Saturday, June 10, 2017

ஆதார் உள்ளவர்களுக்கு கட்டாயம்! : பான் கார்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
பதிவு செய்த நாள்10ஜூன்2017 00:41

புதுடில்லி: புதிதாக பான் கார்டு பெறுவதற்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் சட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

பல்வேறு அரசு நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கு ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதேபோல் புதிதாக பான் கார்டு வாங்குவதற்கும், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது, ஜூலை, 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், பார்லிமென்டில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. 'மத்திய அரசின் உத்தரவு, பல்வேறு அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதை கட்டாயமாக்கக் கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது' என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'பொய்யான தகவல்கள் கொடுத்து பான் கார்டுகள் வாங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆதார் எண்ணில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஆதாரை கட்டாயமாக்கியதால், 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது' என, வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வாதிட்டார்.இதை விசாரித்த, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண் அடங்கிய அமர்வு, தன் தீர்ப்பை, மே, 4ல் ஒத்தி வைத்தது. இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது, புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண்ணை குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது. அதே நேரத்தில், ஆதார் எண் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது; ஆதார் எண், தனி மனித உரிமைக்கு எதிரானது என்று தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் அரசியலமைப்பு அமர்வின் தீர்ப்பு, இந்த வழக்குக்கும் பொருந்தும் என்றும் சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

யாருக்கு விலக்கு? : சுப்ரீம் கோர்ட் அமர்வு அளித்துள்ள தீர்ப்பின் முக்கிய அம்சம்:

 வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் பான் கார்டுக்கு ஆதார் எண்ணை குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் வகையில், வருமான வரிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் செல்லும்

 ஏற்கனவே ஆதார் எண் உள்ளவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக, பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், ஆதார் விபரங்களை அளிக்க வேண்டும்

 அதே நேரத்தில், ஆதார் எண் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது

 ஆதார் எண்ணுக்காக பதிவு செய்து, இதுவரை அந்த எண் கிடைக்காதவர்களுக்கும், கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

 ஆதார் எண், தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்பது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கிறது. அதில் அளிக்கப்படும் தீர்ப்பு, இந்த வழக்குக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment

Driverless metro to begin trials at Madhavaram by '28

Driverless metro to begin trials at Madhavaram by '28  24.12.2024 Chennai : Chennai Metro Rail Limited (CMRL) will begin testing its fir...