Sunday, May 7, 2017

கீழ்ப்பாக்கம் அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் பணியால் 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்





சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.

மே 07, 05:00 AM

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதை மெட்ரோ ரெயில் நிறுவன ஊழியர்கள் உடனடியாக சரி செய்தனர்.

6 அடி பள்ளம்

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கும் வகையில் நடந்து வருகின்றன. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் இருந்து, திருமங்கலம், அண்ணாநகர் வழியாக சென்னை சென்டிரல் வரையிலான மெட்ரோ ரெயில் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலை, டெய்லர்ஸ் சாலை சந்திப்பு அருகே சாலையில் நேற்று காலை 7 மணியளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

சுமார் 6 அடி ஆழத்துக்கு உருவான அந்த பள்ளத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளம் ஏற்பட்டது காலை நேரம் என்பதால் வாகன போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் திடீர் பள்ளத்தில் வாகனங்கள் ஏதும் சிக்கவில்லை. பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.

நிரப்பப்பட்டது

திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, கான்கிரீட் கலவை மூலம் அந்த பள்ளத்தை நிரப்பும் பணி நடந்தது. சுமார் 3 மணி நேரம் இந்த பணி நடைபெற்று காலை 10 மணியளவில் அந்த பள்ளம் முழுமையாக நிரப்பப்பட்டது.

மேலும் பள்ளம் விழுந்த இடத்தின் மேல் இரும்பு தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தின் மேல் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டு இருக்கிறது.

திடீர் பள்ளமானது சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச் சுவர் பகுதியையொட்டி ஏற்பட்டதால், போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை. அதனால், சாலையில் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.

எனினும், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடியதாலும், பள்ளத்தை சீரமைக்கும் பணி காரணமாகவும் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

வாடிக்கையான ஒன்று

மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் அண்மை காலங்களில் தொடர் பள்ளங்கள் விழுவது, விரிசல்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே பயணிக்கின்றனர்.

கடந்த மாதம்(ஏப்ரல்) 9-ந் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே மெட்ரோ ரெயில் பணி காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் மாநகர பஸ் ஒன்றும், டாக்டர் ஒருவரின் காரும் கவிழ்ந்தது நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment

NMC to reduce workload of resident doctors by lowering NEET PG cut-off

NMC to reduce workload of resident doctors by lowering NEET PG cut-off  To utilise the workforce efficiently, pre-clinical and para-clinical...