Tuesday, December 6, 2016

ஜெயலலிதாவுக்கு பிடித்தமான யானைகள்

jeya6


யானைகளின் மனதையும் அறிந்தவராக முதல்வர் ஜெயலலிதா திகழ்ந்தார். ஆண்டுதோறும் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டார். யானைகள் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்பது குறித்து ஜெயலலிதாவே கூறியதாவது:
நீரும் நெருப்பும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக முதுமலை காட்டுக்குச் சென்றிருந்தேன். அந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாநாயகன். நாங்கள் இருவரும் நடித்த ஒரு காதல் காட்சியில் நிறைய யானைகள் இடம் பெற்றன. முதுமலைக் காட்டில் மரங்களை வீழ்த்துவது, அந்த மரங்களை வெட்டும் இடத்துக்கு கொண்டு சேர்ப்பது, வெட்டிய மரத் துண்டுகளை வரிசையாக அடுக்கி வைப்பது, பின்னர் அவற்றை லாரிகளில் ஏற்றுவது போன்ற பணிகளுக்காக யானைகள் பயன்படுத்தப்பட்டன.
அந்த யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்டு மிகவும் சாதுவாக இருந்தன. அங்கே அவற்றில் மிகப்பெரிய யானை ஒன்று என் கவனத்தை ஈர்த்தது.
அந்த யானை குறித்து பாகன் சொன்னவை:
அந்தப் பாகனுக்கு மிகவும் அழகான இளம் மனைவி இருந்தாளாம். ஆனால், அவள் மிகவும் முன் கோபியாம். அண்மையில் பாகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏதோ மனப் பூசல் ஏற்பட, இருவருக்கும் இடையே வாய்ச்சண்டை வலுத்தது. இதனால், கோபம் அடைந்த பாகனின் மனைவி வீட்டைவிட்டு வெளியேறி, தனது பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அவளைச் சமாதானம் செய்வதற்காக எத்தனையோ முறை அங்கு சென்று பாகன் அவளைத் தன்னுடன் திரும்பி வருமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்ட போதிலும், அந்தப் பெண் பிடிவாதமாக வர மறுத்துவிட்டாள். இதனால், சோகத்துடன் பாகன் இருந்து வந்துள்ளான்.
ஓர் இரவு எப்படியோ அந்த யானை, பூட்டப்பட்டிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல், 15 மைல் தொலைவில் இருக்கும் பாகனின் மனைவி ஊருக்குப் புறப்பட்டுவிட்டது. நேராக அந்த ஊருக்குச் சென்று, பாகன் மனைவி இருக்கும் வீட்டை உடைத்து, அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டதாம்.
யானை என்பது அதிசயப் பிறவி. விலங்குகளில் ராஜா யானைதான் என்று குறிப்பிட்டார் ஜெயலலிதா.
குருவாயூர் உள்ளிட்ட பல கோயில்களுக்கு யானைகளை முதல்வர் ஜெயலலிதா தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024