக்கை பெரிய அளவில்
குறைந்துள்ளதால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' மதிப்பெண் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.உதாரணமாக கடந்த ஆண்டு 198.25 என்றால் இந்த ஆண்டு 197.75 என்று மாறலாம். ஆனால் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று 'கட் - ஆப்' வைத்திருப்போர் 800 பேர் வரை உள்ளனர்.இவர்கள் எந்த அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளுக்கு போட்டி போடுகின்றனர் என்பதை வைத்தே இந்த ஆண்டு மாணவர்களுக்கு 'சீட்' கிடைக்கும்.இந்த ஆண்டு இன்னொரு முக்கிய பாடமாக இயற்பியல் வந்துள்ளது. இதில் கடந்த ஆண்டை விட பெரிய அளவில் 'சென்டம்' எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு இயற்பியல் - கணிதம், இயற்பியல் - உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு முக்கியத்துவம் கிடைக்கும். எனவே இந்த ஆண்டு இயற்பியல் மதிப்பெண் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும், என்றார்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024