Saturday, June 10, 2017

புதுகையில் புதிய மருத்துவ கல்லூரி திறப்பு : 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி!

பதிவு செய்த நாள்10ஜூன்2017 00:03




புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவக் கல்லுாரியை, முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக, புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் உள்ள, கால்நடைப் பண்ணை வளாகத்தில், 127 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, 231 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. நடப்பு கல்வியாண்டு முதல், புதிய மருத்துவக் கல்லுாரி செயல்பட, இந்திய மருத்துவக் கவுன்சிலும் அனுமதி அளித்து, 150 மாணவர்கள் சேர்க்கைக்கும் அனுமதி அளித்துள்ளது. கட்டடப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று புதிய கல்லுாரி திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்று, கல்லுாரிக் கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது: புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டபடி நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், பொதுப்பணித் துறையால் மணல் குவாரிகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார். மொத்தம், 84 ஆயிரம் சதுர அடியில் கல்லுாரி, 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, குடியிருப்பு என மூன்று பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது.

விரைவில் முடிவு : விழாவுக்கு பின், நிருபர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ''மாட்டிறைச்சி விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் தெரிவிக்கப்படும். தமிழக அரசு நிலையாகவும், வலிமையாகவும் உள்ளது. 'நீட்' தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்து, பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.

கைது : புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி திறப்பு விழாவில், பங்கேற்க தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,க்களான புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன் ஆகியோருக்கு கடைசி நேரத்தில் மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது. இதையடுத்து, நேற்று காலை விழாவுக்கு செல்ல, மூன்று எம்.எல்.ஏ.,க்களும் தங்களின் ஆதரவாளர்களுடன் புதுக்கோட்டை, தி.மு.க., கட்சி அலுவலகத்தில் கூடினர். அங்கு வந்த போலீசார், எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆதரவாளர்களை அழைத்து வரக்கூடாது என்று கூறினர். இதனால், ஆத்திரம் அடைந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களும், அங்கேயே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD TIMES NEWS NETWORK  24.12.2024  Chennai : The weather system ov...