நம் நாடு எதிர்நோக்கியுள்ள பல பிரச்னைகளும் தேர்தல் காலங்களில் பின்நோக்கித் தள்ளப்படும் பழக்கம் உருவாகியுள்ளது. நமது மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையவும், அடிப்படைத் தேவைகள் என்ன என்ற விவாதத்தில் எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது கல்வி வளர்ச்சியே. ஆனால், சமீபகாலத்தில் கல்வி வளர்ச்சி மற்றும் தரம் கவனிக்காமல் விடப்பட்டு நமது நாட்டின் பெயர் கெட்டுப்போய் உள்ளது.
1985-ஆம் ஆண்டு நான் அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. வகுப்பில் சேர்ந்தபோது, எனது ஆசிரியர்களில் ஒருவரான லேர்ரி ஃப்ரெஞ்ச், "இந்தியாவில் மெட்ராஸ் யுனிவர்சிட்டி எனக்குத் தெரிந்த ஒன்று' எனக் கூறினார். அதற்குக் காரணம் என்ன என்று அவரிடம் மாணவர்கள் வினவியபோது, "அந்த பல்கலைக்கழகத்திலிருந்து இங்கே வந்து படிக்கும் மாணவர்கள் அசாத்தியமான கல்வித்திறனை வெளிப்படுத்துவார்கள்' எனக் கூறினார்.
இதைவிடவும் பெருமையாக, அன்றைய சூழலில் சக மாணவர்களுடன் விவாதித்தபோது ஒருவர் கூறினார்: "இந்தியாவிலிருந்து வந்த மாணவர்கள் அமெரிக்க பிரஜைகளாகி மிக உயர்ந்த நிலைமையில் இருக்க அந்த நாட்டின் தலைசிறந்த கல்வித் தரமே காரணம். மனிதனை முதன்முதலாக நிலவில் காலடி வைக்கும் திட்டத்தில் மூன்று விண்வெளி விஞ்ஞானிகள் தலைமை ஏற்று நடத்தினார்கள். அதில் இரண்டு பேர் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து உயர் கல்வி பெற்று, பின் அமெரிக்க பிரஜைகளானவர்கள்'.
இப்படி நமக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருந்த நம் நாட்டின் உயர் கல்வித்துறை, இன்றைய நிலைமையில் எப்படி உள்ளது என்பதை நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது. உலகின் தலைசிறந்த 50 பல்கலைக்கழகங்களில் 4 சீனாவில் உள்ளன என்றும் அந்த 50-இல் ஒன்றுகூட இந்தியாவில் கிடையாது என்பதும் இந்த ஆண்டின் நிலைமை.
தரவரிசைப் பட்டியலில் 200 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றே ஒன்றுதான் இந்தியாவில் உள்ளது. அது பாம்பே ஐ.ஐ.டி எனும் உயர் கல்வி நிலையம்! இதே பல்கலைக்கழகம் 2009-ஆம் ஆண்டில் 163-ஆம் நிலைமையிலிருந்தது. இன்றைய நிலையில் அது 24 இடங்கள் கீழே தள்ளப்பட்டு 187-ஆம் நிலைக்குத் தாழ்ந்துள்ளது.
நம் நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்த 9 மாணவ, மாணவியருள் ஒரே ஒருவர்தான் கல்லூரியில் உயர்கல்விக்காக சேர்கிறார். அதாவது, 11% பள்ளி மாணவர்களே கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அமெரிக்காவில் இது 83%.
உயர்கல்வியை முடித்த மாணவர்களின் தரம் பற்றிய ஆய்வை நடத்தியவர்களின் கூற்றுப்படி, கலைக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் 10-இல் ஒருவரும், பொறியியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் நான்கில் ஒருவரும்தான் வேலைக்கு எடுத்துக்கொள்ளும் திறமையைக் கொண்டவர்கள். நம் நாட்டில் இயங்கும் கல்லூரிகளில் 90 சதவீதமும், பல்கலைக்கழகங்களில் 70 சதவீதமும் நடுத்தர மற்றும் தரமற்ற கல்வி நிலையங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளன.
2014-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 677 பல்கலைக்கழகங்களும், 37,204 கல்லூரிகளும் இருக்கின்றன. மிக அதிகமான அளவில் உத்தரப் பிரதேசத்தில் 59 பல்கலைக்கழகங்கள், தமிழ்நாட்டில் 56 மற்றும் ஆந்திரத்தில் 47 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இந்தியாவின் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மொத்தம் 2 கோடியே 96 லட்சத்து, 29,022 மாணவ, மாணவியர் பயிலுகிறார்கள். இதில் 1 கோடியே 60 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 36 லட்சம் பேர் பெண்கள்.
