Wednesday, May 3, 2017


'ஜெயலலிதா செய்தது தப்புதான்'' - நறநறக்கும் நாஞ்சில் சம்பத்

த.கதிரவன்

ஆதரவு என்றாலும் எதிர்ப்பு என்றாலும், நாஞ்சில் சம்பத்தின் வார்த்தைகளில் காரம் அதிகம் இருக்கும். பல்வேறு அணிகளாகப் பிரிந்து நிற்கும் அ.தி.மு.க-வின் இன்றைய சூழல் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்த நமது கேள்விகளுக்கு நாஞ்சில் சம்பத் பொறுமையாக அளித்த பதில்கள் இங்கே...



''ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பை ஆதரிக்கிறீர்களா?''

''ஆதரவு தெரிவிக்க வேண்டிய தேவையும் இல்லை. இணையவேண்டிய அவசியமும் இல்லை.''

''அணிகளை இணைக்கும் முயற்சியில் இரு தரப்பினரும் மும்முரமாக இருக்கிறார்களே...?''

''நீங்கள் சொல்வதுபோல் இரு அணிகளும் பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வெற்றி பெற்றால் மகிழ்ச்சிதான்!''

''அணிகள் இணையவேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டு, 'இணைந்தால் மகிழ்ச்சிதான்' என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது?''

''இப்போதும் சொல்கிறேன்... இணைய வேண்டிய தேவையோ, அவசியமோ கிடையாது. ஒரு கட்சியை காட்டிக்கொடுத்து, தென்திசை குமரி முதல் திருத்தணி மலையின் எல்லைவரையில் இருக்கிற தொண்டர்களுக்கு மன உளைச்சலைத் தந்த ஒரு பச்சைத் துரோகியை ஏன் தோளிலே தூக்கிவைத்துக் கொஞ்ச வேண்டும் என்றுதான் நான் கேட்கிறேன்... அதற்கு என்ன அவசியம் வந்தது?''

''சசிகலா - டி.டி.வி தினகரன் இருவரும் அ.தி.மு.க-வில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக்கொள்கிறார். இந்த சூழலிலும், நீங்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறீர்களா?''

''டி.டி.வி தினகரன் தமிழக அரசியலில் பெருந்தன்மையின் அடையாளம். 'நான் விலகியிருப்பதன் மூலம் கட்சிக்கும் ஆட்சிக்கும் பாதுகாப்பு என்றால், நான் விலகிக் கொள்கிறேன்' என்று அவர் சொன்னார். ஆனால், அதற்கும் இதற்கும் நீங்கள் முடிச்சுப் போடக்கூடாது.''

''டி.டி.வி தினகரன் விலகியிருப்பது பெருந்தன்மையின் அடையாளம் என்கிறீர்கள். ஆனால், எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்து விலகாமல், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இன்னமும் தொடர்கிறாரே....?''

''எழுத்துபூர்வமாக கொடுக்கவேண்டிய தேவை இல்லை. அப்படி எழுத்துபூர்வமாக எழுதிக் கேட்பதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? 'நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தை' என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடமே நிறம் மாறுகிற இந்தப் பச்சோந்தியிடத்தில் ஏன் பேசவேண்டும்?''

''டி.டி.வி தினகரனும் கைதாகி சிறைவாசத்தில் இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், அ.தி.மு.க-வை வழிநடத்திச் செல்லும் தலைவர் என்று யார் இருக்கிறார்கள்?''

''டி.டி.வி தினகரன் மட்டும்தான் இருக்கிறார். இந்தக் கைது என்ன நிரந்தரமா? அவர் என்ன வெளியே வரவே முடியாதா? வழக்குகளும் வாய்ப்பூட்டுச் சட்டங்களும் ஒன்றும் நிரந்தரமானது அல்ல. அடக்குமுறைகளையும் ஆபத்துகளையும் அறைகூவல்களையும் தாண்டித்தான் ஒரு தலைவன் உருவாக முடியும். அப்படி காலத்தின் கருவறையில் இருந்து டி.டி.வி தினகரன் என்ற தலைவன் உருவாகி வருகிறான். இதுதான் வரலாற்றுக் கட்டாயம்; வரலாற்றுத் தேவை. எனவே அவர்தான் அ.தி.மு.க-வை வழி நடத்துவார்.... அவர்தான் வழிநடத்த வேண்டும்.''

