Sunday, May 7, 2017

தமிழகத்தில் 8 நகரங்களில் 88 ஆயிரம் பேர் இன்று ‘நீட் தேர்வு’ எழுதுகின்றனர் பெண்கள் புடவை அணிந்து வர தடை

தமிழகத்தில் 8 நகரங்களில் 88 ஆயிரம் பேர் இன்று ‘நீட் தேர்வு’ எழுதுகின்றனர் பெண்கள் புடவை அணிந்து வர தடை
 
தமிழகத்தில் உள்ள 8 நகரங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் நீட் தேர்வில் 88 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை, 

தமிழகத்தில் உள்ள 8 நகரங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் நீட் தேர்வில் 88 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர். பெண்கள் புடவை அணிந்து வர தடை செய்யப்பட்டு உள்ளது.

‘நீட் தேர்வு’ 

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு) மூலம் நிரப்பப்படுகின்றன.

அந்தவகையில் பிளஸ்–2 படிப்பு முடித்த மாணவர்கள் 2017–2018–ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கு, நடப்பாண்டு முதல் ‘நீட் நுழைவு தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தேர்வு எழுத நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உள்ள 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடக்கிறது.

 தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் உள்ள மையங்களில் நடக்கும் தேர்வில் 88 ஆயிரத்து 478 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பேனா வழங்கப்படும் 

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பகல் 1 மணி வரை நடக்கிறது. காலை 7.30 மணியில் இருந்து தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். காலை 9.30 மணி முதல் 9.45 மணி வரை ஹால் டிக்கெட் சோதனை நடக்கிறது. 9.45 மணிக்கு உறையை பிரித்து, 10 மணிக்கு தேர்வை எழுதலாம்.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு கூட அனுமதி அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அனுமதி அட்டையின் 2–வது பக்கத்தில் ஒட்ட அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வில் விடைகளை எழுத நீல நிறம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு தேவையான பால்பாயிண்ட் பேனா தேர்வு அறையிலேயே வழங்கப்படும்.

720 மதிப்பெண்கள் 

தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என 4 பாடங்களில் தலா 45 கேள்விகள் வீதம் 180 கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிபெண் வீதம் 720 மதிப்பெண் அளவிற்கு தேர்வு நடக்கிறது.

சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும் அது தவறான பதிவாக கணக்கிடப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 8–ந்தேதி வெளியாகிறது.

சேலை கட்டும் பெண்ணுக்கு அனுமதி இல்லை 

தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள் பை ஆகிய எதையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட விதிவிதமான தங்க ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், பாக்கெட் வகை நொறுக்கு தீனி போன்றவைகளையும் தேர்வு அறைக்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை.

‘ஹாப் ஸ்லீவ்ஸ்’ என்ற அரை கை உடை, மெல்லிய ஆடைகளை

அணிந்து செல்ல வேண்டும். பெரிய பொத்தான், பேட்ஜ், பெரிய அளவிலான ரப்பர் பேண்டுகள், தலையில் அணியும் கிளிப்புகள், பூ போன்ற சிறப்பு அலங்கார ஆடைகளை அணிய கூடாது. சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வர வேண்டும்.

புடவை கட்டி வரும் பெண்கள், வளையல்கள், பர்தா, பைஜாமா குர்தா ஆகியவை அணிந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். மாணவர்கள் ஷூ, சாக்ஸ் முழுக்கை சட்டை, டி–சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர்கண்ணாடி போன்றவை அணிய கூடாது.

சாதாரண வகை பேண்ட், அரைக்கைசட்டை போன்ற ஆடைகளை மட்டும் அணிய வேண்டும்.

தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்தாலே அல்லது பயன்படுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதார் கார்டு அவசியம் 

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சிலர், விண்ணப்பங்களில் தங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்தை மாற்றி பதிவேற்றி உள்ளனர். இதனால் அவர்களுடைய ஹால் டிக்கெட்டுகளில் புகைப்படம் மாறி வந்துள்ளது.

அவ்வாறு வந்துள்ள மாணவர்கள் தங்களின் அசல் ஆதார் அட்டை அல்லது அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை தேர்வு அறைக்கு கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Shape, size of retina veins can predict stroke risk: Study

Shape, size of retina veins can predict stroke risk: Study DurgeshNandan.Jha@timesofindia.com 15.01.2025 New Delhi : The shape and size of v...