இந்த எண்ணிக்கைகள் ஒருபுறமிருக்க, இவர்கள் கற்கும் கல்வியின் தரம் பற்றி நாம் ஆராய்ந்தால் அது மிகவும் கீழ்மட்டமாக உள்ளது தெரியவரும். பிரிட்டிஷ் அரசாங்கம் விட்டுச் சென்றதுதான் நமது அடிப்படை கல்வி அமைப்பு. ஆங்கில அரசுக்குத் தேவையான அலுவலக உதவியாளர்களைத் தயார் செய்வதே அன்றைய கல்வி நிலையங்களின் தலையான வேலையாயிருந்தது.
நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது 26 பல்கலைக்கழகங்களும், 695 கல்லூரிகளும் இருந்தன. அந்த எண்ணிக்கை வளர்ந்து இன்றைக்கு 30 மடங்கு உயர்ந்த நிலையிலும் 19.4 % மாணவ, மாணவியரே கல்லூரியில் உயர் கல்வி கற்கின்றனர்.
உயர் கல்வி நிலையங்கள் பல்கிப் பெருகுவது ஒருவித வளர்ச்சி என்றபோதிலும், அவற்றின் தரம் வளராத நிலைமையிலேயே உள்ளது.
ஆராய்ச்சி செய்து தேறி வந்தவர்களே கல்லூரி ஆசிரியர்களாக மேலைநாடுகளில் இருக்க முடிந்தது. இந்தியாவில் பட்டப்படிப்பு படித்து முடித்தவர்களே கல்லூரி ஆசிரியர்களாக இருந்தனர். இதன் விளைவாக தரமான கல்வி போதிக்கப்பட முடியவில்லை.
நம் நாட்டின் கல்லூரிகளில் பாடத் திட்டங்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மாற்றியமைக்கப்படும். ஆனால், மேலைநாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் புதிய பாடத்திட்டங்கள் உருவாகும். ஆராய்ச்சிகளில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி அவை புதிய பாடத் திட்டங்களில் புகுத்தப்படும்.
இந்த நடைமுறைக்கு மிக முக்கியமான தேவை கல்வியில் உச்ச நிலையை அடைந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் நடைமுறையே. நான் அமெரிக்காவில் சென்று படிக்கும்போது தான் அங்கே கல்லூரிகளின் உயர் தரத்திற்கு காரணமான பேராசிரியர்களின் ஒப்புயர்வான நடைமுறையைக் காண முடிந்தது. வகுப்பு ஆரம்பிக்கும் முதல் நாள் எல்லா மாணவனுக்கும் பாடத்திட்டத்தை வழங்கி, தனது வகுப்பில் குறிப்பிட்ட நாளில் எந்த பாடம் நடத்தப்படும் என்ற அட்டவணையையும் ஆசிரியர் வழங்கி விடுவார்.
குறிப்பிட்ட ஒரு வகுப்பில் நடத்தப்படும் பாடத்தை கவனித்து புரிந்துகொள்ளும் வகையில் தயாராக வரவேண்டும். அதற்கு எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்றும் ஆசிரியர் கூறிவிடுவார். வகுப்பு ஆரம்பிக்கும்போதே மாணவர்கள் தான் குறிப்பிட்ட பாடப் புத்தகத்தை படித்துவிட்டுத்தான் வந்திருக்கிறார்களா என்பதை பல குறுக்கீடு கேள்விகளைக் கேட்டு தெரிந்து கொள்வார் ஆசிரியர்.
கல்லூரிகளில் பாடம் ஆரம்பித்த சில நாள்களிலேயே எந்த அளவு சரியாக கடின உழைப்புடன் கல்வி கற்க வேண்டும் என்ற நிலைமை எல்லா மாணவர்களுக்கும் எளிதாக புரிந்துவிடும். அதை செய்ய முடியாத மாணவர்கள் கல்லூரி படிப்பை விட்டு விடுவார்கள். சர்வசாதாரணமாக கல்லூரியிலிருந்து விலகி ஒரு சாதாரண வேலையில் சேர்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் கலாசார கட்டமைப்பு அங்கே இருந்ததை நான் கண்கூடாகக் காண முடிந்தது.
