Friday, June 9, 2017

அதிக சம்பளம் வழங்க முடியாது : அரசு டாக்டர்களுக்கு குழு பதில்

பதிவு செய்த நாள்08ஜூன்2017 21:50

மதுரை: 'தமிழக அரசு டாக்டர்கள், தனியார் மருத்துவமனையில் பணி செய்வதாலும், சொந்தமாக, 'கிளினிக்' நடத்துவதாலும், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க முடியாது' என, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த அமைக்கப்பட்ட குழு மறுத்துள்ளது.

யு.பி.எஸ்.சி., என்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் டாக்டர்களுக்கு, தமிழக அரசு டாக்டர்களை விட அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. 'எங்களுக்கும் அதே சம்பளம் வேண்டும்' என, தமிழக அரசு டாக்டர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த, தமிழக அரசு நியமித்த குழுவினருடன், அரசு டாக்டர்கள் சங்கத்தினர் பேச்சு நடத்தினர். 

இதில், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம், 'தமிழக அரசு டாக்டர்களுக்கு, வழங்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு குழுவினர் மறுத்து விட்டனர்; 'தனியார் மருத்துவமனைகளில் பணி செய்வதாலும், சொந்த, 'கிளினிக்' நடத்துவதாலும் அந்த சம்பளம் வழங்க முடியாது' என குழு பதில் அளித்துள்ளது. இதனால் பேச்சு நடத்திய சங்கத்தினர், 'மத்திய அரசு வழங்குவது போல், தனியாரிடம் பணி செய்யாத அரசு டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாக்டர்கள் கூறிய தாவது: 'கார்ப்பரேட்' மருத்துவமனைகளில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்வது, அங்கு பகுதி நேரமாக பணி செய்யும் அரசு டாக்டர்கள் தான். அவர்கள் அரசு மருத்துவமனைகளில், கற்றுக் கொண்டவற்றை அங்கு செயல்படுத்துகின்றனர். ஆனால், அரசு மருத்துவமனைகளில் திறம்பட பணி செய்யாமல் ஒப்புக்கு வந்து செல்கின்றனர். 

அதிக சம்பளம் அல்லது ஊக்கத்தொகை வழங்குவதால், இந்நிலை மாறி அரசு மருத்துவமனைகள் மேம்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024