எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, 2016 பேரவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், பேரணி, மனிதச்சங்கிலி என அரசியல் கட்சிகளையும் விஞ்சும் அளவுக்கு விழிப்புணர்வுப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகளால் வாக்குப்பதிவு எத்தனை சதவீதம் உயரப் போகிறது என்பதை அறிந்துகொள்ள மே 16 வரை பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.
நாள்தோறும் உச்சி வெயிலில் பேரணி, மனிதச் சங்கிலி, கடலில் இறங்கி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நிற்பது, ஒற்றைக்காலில் நின்றுகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முயலுவது என என்னென்னவோ செய்து வந்தாலும், அந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு செய்தியாக மட்டும் தான் இருக்குமேயொழிய, அது வாக்குப் பதிவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பது படிக்காத பாமரனுக்குச் செய்ய வேண்டியது. அவர்கள் தான் விழிப்பாக இருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை சரியாகச் செய்து வருகின்றனரே.
அப்படியென்றால் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இவ்வளவு மேற்கொண்டும் வாக்குப்பதிவை அதிகரிக்க வழியே இல்லையா என்ற கேள்வி எழும்.
100% வாக்குப்பதிவு சாத்தியமே. அதற்கு மத்திய, மாநில அரசுகள், தேர்தல் ஆணையம், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், படித்த மேதாவிகள், மேல்தட்டு மக்கள் என அனைவரது ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
முதலில் வாக்குப்பதிவு குறைவதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 60 முதல் 70% வரை வாக்கு பதிவாகிறது என்றால் கட்சித் தொண்டர்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் ஈடுபாட்டுடன் வந்து காத்திருந்து வாக்களிப்பதாலேயாகும்.
ஆனால், அரசின் அனைத்து சலுகைகளையும் பெறும் அரசு ஊழியர்கள், அரசின் கல்வி உதவித்தொகை உள்பட அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, நிறைய படித்துள்ள அறிவு ஜீவிகள், வரிசையில் வந்து நிற்பதையே கௌரவக் குறைச்சலாக கருதும் மேல்தட்டு மக்கள் போன்றோர் வாக்குப்பதிவு செய்வதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை என்பதாலேயே வாக்குப்பதிவு சதவீதம் குறையக் காரணமாகிறது.
வாக்களிக்க வரவே மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருக்கும் இத்தகையோருக்குப் பாடம் புகட்ட வேண்டிய அவசியமும், அவசரமும் அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உண்டு. சில அமைதியான, அதிரடியான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டியது அவசியம்.
வாக்குப்பதிவு அதிகரிக்க வேண்டுமென்றால் முதலில் வாக்குப்பதிவு செய்யும் முறைகளை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். வாக்களிக்க வர விரும்பாதவர்கள் சொல்லும் காரணங்களில் முக்கியமானது, வாக்குச்சாவடிகளில் வரிசையாக நின்று காத்திருந்து வாக்குப் பதிவு செய்வதை விரும்பாதது; எந்தக் கட்சி ஆண்டாலும் ஊழல் தானே விஞ்சுகிறது என அரசியல்வாதிகள் மீதான மிகப்பெரிய அதிருப்தி போன்றவையே முக்கிய காரணமாகும். இதை சரிசெய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.
வாக்குப் பதிவை எளிமைப்படுத்தும் வகையில், இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப செல்லிடப்பேசி, இணையதளம் வழியாக வாக்குப் பதிவு செய்யும் முறையைக் கொண்டு வரலாம். காலதாமதத்தைத் தவிர்த்தல், வெளியூரில் இருக்கும் வாக்காளர்களும் எளிதில் வாக்குப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தல், எக்கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களையும் கூட, நோட்டாவில் வாக்களிக்க வழி இருப்பதை உணர்த்துதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு செய்தவுடன் யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரம் கிடைக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், வருங்காலத்தில் வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும் வாக்களித்ததற்கான ரசீது அல்லது சான்று வழங்க வேண்டும்.
18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும், அதற்கு பின்னர் பெறப்போகும் அனைத்து நலத் திட்டங்களுக்கும் இந்த சான்றுகளை கண்டிப்பாகப் பயன்படுத்தும் வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
மத்திய அரசு வாக்களிக்காமல் இருப்பதை தேசக்குற்றமாக அறிவிக்க வேண்டும். வாக்களிக்காதவர்களுக்கு அதற்கான தண்டனையையும் கடுமையாக்க வேண்டும். வாக்களிக்காதவர்கள் அரசின் எந்த நலத்திட்டங்களும் பெறத் தகுதியில்லாதவராக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் 100 சதவீத வாக்குப் பதிவு என்பது சாத்தியமாகும்.
No comments:
Post a Comment