Tuesday, April 12, 2016

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக்கொலை

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக்கொலை..DAILY THANTHI

புதுடெல்லி,

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த மற்றொரு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மாணவர்கள்
உக்ரைன் நாட்டில் உள்ள உஷ்கோராடு மருத்துவ கல்லூரியில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த பிரணவ் ஷைன்தில்யா, காசியாபாத்தைச் சேர்ந்த அன்குர் சிங் மற்றும் ஆக்ராவைச் சேர்ந்த இந்திரஜித்சிங் சவுகான் ஆகியோர் படித்து வருகிறார்கள்.

இவர்களில் பிரணவ் சைன்தில்யா 3–ம் ஆண்டு படித்து வந்தார். அன்குர் சிங் 4–ம் ஆண்டு படித்து வந்தார்.

2 மாணவர்கள் கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 3 மணிக்கு இந்திய மாணவர்கள் 3 பேரையும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கத்தியால் சரமாரியாக குத்தினர். இந்த கொலைவெறி தாக்குதலில் மாணவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர், அந்த மாணவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த பிரணவ் சைன்தில்யாவும், அன்குர் சிங்கும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்திரஜித்சிங் சவுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய மாணவர்கள் குத்திக்கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

3 பேர் கைது
இந்த நிலையில் மாணவர்களை கத்தியால் குத்திய 3 பேரும் உக்ரைன் நாட்டு எல்லையை தாண்டி தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மாணவர்களின் பாஸ்போர்ட்டுகள், ஆவணங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவம் குறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சுவரப் கூறுகையில், ‘மாணவர்கள் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார், பல்கலைக்கழக பொறுப்பு அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். உடல்களை இந்தியா எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே 2 மாணவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...