Tuesday, May 9, 2017

தொடக்கத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளுக்கு, எதிர்ப்புகளுக்கிடையே உருவானதுதான் 'தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு' என்று கூறப்படும் 'நீட்' தேர்வு ஆகும்.

மே 09, 05:00 AM

ஆனால், தமிழக மாணவர்களுக்கு 'நீட்' தேர்விலிருந்து விலக்குபெற இந்த ஆண்டு சட்டசபையில் மசோதாக்களை நிறைவேற்றியும், பிரதமர், மத்திய-மந்திரிகளை சந்தித்தும் எவ்விதபலனும் இல்லாமல், நேற்று முன்தினம் 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நடந்துவிட்டது. தமிழக மாணவர்கள் புத்திசாலிகள். வழக்கமாக மருத்துவபடிப்பு கவுன்சிலிங்கில் ஏறத்தாழ 35 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள். ஆனால், 'நீட்' தேர்வுக்கு 88,865 பேர் விண்ணப்பம் செய்து தேர்வு எழுத தயாரானார்கள். தமிழ்நாட்டில் விண்ணப்பித்தவர்களில் 96 சதவீத மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இந்தியாவிலேயே மராட்டியம், கேரளாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியது தமிழ்நாட்டில்தான். 8 மாவட்டங்களிலுள்ள 158 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

ஏற்கனவே இந்த தேர்வை எழுதவரும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. எந்த விதமான காகிதங்களோ, ஜாமெட்ரி பாக்ஸ், பென்சில், பிளாஸ்டிக் கைபைகள், கால்குலேட்டர், பேனா, ஸ்கேல், எழுதுவதற்கான அட்டை, பென்டிரைவ், ரப்பர், செல்போன், மணிபர்சுகள் போன்றவை கொண்டுவரக்கூடாது என்றும், கூலிங்கிளாஸ்கள், பெல்ட், தொப்பி, மோதிரம், கம்மல், மூக்குத்தி, ஹேர்பின், கழுத்தில் சங்கிலி, சட்டையில் பேட்ஜ், தலையில் மாட்டும் கிளிப், கைக்கெடிகாரம், பிரேஸ்லெட் மற்றும் உலோகத்தாலான எந்தப்பொருளும் அணிந்திருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு எழுத வந்திருந்த மாணவர்களுக்கு நடந்த கெடுபிடியோ அவர்களை பெரும்பாடு படுத்திவிட்டது.

கொஞ்சம் முழங்கைக்கு சற்று கீழே நீளம்கொண்ட குர்தா அணிந்துவந்த மாணவிகளின் குர்தாவை வெட்டிவிட்டார்கள். முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடைவிதிக்கப்பட்டது. சில மாணவிகள் காதில் உள்ள கம்மலை கழட்ட பெரும்பாடுபட்டார்கள். நீள தலைமுடி உள்ள பெண்கள் எல்லாம் முடியை அவிழ்த்து விரித்துப்போட்டுவிட்டு ஹாலுக்குள் போகச்சொன்னார்கள். காதில் டார்ச் அடித்து பார்த்தார்கள். உடலில் பொட்டு நகைக்கூட போடமுடியாத நிலை, வேலைப்பாடுமிக்க துப்பட்டா அணிந்து வந்திருந்த சில மாணவிகளிடம் துப்பட்டாவை கழட்டிவிட்டுதான் போகவேண்டும் என்று வலியுறுத்தியதால், ஆண்களோடு தேர்வு எழுதுவதற்காக தேர்வு அறைக்குள் செல்லும்போது பெண்கள் கூனி குறுகியபடி சென்ற காட்சி பரிதாபகரமாக இருந்தது. மெட்டல் டிடெக்டரால் உடல்முழுவதும் தடவி சோதனை போட்டார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக பெரிய கொடுமையாக, கேரளாவில் ஒரு மையத்தில் உலோகத்திலான 'ஹ¨க்' இருக்கிறது என்பதற்காக பெண்களை அவர்கள் அணிந்திருந்த மேல் உள்ஆடையை கழட்டிவிட்டு தேர்வு அறைக்குள் செல்லச் சொன்ன கொடுமை நடந்திருக்கிறது. ஆண்-பெண் இருவருமே காலில் 'ஷ¨', ஜீன்ஸ் மற்றும் கருப்புநிற ஆடைகள் எதுவும் அணியக்கூடாது, ஆண்களும் முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்தால், அதை அரைக்கை சட்டையாக கத்திரிக்கோலால் வெட்டினார்கள். மொத்தத்தில், மனமகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வு எழுதுவதற்கு போகவேண்டிய மாணவர்களை, மனஉளைச்சலோடு, குழப்பமான மனஉணர்வோடு தேர்வு எழுதவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கினார்கள்.

மனஉளைச்சலோடு தேர்வு எழுதினால், எப்படி அவர்களால் நன்றாக தேர்வை எழுதியிருக்கமுடியும். கட்டுப்பாடுகள் தேவைதான். அதற்குத்தான் எவ்வளவோ வழிகள் இருக்கிறதே? நடந்துசென்றாலே சோதனை செய்யும் மெட்டல் டிடெக்டர்கள், கண்காணிப்பு கேமராக்கள் என்று இப்போது எவ்வளவோ சாதனங்கள் இருக்கும்போது, மாணவ-மாணவிகளை இப்படி அவமானப்படுத்துவதுபோல் நடக்கும் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கிவிட்டன. தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும்போது, கண்காணிப்பாளர்கள் மட்டும் எவ்விதகட்டுப்பாடும் இல்லாமல், அவர்கள் விதவிதமான நகைகளோடும், ஆடைகளோடும் வந்திருப்பதை கண்ட மாணவ-மாணவிகள் அந்த துன்பத்திலும் சிரித்துக்கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...