Friday, December 16, 2016


வரலாற்று சாதனை!

By ஆசிரியர் | Published on : 16th December 2016 02:00 AM

மும்பை வான்கடே மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அடைந்திருக்கும் சரித்திர வெற்றிக்காக, அந்த அணியினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ராஜ்கோட், விசாகப்பட்டினம், மொஹாலி, மும்பை, சென்னை என்று ஐந்து நகரங்களில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், ராஜ்கோட்டில் நடந்த முதல் பந்தயம் இரு தரப்புக்கும் வெற்றியில்லாமல் சமனில் முடிந்தது. அடுத்ததாக, விசாகப்பட்டினம், மொஹாலி வெற்றியைத் தொடர்ந்து இப்போது மும்பையிலும் வெற்றி பெற்று 3-0 என்கிற அளவில் இந்தியா இந்த டெஸ்ட் பந்தயத் தொடரை வென்றிருக்கிறது.
மும்பையில் இந்தியா அடைந்திருக்கும் வெற்றி என்பது சாதாரணமானதல்ல. இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது யாருமே எதிர்பாராத திருப்பம். இத்தனைக்கும் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 400 ரன்களைக் குவித்தபோது, பலரும் இந்தியா தோல்வியைத் தழுவும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து ஆடிய இந்திய அணி 182.3 ஓவர்களில் 631 ரன்களை குவிக்க, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்தால் அதை எட்டிப் பிடிக்க முடியவில்லை.
மும்பை டெஸ்டில் இந்தியா அடைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்கு முக்கியக் காரணம் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங்கும், அஸ்வினின் அபாரமான பந்து வீச்சும் என்றாலும், ஒட்டுமொத்த இந்திய அணியும் இந்த வெற்றிக்குப் பங்களிப்பு நல்கி இருக்கிறது. விராட் கோலியின் இரட்டை சதத்திற்கு எள்ளளவும் குறைந்ததல்ல, ஒன்பதாவது ஆட்டக்காரராகக் களமிறங்கி 104 ரன்களை எடுத்த ஜெயந்த் யாதவின் பங்களிப்பு. முரளி விஜய் (136), சேதேஷ்வர் புஜாரா (47) ஆகியோரின் ஆட்டமும் இந்தியா 631 ரன்களைக் குவித்து இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தன.
சுழற்பந்து வீச்சாளரான நம்ம ஊர் அஸ்வின் இந்தியக் கிரிக்கெட் வானில் தமிழகத்தின் கொடியை மீண்டும் பறக்க விட்டிருக்கிறார். ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பதே பெரிய சாதனை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்திருக்கிறார். இன்று சென்னையில் தொடங்க இருக்கும் கடைசி டெஸ்ட் பந்தயத்திலும் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், அது இன்னுமொரு சாதனையாக இருக்கும். வருங்காலத்தில், இவர் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரின் சாதனைகளை முறியடித்தாலும் வியப்படைவதற்கில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் நாம் பெருமைப்படுவதற்கு நிறையவே இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த மூன்று டெஸ்ட் தொடர்களிலும் நாம் தோல்வியைத் தழுவியிருக்கிறோம். 2011, 2014-இல் இங்கிலாந்திலும், 2012-இல் இந்தியாவிலும் நடந்த இந்த டெஸ்ட் பந்தயங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா முதலிடம் பெறுவதைத் தடுத்தன. இப்போது விராட் கோலி தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு நிலைமையே வேறு.
கடந்த 17 டெஸ்ட் பந்தயங்களில் இந்தியா ஒரு முறைகூடத் தோல்வியைத் தழுவியதில்லை. 13 பந்தயங்களில் வெற்றி, நான்கு போட்டிகள் டிராவில் முடிந்தன. இதற்கு முன்னால் 1985 முதல் 1987 வரையிலான காலகட்டத்தில் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி தோல்வியைத் தழுவாமல் 17 போட்டிகளை சந்தித்தது. ஆனால், அப்போது 12 போட்டிகள் டிராவிலும், ஒரு போட்டி "டை'யிலும், நான்கில் மட்டுமே வெற்றியும் கிட்டின. இப்போது விராட் கோலி தலைமையிலான அணி 17-இல் 13 பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
அனில் கும்ப்ளே பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும், அவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையேயான புரிதல் நன்றாக இருப்பதும், விராட் கோலியின் குழுவினருக்குள் இருக்கும் ஒற்றுமையும்தான் இந்திய அணியின் தொடர் வெற்றிக்குக் காரணம். இலங்கை, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, இங்கிலாந்து என்று ஐந்து நாட்டு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இந்தியா வென்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் இதேபோல இந்தியா வெற்றியை நிகழ்த்துமானால் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் குழுவாக விராட் கோலி தலைமையிலான இந்தியக் குழு புகழ் சூடும்.
அலாஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து குழுவினரின் ஆட்டத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அந்த அணியினர் தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த பிறகும்கூடத் தளராமல் மும்பை டெஸ்டில் விளையாடி 400 ரன்களைக் குவித்தனர். ஜென்னிங்ஸின் சதமும், ஜோஸ் பட்லரின் 76 ரன்களும் இங்கிலாந்து அணியைக் காப்பாற்றாமல் போனதற்கு, அந்த அணி இந்திய மைதானத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததுதான் காரணம். மும்பை வான்கடே மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான மைதானம். அதில் இங்கிலாந்து அணி தொடர்ந்து களமிறக்கியது வேகப்பந்து வீச்சாளர்களை. அந்தப் பந்துகளை விராட் கோலி சர்வ சாதாரணமாக பவுண்டரியாகவும், சிக்ஸராகவும் விளாசித் தள்ளிவிட்டார்.
இந்திய அணியைப் பொருத்தவரை, பேட்டிங் அருமை, சுழற்பந்து வீச்சு சிறப்பு, தொடக்கப் பந்து வீச்சு அற்புதம் என்று கூறும்படியாக அமைந்திருந்ததுதான் வெற்றியின் ரகசியம். "எங்கள் வீரர்களின் கடும் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி' என்று விராட் கோலி கூறினாலும்கூட, இது உண்மையில் விராட் கோலியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி என்பதுதான் நிஜம்.
இந்திய மைதானத்தில் விராட் கோலி அணியினர் ஈட்டியிருக்கும் இதே வெற்றியைத் தொடர்ந்து வெளிநாட்டு மைதானங்களிலும் ஈட்டி வெற்றி வாகை சூடவேண்டும். அதற்கான திறமையும், வாய்ப்பும் நிறையவே உண்டு!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024