''அப்படியென்றால், 'டி.டி.வி தினகரன் கட்சியை விட்டு ஒதுங்கிவிட்டதாகக் கூறியது கபடநாடகம்' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியது உண்மைதானே...?''

''அவர் போடுவதுதான் கபட நாடகம். 13, 14-ம் தேதி எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா என்று சொல்லி பேச்சு வார்த்தைக்கு ஏன் வரவேண்டும்? எதற்கு இந்த நாடகம்?''

''ஆரம்பத்தில் இருந்தே, 'சசிகலாவும் தினகரனும் கட்சியை விட்டு விலக வேண்டும்' என்பதுதானே ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் நிபந்தனையாக இருக்கிறது?''

''அதைச் சொல்ல இவர் யார்? இவர்தான் இந்தக் கட்சியை உருவாக்கியவரா? கட்சிக்கு வெற்றியை உருவாக்கித் தந்ததாக அவருக்கு ஏதாவது பங்கு இருக்கிறதா? இந்தக் கட்சிக்காக சிறை சென்றவரா? சித்திரவதை அனுபவித்தவரா? காலில் விழுந்து காரியம் சாதிப்பவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கேட்கிறீர்கள்...''



''உங்கள் கூற்றுப்படி எந்தத் தகுதியும் இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தைத்தான், இரண்டு முறை தமிழக முதல்வராக அடையாளப்படுத்தினாரா ஜெயலலிதா?''

''ஜெயலலிதாவால் ஒன்றும் அடையாளம் காட்டப்படவில்லை. ஜெயலலிதா எல்லோரையும்தான் அடையாளம் காட்டுவார்.''

''ஓ.பன்னீர்செல்வத்தை இருமுறை முதல்வராகத் தேர்ந்தெடுத்த ஜெயலலிதாவின் தேர்வே தவறானது என்கிறீர்களா?''

''ஆமாம்... தப்புதான்.
'நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை' என்ற குறளைப் போல...
ஒரு தகுதியற்றவரை, ஒரு பச்சைத் துரோகியை, கட்சியைக் காட்டிக் கொடுக்கிறவரை ஜெயலலிதா கட்சியில் வைத்திருந்ததே தப்புதான்!''

''2001-ல் முதல்வராக்கிய அதே பச்சைத் துரோகியைத்தான் 2014-லும் முதல்வராக்கினார் ஜெயலலிதா. என்று சொல்கிறீர்களா?''

''தெரியாது சார்... தெரியாது. துரோகிகள் தெரியாது. மனிதர்களைப் போல் ஒரு கயவர். அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. துரோகிகளை அடையாளம் காணமுடியாது.''

''தினகரனை எதிர்ப்பதாலேயே ஓ.பன்னீர்செல்வம் பச்சைத் துரோகி என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?''

''அவரை அரசியலில் அறிமுகம் செய்து ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டி ஆளாக்கியவர் டி.டி.வி தினகரன்தான். எனவே, ஜெயலலிதாவுக்கு அவர் விசுவாசமாக இருக்கிறாரோ இல்லையோ... டி.டி.வி தினகரனுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் காலமெல்லாம் விசுவாசமாக இருக்கவேண்டிய கடமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு உண்டு. அந்த நன்றி மறந்து இன்று அவர் நாடகம் போடுகிறார். அவ்வளவுதான்...!''

''தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், பிரிந்து சென்ற அணியினரை இப்படித் திட்டித் தீர்ப்பதிலேயே கவனம் செலுத்திவருவது, எந்த வகையான அரசியல்?''

