Thursday, December 15, 2016


இப்படியும் பொதுச் செயலாளர் ஆகலாம்!' -சசிகலாவின் புது வியூகம்


அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்யும் வேலைகள் தொடங்கிவிட்டன. 'கட்சியின் சட்டவிதிகளைப் பயன்படுத்தி, பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் அடுத்தகட்ட தலைமையை தீர்மானிக்கும் வேலைகள் வேகம் பெற்றுள்ளன. செங்கோட்டையன், ராஜ கண்ணப்பன், மதுசூதனன் உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஒருமனதாக, சசிகலாவை பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தியுள்ளனர். ' கட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சின்னம்மாவால் மட்டுமே ஈடுகட்ட முடியும்' எனவும் அவர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், ' 2011-ம் ஆண்டு ஜெயலலிதாவால் கார்டனில் இருந்தும் கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார் சசிகலா. அப்படிப் பார்த்தால் கட்சியின் உறுப்பினராக, தொடர்ந்து ஐந்தாண்டுகளை அவர் நிறைவு செய்யவில்லை. கட்சி விதிப்படி அவர் பொதுச் செயலாளர் ஆக முடியாது' என சசிகலா எதிர்ப்பாளர்கள் பேசி வந்தனர்.

" அ.தி.மு.க பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவும் சசிகலாவுக்கு இருக்கிறது. இதுவரையில் அவருக்கு எதிராக நின்றவர்களையும் ஆதரவாளர்களாக மாற்றிவிட்டார். சட்டரீதியாக தொடரப்படும் வழக்குகளை எதிர்கொள்வதற்கும் அவர் தயாராக இருக்கிறார். இப்படியொரு சூழலால் எதிர்க்கட்சிகள் பலம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை உள்பட அனைவரும் சசிகலா பெயரை முன்னிறுத்தியுள்ளனர்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், உள்கட்சி நிலவரத்தை தொடர்ந்து விவரித்தார்... "சசிகலாவால் கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சீனியர்கள் சிலர், வெளியில் உள்ள ஆட்களைத் தூண்டிவிட்டுச் செயல்படுகின்றனர். முந்தைய காலகட்டங்களில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் சசிகலாவால் ஓரம்கட்டப்பட்டனர். அதன் விளைவாக, தற்போது அவர் முன்னிறுத்தப்படுவதை சிலர் விமர்சிக்கின்றனர். கட்சி விதி எண் 20 மற்றும் 30-ன் படி பார்த்தால், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்கு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் சசிகலா காத்திருக்க வேண்டும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சசிகலா தலைமையை ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் எதிர்பார்க்க முடியாது. அதேநேரம், கட்சிக்கு நெருக்கடியான சூழல் ஏற்படும்போது, பொதுக் குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி, புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யலாம். இதற்கு கட்சியின் சட்டவிதிகள் இடம் இருக்கிறது. பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை அறிவித்தால், கட்சி விதிப்படி வெளியில் உள்ள யாரும் எதுவும் செய்ய முடியாது. சட்டரீதியாகவும் செல்லும் என்பதால் மன்னார்குடி தரப்பினர் உற்சாகத்தில் உள்ளனர்" என்றார் விரிவாக.





"பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் புகார்கள் சென்றுள்ளன. அதில், 'கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு எவ்வாறு நடக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் சசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட இருக்கிறது. அதேபோல், பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கட்சியின் உறுப்பினர்கள் ஒன்று திரண்டும் பொதுச் செயலாளரை தேர்வு செய்யலாம். இதை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு, அந்தந்த மாநிலங்களில் சசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடரும் வேலைகளும் நடந்து வருகின்றன. பொதுக் குழு கூடுவதை சட்டரீதியாக தடுக்கும் வேலைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கட்சிக்காரர்கள் வழக்கு தொடர்ந்தால், தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால், வெளிமாநில அ.தி.மு.கவினர் முன்வைத்து காய்கள் நகர்த்தப்படுகின்றன. நீதிமன்றமும் புதிய பொதுச் செயலாளர் தேர்வுக்குத் தடை விதித்தால், சசிகலா தேர்வு செய்யப்படுவது தாமதமாகலாம்" என்கின்றனர் சசிகலா எதிர்ப்பு அணியைச் சேர்ந்தவர்கள்.

சட்ட நெருக்கடிகளையும் தாண்டி, பொதுக்குழுவுக்கான நேரத்தைக் கணிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024