ஒரு பெண் முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபம் அல்ல: தமிழிசை புகழஞ்சலி
ஒரு பெண் அரசியல்வாதியாக முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபமான காரியம் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவு குறித்து தமிழிசை இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''மீண்டும் மீண்டு வருவார் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் மாண்டுபோனார் என்ற செய்தி பேரிடியை நன்மை தாக்கி இருக்கிறது. ஒரு துணிச்சல் மிக்க தலைவரை ஒரு மனிதாபிமான தலைவரை மரணம் இன்று கொண்டு சென்றிருப்பதை மனது ஏற்க மறுக்கிறது. தீர்க்கமாக முடிவெடுக்கும் தலைவருக்கு முடிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை சிந்திக்க மனது மறுக்கிறது.
அம்மா அம்மா என்று அழைக்கப்பட்ட அந்த தாய் உள்ளம் இன்று இல்லை என்பதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது, ஜெ என்ற பெருமை ஆண்டிருந்தது, தற்போது வெறுமை தமிழகத்தை சூழ்ந்திருக்கிறது. அவரின் இழப்பை தனிப்பட்ட இழப்பாகவே நான் கருதுகிறேன். ஒரு பெண் அரசியல் வாதியாக முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபமான காரியம் அல்ல.
உடல்நலம் சரியில்லாதபோதும் கடுமையாக உழைத்து, கடுமையாக சுற்றுப்பயணம் செய்து தன் கட்சியை வெற்றி பெற செய்த மரியாதைக்குரிய ஜெயலலிதா முழுவதுமாக முடியும் வரை முதல்வராக இருப்பார் என்று நினைத்தபோது முதல்வராக இருக்கும்போதே அவருக்கு முடிவு வந்திருப்பதை நம்ப முடியவில்லை.
உடல் நிலை தேற வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தோம், இன்று இழப்பை தாங்கும் உறுதியை இறைவன் தர வேண்டும் என பிரார்த்திப்போம். அவர்களின் தொண்டர்கள் தனது தாயை இழந்து தவிக்கிறார்கள், அவர்களுடனும் தமிழக மக்களுடனும் எனது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்.
மரியாதைக்குரிய ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஒரு துணிச்சலை துணிச்சலாக கொண்டு செல்லும் துணிச்சல் மரணத்திற்கு எப்படி வந்தது என்று வியந்து கொண்டிருக்கிறேன், அழுதும் கொண்டிருக்கிறேன். தமிழக பாஜக வின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.
No comments:
Post a Comment