நியாயமான உயர்வு!
By ஆசிரியர்
First Published : 08 April 2016 12:21 AM IST
இந்தியத் தொழில்நுட்ப கல்லூரிகளில் (ஐ.ஐ.டி.) வரும் கல்வியாண்டு முதல், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான கட்டணம் சுமார் இரண்டரை மடங்கு உயர்த்தப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு ரூ.90 ஆயிரமாக இருக்கும் கல்விக் கட்டணம், வரும் கல்வியாண்டில் ரூ.2 லட்சமாக உயர்கிறது.
இப்போதெல்லாம் ஐ.ஐ.டி. மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில்தான் அரசியல் நடைபெறுகிறது என்பதால், இந்த கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இருக்கும். எனினும், இந்தக் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்பதே அனைவரும் அறிந்த உண்மை.
கல்வி நிறுவன பராமரிப்பு மற்றும் பேராசிரியர்களின் ஊதியம், வருகைப் பேராசிரியர்களின் சன்மானம் எல்லாமும் உயர்ந்துகொண்டே போகிறபோது, கல்விக் கட்டணம் மட்டும் உயர்த்தப்படாமல் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அர்த்தமற்றது.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ரூ.70,000 மற்றும் இதர கட்டணங்களும் சேர்த்து ரூ.1.10 லட்சம் வரை ஆண்டுதோறும் செலுத்துகின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரை கல்விக் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.1.35 லட்சமாக இருக்கிறது. இவர்களுடைய இதர கட்டணங்களைச் சேர்த்தால் குறைந்தது ரூ.1.75 லட்சம் வரை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலேயே மிகவும் தரமான கல்வியை அளிக்கும் ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்களில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படுவதில் தவறு இல்லை.
மேலும், ஐ.ஐ.டி.களில் படித்துப் பட்டம் பெறும் மாணவர்கள் வளாக நேர்காணலில் வேலை கிடைக்கப் பெறுகிறார்கள். இவர்களின் சம்பளம் குறைந்தபட்சம் ரூ.12 லட்சம் முதலாக ரூ.2 கோடி வரை. ஆகவே, இந்த அளவுக்கு சம்பளம் பெறக்கூடிய மாணவர்கள் இந்தக் கல்வி நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளில் ரூ.8 லட்சம் செலுத்துவது பெரும் பிரச்னையான விவகாரம் அல்ல.
மேலும், இந்தக் கல்விக் கட்டணம் தொடர்பாக இக் குழு எடுத்துள்ள முடிவு, அனைத்து கல்லூரிகளிலும், அனைத்து வகை படிப்புகளுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை இன்றுள்ளது. கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.2 லட்சமாக உயர்த்தியுள்ள குழுவின் மற்ற பரிந்துரைகள் வருமாறு:
1. ஒவ்வொரு மாணவருக்கும் வட்டியில்லாத கல்விக் கடன் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் (ஒவ்வொரு ஐ.ஐ.டி.யிலும் உள்ள வங்கிக் கிளை இதனைச் செய்யும்).
2. ஐ.ஐ.டி.யில் சேரும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்கள் அனைவரும் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
3. குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு கட்டணக் கழிவு தரப்படும்.
ஐ.ஐ.டி. கல்விக் கட்டணக் குழு எடுத்துள்ள இந்த முடிவு பல தரப்பு மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோன்ற நிபந்தனைகளை அனைத்துக் கல்லூரிகளும் பின்பற்றுமேயானால், அனைவரும் உயர் கல்வி படிப்பதில் தடைஏதும் இருக்காது; பெற்றோர்களுக்கும் நிதிச்சுமை இருக்காது.
உயர் கல்வி படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பிணை இல்லாமல் கல்விக் கடன் வழங்கவும், அவர்கள் அந்தக் கடனை அடைக்கும் வரை அவர்களது கல்விச் சான்றுகள் வங்கியுடன் பிணைக்கப்பட்ட ஆவணமாக நீடிக்க வேண்டும் என்பதுமான ஒரேயொரு நிபந்தனையானது, தற்போது வங்கிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான கல்விக் கடன் பிரச்னைக்கு எளிய தீர்வாக அமையும்.
இப்போது வங்கிகள் கல்விக் கடன் அளிக்கத் தயங்கக் காரணம், இந்த மாணவர்கள் கல்விக் கடனை செலுத்த வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதும், இந்தக் கடனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற எண்ணமும்தான். கல்விச் சான்றிதழ்கள் பிணைக்கப்பட்ட ஆவணமாக மாறும்போது, அவர்கள் நிச்சயமாக இந்தக் கடனை அடைக்க முற்படுவர். மேலும், இது மாணவர்களின் முழு உழைப்பு சார்ந்ததாக அமையும். பெற்றோர் இது குறித்து கவலைப்பட வேண்டிய தேவை இருக்காது.
ஐ.ஐ.டி. கல்விக் குழுமம் செய்திருப்பதைப் போல, குடும்ப ஊதியம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்காகக் குறைப்பது குறித்து அனைத்து கல்வி நிறுவனங்களும் முடிவெடுப்பது சமூகப் பயன் சார்ந்ததாக இருக்கும். இன்று பெரும்பாலானோர் தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கின்றனர். அனைவரும் அதிக சம்பளம் வாங்குவோர் அல்லர். அவரவர் சம்பளத்துக்கு ஏற்ப, குழந்தைகளின் கல்விக் கட்டணமும் அமைக்கப்பட்டால், அந்தக் குடும்பங்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடும்.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற அரசுக் கல்லூரிகளுக்கு மட்டுமே அல்லாமல், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இதேபோன்ற நிபந்தனைகளுடன் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட அரசு முயல வேண்டும். குறிப்பாக, மருத்துவக் கல்லூரிகளில் இவ்வாறான, குடும்பத் தலைவரின் மாத ஊதியத்துக்கு ஏற்ப கல்விக் கட்டணத்தைக் குறைக்கும் போக்கு, அமல்படுத்தப்பட வேண்டும்.
உயர்கல்வி பயிலும் அனைவருக்கும் கல்விக் கடன், அவரவர் குடும்ப வருமானத்துக்கு ஏற்ப சலுகையுடன் கல்விக் கட்டணம் - இந்த இரண்டும் இன்றைய கல்விமுறையின் கட்டாயங்கள். இதை சாத்தியமாக்கும் அரசுக்கு வாழையடி வாழையென அந்த மாணவர்கள் நன்றி சொல்வார்கள்.

No comments:
Post a Comment