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல கண்டுபிடிப்புகளை செய்து முடிக்கும் ஆசிரியர்கள், தங்கள் ஆசிரியர் தொழிலை மிகவும் நேசத்துடன் செய்வதையும் அங்கே காண முடிந்தது. அதிக சம்பளத்துடன் ஒரு தனியார் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்த ஒருவர், அந்த பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கல்லூரி ஆசிரியர் பதவிக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
இங்கே உள்ளது போன்ற தேர்வு முறை கிடையாது. வகுப்பிலேயே ஆசிரியர் கேள்வித்தாள்களை வழங்கி பதிலளிக்க வைப்பார். ஒரு மாணவனை குறிப்பிட்ட பாடத்தை கற்கச் செய்வது முதல் அவனை தேர்வு எழுதச் செய்து மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி பெறச் செய்து உயர் வகுப்பிற்கு அனுப்புவது வரை குறிப்பிட்ட ஆசிரியரின் வேலை என்ற கட்டமைப்பில் உயர் கல்வி அங்கே கற்பிக்கப்படுகிறது.
கடைசியாக ஓர் உதாரணம். எம்.பி.ஏ. பட்டம் பெற கடைசி ஆண்டுக்கான பாடத் திட்டத்தில் ஓர் அம்சம் கூட்டுப்பயிற்சி எனப்படும். வகுப்பில் மாணவ, மாணவியரைப் பல குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தொழில் பிரச்னையைக் கொடுப்பார் ஆசிரியர். பல தொழில்சாலைகளுக்கும், வியாபார நிலையங்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க ஆலோசகர்களை அணுகும் நடைமுறை அமெரிக்காவில் உண்டு.
பல ஆலோசனைகளை எம்.பி.ஏ. பட்டப்படிப்பு உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் வழங்குவதுண்டு.
இதுபோல் வரும் பிரச்னைகளில் பலவற்றைத் தொகுத்து, குறிப்பிட்ட தொழில்சாலைகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் மாணவர் குழுக்களுக்கு தீர்வு கண்டுபிடிக்க பேராசிரியர்கள் கொடுப்பார்கள்.
குறிப்பிட்ட பிரச்னையைப் பெற்றுக்கொண்ட மாணவர் குழு தங்களுக்குள் அந்த பிரச்னையை விவாதித்து சரியான வழிமுறைகளை ஆராய்ந்து பிரச்னையை தீர்ப்பது எப்படி என்ற பதிலை அளிக்க வேண்டும். அதை குறிப்பிட்ட ஒரு நாளில் வகுப்பின் எல்லா மாணவர்கள் மத்தியிலும் வாதம் செய்து சரியான விடையை பேராசிரியர் முன் அளிக்க வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட குழுவின் ஒவ்வொரு மாணவனுக்கும் தகுந்த மதிப்பெண்களை ஆசிரியர் வழங்குவார். இதில் பாடப் புத்தகத்தில் கற்கும் விவரங்களுக்கும் அப்பாற்பட்ட மாணவர்களின் திறமை வெளிப்படும் என்பது அந்த பாடத்திட்டத்தின் கணிப்பு.
இதைப்போலவே எல்லா மாணவர்களுக்கும், "வீட்டிற்கு எடுத்துச்செல்லும் (டேக் ஹோம்) பரீட்சை' என்ற ஒரு திட்டம். கேள்வித்தாள் மாணவனுக்கு அளிக்கப்பட்டு ஒரு வாரத்தில் பதில் எழுதி வரவேண்டும். எந்த பாடப் புத்தகத்தையும் பார்த்து விடை கண்டுபிடிக்கலாம். நூலகத்திற்குச் சென்று பல புத்தகங்களையும் புரட்டிப் பார்த்து விடை தயார் செய்யப்படும். இதன் மூலம் நிறைய புதிய விவரங்களைக் கற்கும் நிலைமை மாணவர்களுக்கு உருவாகும்.
இதுபோன்ற நடைமுறை நான் மாணவனாக இருந்த 1984-86ஆம் ஆண்டுகளில் இருந்த நிலைமை. இன்றைய நிலைமையில் மடிக்கணினிகளின் மூலம் பாடங்களைக் கற்பிக்கும் முறை சர்வசாதாரணமாக அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், பல ஐரோப்பிய நாடுகளிலும், சிங்கப்பூர், ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் உருவாகிவிட்டன!
இதை எல்லாம் புரிந்துகொண்ட நம்மில் பலருக்கும் நமது நாட்டின் உயர் கல்வி நிலையங்களில் உள்ள ஊழல், அரசியல் மற்றும் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரங்கள் மிகுந்த கவலையை அளிப்பது வியப்பல்ல. இந்த மோசமான சூழ்நிலையை உடனடியாக சரிசெய்து நம் நாட்டில் கல்வி அறிவைப் பெருக்கி அதனால் உருவாகும் மாணவர்களின் அறிவு வளத்தை உபயோகித்து நமது பொருளாதாரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் பெரிதாக்குவது போர்க்கால அவசரம் என்பதை நம் நாட்டின் ஆட்சியாளர்கள் உணருவார்களா? என்ற கேள்வி எழுகிறது.
No comments:
Post a Comment