Friday, May 26, 2017

இன்னும் 5 ஆண்டுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30க்கு கிடைக்கும்

2017-05-26@ 00:32:00




புதுடெல்லி: இன்னும் 5 ஆண்டுகளில் பெட்ரோல் விலை வெறும் 30 ரூபாய்க்கு கிடைக்கும் என்று, பிரபல அமெரிக்க பொருளாதார நிபுணர் டோனி சேபா தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பொருளாதார நிபுணராகவும், ரேட்டிங்ஸ் எனப்படும் எதிர்கால சூழ்நிலைகளை கணிக்கும் நிறுவன தலைவருமாக இருப்பவர் டோனி சேபா. சமீபத்தில் 2020-30 போக்குவரத்து நிலை குறித்த இவரது அறிக்கையை ஸ்டான்போர்ட் பல்கலை வெளியிட்டிருந்தது. இதில் இன்னும் 8 ஆண்டில் எரிபொருள் வாகனங்கள் படிப்படியாக மறைந்துவிடும். புதிதாக வாங்குபவர்கள் எலக்ட்ரிக் வாகனங்களேயே தேர்வு செய்வார்கள். இதனால், பெட்ரோல், டீசல் தேவை குறைந்து அவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சியடையும். அனைத்து வாகன போக்குவரத்தும் தானாகவே செயல்படும் எலக்ட்ரானிக் கட்டுப்பாடு கொண்ட மின்சார வாகன மயமாகிவிடும். 20ம் நூற்றாண்டில் துவக்கத்தில் மோட்டார் வாகன துறை புரட்சி ஏற்பட்டது போல, அடுத்த 15 ஆண்டுகளில் 95 சதவீத மக்களிடம் சொந்த பயன்பாட்டுக்காக கார் வைத்திருக்க மாட்டார்கள். காரணம், கார்கள் விலை அந்த அளவுக்கு உயர்ந்துவிடும் என தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பை சேபா வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: தானியங்கி கார்கள் உற்பத்தி, பயன்பாடு அதிகரிக்கும். இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடுத்த 5 ஆண்டுகளில் 25 டாலராக சரிந்துவிடும். கச்சா எண்ணெய் தேவை 2020-21ல் உச்சத்துக்கு செல்லும். பின்னர் 10 ஆண்டுக்குள் 7 கோடி பேரலாக குறைந்துவிடும். பழைய மாடல் கார்களை பலர் வைத்திருந்தாலும், தானியங்கி கார்களும், மின்சார கார்களும் இத்துறையை ஆக்கிரமித்துவிடும் என தெரிவித்துள்ளார். தற்போது கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பேரல் 50 முதல் 54 டாலர் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இது 25 டாலராக குறையும்போது, இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு ₹30 க்கு கிடைப்பது சாத்தியமாகும். இதற்கு முன்பு சூரிய ஒளி எரிசக்தி குறித்து டோனி சேபா கூறியது உண்மையாகியுள்ளது. இதுபோல் இந்த கணிப்பும் நிஜமாகுமா என்பது சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024