Saturday, June 10, 2017

மதுரைக்கு 'எய்ம்ஸ்' வாய்ப்பு நழுவியது ஏன் மந்திரி ராஜினாமா மிரட்டல்

பதிவு செய்த நாள்10ஜூன்2017 01:45




மதுரை:'மதுரையில் தோப்பூர், ஈரோடு- பெருந்துறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் - செங்கிபட்டி என தமிழகத்தில் ஏதாவது ஒரு இடத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம்' என மத்திய அரசு பரிசீலனை செய்தது. ஆனால், தற்போது மதுரைக்கு வாய்ப்பு பறிபோய், தஞ்சையில் அமைக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியான இடம் குறித்து, பத்து கேள்விகளுடன் மத்திய அரசு, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆட்சியாளர்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ளும் குழப்பத்தில் இருந்ததால், மத்திய அரசின் கேள்விக்கு தாமதமாக பதில் அனுப்பினர்.

அதில், 'தஞ்சைதான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியான இடம்' என தெரிவிக்கப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் அமைந்தால், பத்து தென்மாவட்டங்கள் பயன்பெற்றிருக்கும். மத்திய அரசின் பெரிய நிறுவனங்கள் ஏதும் இல்லாத மதுரையில், எய்ம்ஸ் அமையும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எண்ணம் ஈடேறவில்லை. மதுரையின் இரண்டு அமைச்சர்கள், எம்.பி., க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உரிய முயற்சி எடுத்திருந்தால் இது நடந்திருக்கும்.

தடை ஆணை பெறுவோம்

இதுதொடர்பாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் கூறியதாவது: மதுரையில் எய்ம்ஸ் அமைக்க தகுதி இல்லாதது போல் தவறான தகவல்களை தமிழக சுகாதார துறை அமைச்சர் மற்றும் செயலர் கூறியுள்ளனர். ஏற்கனவே தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய மருத்துவமனைகள் உள்ளன.

ஆனால், மதுரையில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை; இங்கு எய்ம்ஸ் வந்தால், மருத்துவ தொழிற்சாலையாக திகழும் சிறு, குறு தொழில்கள் வளரும். தென்மாவட்ட மக்கள் பயன் பெறுவர். தமிழக அரசு அனுப்பிய கடிதத்தில் முழுக்க, முழுக்க அரசியல் தலையீடு இருக்கிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு கூறினார்.

தியாகம் செய்ய தயார்

இதுகுறித்து, திருமங்கலம் தொகுதியை சேர்ந்த அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:

எய்ம்ஸ் அமைக்க தோப்பூர் கோ.புதுப்பட்டியில் புல எண் 122 உட்பட 200 ஏக்கர் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. அதன் பின் மத்திய அரசின் இணை செயலர் தாத்திரி பாண்டா குழு இடத்தை பார்வையிட்டது. அவர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில், மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்து 21 அலுவலர்கள் விளக்கினர். இதுகுறித்து எல்லா துறையினரிடமும் கருத்துரு பெற்றும் அரசுக்கு அனுப்பப்பட்டது.

அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லவில்லை. அருகில் காசநோய் மருத்துவமனையை தவிர வேறு கட்டடங்கள் இல்லை. எனவே இந்த இடத்தில் எய்ம்ஸ் அமைப்பதை தவிர, வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற இயலாது. சர்வதேச விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன், நான்கு வழிச்சாலை என எல்லா கட்டமைப்புகளும் உள்ளன. இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்வரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன். எய்ம்ஸ் இங்கு அமைய என் பதவியை கூட தியாகம் செய்ய தயார்.இவ்வாறு கூறினார்.

முதல்வரிடம் பேசுவேன்

'மதுரைக்கு வர இருந்த எய்ம்ஸ், தஞ்சாவூர் போனது தெரியுமா' என அமைச்சர் செல்லுார் ராஜுவிடம் கேட்டபோது, அவர் கூறியது:மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நினைத்தால், மதுரையில் அமைக்க முடியும். மதுரையில் அமைக்க உறுதியாக உள்ளோம். மருத்துவமனை அமையும் இடத்தில் எரிவாயு குழாய் செல்வதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஆனது. வெளிநாட்டு, வெளிமாநில டாக்டர்கள் வந்து குடும்பத்துடன் தங்கி செல்லும் வகையில், 20 ஏக்கரில் 'தீம்' பார்க் உள்ளிட்ட வசதிகளுடன் திட்டம் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மதுரையில் அமைவதுதான் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

'தஞ்சையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதல்வர் பழனிச்சாமி மனு அளித்தாரே' என அமைச்சரிடம் கேட்டபோது, ''அதற்கு வாய்ப்பு இல்லை; அப்படி கொடுத்தாரா என தெரியவில்லை. மதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என முதல்வரிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன்,'' என்றார்.

தொடர்ந்து போராடுவேன்!

மதுரை எம்.பி.,யாக' என்ன செய்தீர்கள் என, கோபாலகிருஷ்ணன் எம்.பி.,யிடம் (அ.தி.மு.க.,-ஓ.பி.எஸ்.,) கேட்ட போது கூறியதாவது:விரைவில் மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து, 'மதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும்' என வலியுறுத்த உள்ளேன். தஞ்சாவூரில் இடவசதி இல்லை. நான்கு வழிச்சாலை, விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால், மதுரையில் அமைவதுதான் பொருத்தமாக இருக்கும்.

மதுரையில்தான் அமைய வேண்டும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது மன்னார்குடி கும்பலை திருப்தி படுத்தும் வகையில், 'தஞ்சையில் அமைக்க வேண்டும்' என முதல்வர் பழனிசாமி கேட்கிறார். மதுரையில் அமைய வேண்டும் என அனைத்து தரப்பினருடன் சேர்ந்து போராடி வருகிறேன். ஜூன் 15ல் சென்னையில், எய்ம்ஸ் போராட்ட குழு நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்க உள்ளேன்.இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

Driverless metro to begin trials at Madhavaram by '28

Driverless metro to begin trials at Madhavaram by '28  24.12.2024 Chennai : Chennai Metro Rail Limited (CMRL) will begin testing its fir...