''இது ஒரு பிரச்னையே கிடையாது... தமிழகம் முழுக்க 35 இடங்களில், மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. மந்திரி சபைக் கூட்டம் நடந்திருக்கிறது. ஆக கட்சியும் ஆட்சியும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் பச்சைத் துரோகிக்கு நேரம் ஒதுக்காமல், இருக்கிற வேலையைப் பார்த்துக்கொண்டு போவதுதான் நல்லது.''

''நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கமுடியவில்லை, விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வில்லை... இதை எப்படி சிறந்த ஆட்சி என்று சொல்வது?''

''நீட் தேர்வுக்கு விலக்கு எல்லாம் நீங்கள் மோடியிடம்தான் கேட்கவேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று தரவேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது. ஆனால், மத்திய அரசு பாராமுகமாகவே நடந்துகொள்கிறது.''

''ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எடுத்த விடா முயற்சியை இப்போதைய முதல்வர் எடுக்கவில்லை... மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?''

''எடப்பாடி பழனிசாமியும் மத்திய அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதிவிட்டார்... நேரிலும் போய் பார்த்துப் பேசிவிட்டார். ஆனால், மோடி தலைமையிலான இந்த மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் தமிழக அரசுக்கு செய்யாது. உங்களுக்குத் தெரியாதா?''

''தமிழக நலன்களுக்காக மத்திய அரசிடம் போராடும் வலிமையோ அல்லது இணக்கத்துடன் நடந்துகொள்ளும் சாதுர்யமோ இப்போதைய முதல்வருக்கு இல்லையா?''

''இணக்கமாக இருக்கவேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம்... எதிர்பார்க்கிறோம். ஆனாலும் அப்படி இணக்கமாக இருப்பதற்கான எந்த அறிகுறியும் என்னுடைய கண்களுக்குத் தெரியவில்லை.''



''ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டுவரச் செய்த ஓ.பன்னீர்செல்வத்தின் சாதனை அவருக்கான நிர்வாகத் திறனைக் காட்டுகிறதுதானே...?''

''ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், காவல்துறையின் அடக்குமுறையை ஏவிவிட்டு, தமிழக அரசுக்கு அவப்பெயரை வாங்கித் தந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவசரச் சட்டம் என்ன ஓ.பன்னீர்செல்வமா கொண்டுவந்தார்?''

''அவருடைய முயற்சியின் பலனாகத்தானே கொண்டுவரப்பட்டது...?''

''எல்லோரும்தான் முயற்சித்தோம்.... சசிகலா வழிகாட்டுதலால்தான் ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெறமுடிந்தது.''

''டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, 'விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்யவில்லை' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சொல்லியிருப்பது துரோகம் இல்லையா?''

''140 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு வரலாறு காணாத வறட்சி இன்றைக்கு தமிழகத்தில் வந்திருக்கிறது. மாநில அரசாங்கம் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு, தன்னுடைய நிதி நிலைமைக்கு ஏற்ப விவசாயிகளுக்கு எவ்வளவு உதவியாக இருக்கமுடியுமோ... அந்தளவுக்கு இருந்து வந்திருக்கிறோம். மாநில உரிமைகள் எதனையும் நாங்கள் காவு கொடுக்கவில்லை. விவசாயிகளின் மீது கரிசனத்தோடுதான் தமிழக அரசு இருக்கிறது. நாங்கள் கேட்டுள்ள வறட்சி நிதியை மத்திய அரசு தந்தாலே, அழிவின் விளிம்பில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற ஏதுவாக இருக்கமுடியும்.

விவசாயப் பிரதிநிதிகள், அய்யாக்கண்ணுவின் தலைமையில் டெல்லியில் நடத்தியப் போராட்டத்தை மதித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தாலே விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள்.''

'' 'விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்யவில்லை' என்று தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது விவசாயிகளுக்கு செய்த துரோகமா... இல்லையா?''

''அதுகுறித்து அபிடவிட் தாக்கல் செய்தவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.'

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024